Wednesday, September 23, 2015

On Wednesday, September 23, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் எதிர்வரும் 26.9.2015 அன்று முதல் தொடங்கி தொடர்ந்து 45 நாட்கள் அரசு பொருட்காட்சி நடைபெற உள்ளது.
இப்பொருட்காட்சியில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, மாவட்ட தொழில் மையம், மாநகராட்சி, உள்ளிட்ட 26 அரசு துறைகள் கடந்த 4 ஆண்டுகளில் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சாதனைகள், குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ள அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இவைமட்டுமன்றி, அம்மா சிமெண்ட், தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட 6 அரசுத்துறை பொது நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் இடம் பெறுகின்றன.
மேலும், தனியார் கடைகள், உணவு கூடங்கள், ராட்டினங்கள், தாஜ்மகால் மாதிரி அமைப்பு மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளது. இவற்றிற்கான கட்டுமானம் மற்றும் விளம்பர பதாதைகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் இன்று (23.9.2015) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரங்குகளில் அமைக்கப்படும் கண்காட்சி அமைப்புகளை எதிர்வரும் 25.9.2015 அன்று மாலைக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 26.9.2015 அன்று நடைபெற உள்ள தொடக்க விழாவில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலும், அரசு பொருட்காட்சிக்கு வருகை தரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) திரு.வே.ஜெயக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: