Monday, January 04, 2016

On Monday, January 04, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சியை சேர்ந்தவர் செல்வா (வயது 38). இவர் ஏரலில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜபதியை சேர்ந்த சீதா (36) என்பவருக்கும் கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கொங்கராயக்குறிச்சியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குரும்பூரை அடுத்த சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் ஒரு வாடகை வீட்டிற்கு செல்வா, தனது மனைவி சீதாவுடன் குடிவந்தார். அவர்கள் தங்கள் குழந்தைகள் இருவரையும் கொங்கராயக்குறிச்சியில் உள்ள செல்வாவின் பெற்றோரிடம் விட்டு விட்டு வந்தனர். சீதா வீட்டில் இருந்தபடியே தையல் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்– மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் அவர்கள் சண்டை போட்டுள்ளனர். இன்று அதிகாலையில் செல்வா வீட்டிற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்து விட்டு உடனே திரும்பி சென்றது.
இதனால் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டினுள் கட்டிலில் சீதா பிணமாக கிடந்தார். அவர் அருகில் தலையணை ஒன்று கிடந்தது. சீதா உடலில் காயங்கள் ஏதும் இல்லை. வீட்டில் இருந்து செல்வா தலைமறைவாகி இருந்தார். இதையடுத்து அவர்கள் குரும்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குரும்பூர் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதிகாலை நேரத்தில் செல்வாவிற்கும், சீதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அப்போது செல்வா தலையணையால் சீதாவின் முகத்தில் அமுக்கி உள்ளார். இதில் சீதா மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக செல்வா ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.
ஆம்புலன்ஸ் வந்தபோது சீதா இறந்து விட்டார். இதனால் ஆம்புலன்ஸ் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளது. அந்த நேரத்தில் செல்வா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய செல்வாவை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். செல்வா தன் மனைவியை ஏன் கொலை செய்தார் என்பது தெரியவில்லை. மனைவிக்கும் அவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததால் அதனாலேயே கொலை நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் செல்வா போலீசில் சிக்கினால் தான் இந்த கொலை குறித்த முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

0 comments: