Monday, January 04, 2016

On Monday, January 04, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் நடந்த தி.மு.க. பொது கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமை வகித்தார். பகுதி கழக செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–
45 ஆண்டுகளாக வரலாற்றில் தனிநபர் மசோதா மூலம் திருநங்கைகளுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் கொடுத்த பெருமை தி.மு.க.விற்கு உண்டு. குறைந்த உறுப்பினர்கள் இருந்த போதும் உறுதியான முடிவால் 120 கோடி ஜனத்தொகையுள்ள நாட்டில் நிறைவேற்றப்படாமல் இருந்த திருநங்கைகள் கோரிக்கையை நாங்கள் கொடுத்துள்ளோம். பதவியில் இல்லாவிட்டாலும் உங்களுக்காக உழைக்கும் தலைவரை கொண்ட கட்சிக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.
காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது ரெயில்வே கேட் முடப்பட்டிருந்தது. காமராஜர் காரில் ஓரமாக அமர்ந்திருந்தார். அப்போது சிறுவர்கள் காரை தட்டி விளையாடி கொண்டிருந்தனர். இதை கவனித்த காமராஜர் ஏனப்பா நீ பள்ளிக்கு செல்லவில்லையா? என்று கேட்ட போது பள்ளிக்கு சென்றால் சாப்பாடு யார் தருவார். மாடு மேய்த்தால் ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும் என்று சிறுவர்கள் சொன்னதை நினைவில் வைத்து கொண்டு மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்தி பல பட்டதாரிகளை உருவாக்கினார். பின்னர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். அத்திட்டத்தை தொடர்ந்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல் பேசுகையில், ‘மக்கள் நலக் கூட்டணி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அ.தி.மு.க.விற்கு ஆதரவாக ஜெயலலிதா முதல்வராக வைகோ செயல்படுகிறார். அதை முறியடிக்கும் வகையில் தலைவர் தளபதி வழியில் பெரியசாமியின் துணையோடு வெற்றி பெறுவோம்’ என்றார்.
மாநில மகளிர் அணி துணைச்செயலாளர் கீதாஜீவன் பேசுகையில், ‘தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய திட்டத்தை தவிர தூத்துக்குடியில் எந்த திட்டமும் நிறைவேறவில்லை. அமைச்சர், எம்.பி, மேயர், எம்.எல்.ஏ. என அனைவரும் ஆளும் கட்சியாக இருந்தும் அனைத்தும் காட்சி பொருளாகவே இருந்து வருகின்றன. இதற்கு வரும் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும்’ என்றார்.
மாவட்ட செயலாளர் பெரியசாமி பேசுகையில், ‘எல்லோரும் பலன் அடைய வேண்டும் என்றால் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுபட்டு ஆறு தொகுதிகளிலும் வெற்றி கனியை பறிப்போம்’ என்றார்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், செயற்குழு உறுப்பினர் திருச்சிற்றம்பலம், இளைஞர் அணி செயலாளர் பூபதி, துணைச் செயலாளர் மதியழகன், அம்பாசங்கர், மாணவரணி அமைப்பாளர் ஜான் அலெக்ஸாண்டர், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், கவுன்சிலர்கள் ரவீந்திரன், கலைச்செல்வி, ஜெயசிங், வட்ட செயலாளர்கள் மகேந்திரன், கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: