Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
கோவை,செப்.16-
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கிழக்கு மண்டல பகுதியில் சந்தையில் அமைச்சர் மோகன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைதேர்தல் வருகின்ற 18 ம் தேதி நடைபெற உள்ளது. மேயர் பதவிக்கு அண்ணா தி.மு.க.சார்பில் கணபதி ப.ராஜ்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கோவை மாநகராட்சி யில் உள்ள 100 வார்டுகளிலும் தமிழக அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 57வது வார்டு, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து பகுதியிலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான ப.மோகன் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சிங்கை என்.முத்து, பகுதி செயலாளர் சிங்கை ரங்கநாதன், 57வது வார்டு கவுன்சிலரும், தொகுதி செயலாளருமான மாரப்பன், வட்டார செயலாளர் ஆர்.வடிவேல்,மற்றும் அண்ணா தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களிடமும்  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பின்னர் மசக்காளிபாளையம் ரவுண்டாணா அருகில் சந்தையில் அமைச்சர் மோகன் பெண்களிடம்  3 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அமைச்சருடன் மகளிர் அணி பகுதி இணை செயலாளர் குமுதவல்லி, பேரவை செயலாளர் ராஜேந்திரன், வட்டார அவைத்தலைவர் பன்னீர் செல்வம், பெரியார் ராமசாமி, பார்த்திபன்,சௌந்தரராஜன்,தாஸ், எம்.கே.பி.செல்வராஜ்,சேகர், பழனிசாமி, திண்டிவனம் எம்.எல்.ஏ.ஹரிதாஸ், விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பி.தங்கபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் செல்லமுத்து, வார்டு பொறுப்பாளர்கள் ரஜினி குணசேகரன், முருகானந்தம், குமரேசன், பால்ராஜ், திருநாவுகரசு, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பாக்கியலட்சுமி, கௌரி ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.


On Tuesday, September 16, 2014 by farook press in ,    
சூலூர்.செப்.16-
இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக அண்ணா தி.மு.க.நிர்வாகிகளும்,கூட்டணிக்கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரம் செய்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியம், இருகூர் பேரூராட்சி மன்ற இடைத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் டி.பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் சூலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் நிலவள வங்கி சங்க தலைவர் என்.சி.குட்டியப்பன், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் ஏ.சி.மகாலிங்கம், சூலூர் அங்கமுத்து உள்ளிட்ட அண்ணா தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேட்பாளர் பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் அண்ணா தி.மு.க.கூட்டணி கட்சியான தமிழ் மாநில பார்வர்டு பிளாக் கட்சி பொறுப்பாளர் கதிரவன் எம்.எல்.ஏ., இருகூர் சுங்கம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:​- 


தமிழக முதல்வர் ஜெயலலிதா அடித்தட்டு மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக நல்ல பல திட்டங்களை அளித்து வருகிறார்.எங்களை போன்ற எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் காலையில் வைக்கும் கோரிக்கைகளை மாலையில் 110 விதியின் கீழ் திட்டங்களாக அறிவித்து வருகிறார். இந்தியாவில் உள்ள 32 மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை கொண்டு செல்லும் வகையில் விஷன் 2023 ஐ உருவாக்கியுள்ளார்.அவரது வாழ்நாளில் தமிழக மக்கள் யாரும் கையேந்தும் நிலைக்கு விடமாட்டேன் என சூளுரைத்து மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் வகையில் அள்ளும் பகலும் அவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார்.அவரது ஆசி பெற்ற வேட்பாளராக போட்டியிடும் பத்மசுந்தரி துரைசாமி நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்.முதல்வரின் திட்டங்களை முன் நின்று செயல்படுத்துபவர்.அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கதிரவன் எம்.எல்.ஏ.பேசினார்.
கூட்டத்தில் வாகரம்பாளையம் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன், இருகூர் துரைசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ரங்கநாதன், கருப்புசாமி, சக்திவேல், பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் மாவட்டசெயலாளர் கர்ணன். அம்மா பேரவை தலைவர் ராமசாமி உளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இருகூர் 18வது வார்டு பொறுப்பாளர் கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் ஏ.சி.மகாலிங்கம் தலைமையில் கருமத்தம்பட்டி பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் அட்ஷயா செந்தில், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், கவுன்சிலர்கள்  ராஜேந்திரன், எஸ்.கே.மணி, வசந்தி ஆறுமுகம், மார்டின்,பொருளாளர் ஜோசப்,செல்லமுத்து, ராயர்பாளையம் சுரேஷ் உள்ளிட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் வீதி, வீதியாக சென்று 3 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 
இருகூர் பேரூராட்சி மன்ற 5வது வார்டு பொறுப்பாளர் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் வி.கே.சண்முகம் தலைமையில் சூலூர் அங்கமுத்து, இருகூர் நகர செயலாளர் துரைசாமி, ஜல்லிப்பட்டி ராமசாமி, பாபு என்கிற ஜெயச்சந்திரன், கவுன்சிலர் பிரகாஷ், பள்ளபாளையம் பேரூராட்சி கழக செயலாளர் பேச்சிமுத்து உள்பட பலர் காமாட்சிபுரம் 5வது வார்டு, மெயின் ரோடு, குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வீடு,வீடாக சென்று ஜெயலலிதாவின் சாதனைகளை பெண்களிடம் விளக்கி கூறி  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 
இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளர் மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட இலக்கிய அணி செயலாளரும்,சுல்தான்பேட்டை ஒன்றிய துணைத் தலைவருமான வ.மா.பழனிசாமி தலைமையில், 8 மற்றும் 9 வது வார்டுகளில் உள்ள இருகூர் டவுன், கண்ணன் நகர் முத்துராமலிங்கம் வீதி, சாமியான்மேடை, ஒண்டிபுதூர் ரோடு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் உமா மகேஸ்வரி, சுல்தான்பேட்டை ஒன்றிய பாசறை செயயலாளர் மகேஸ்வரன், பூராண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம், சுல்தான்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், அமலோற்பவமேரி, கண்ணம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ரங்கநாதன், செஞ்சேரி தங்கவேல், வேலாயுதம், சின்னகுயிலி துரைசாமி, கிளை செயலாளர் சுந்தர்ராஜ்,சுல்தான்பேட்டை ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் மணிமாலா, அமிர்தம், இருகூர் பகுதி கிளை நிர்வாகிகள் பூபால் செல்வம், ஜெகநாதன், வெற்றிவேல்,நாகராஜ், குமார், பிளம்பர் ஈஸ்வரன், உச்சா செல்வராஜ் ஆகியோர் வீடு,வீடாக சென்று  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.




On Tuesday, September 16, 2014 by farook press in ,    
ரூ.5 லட்சம் கடனுக்கு, ரூ.57 லட்சம் கேட்டு எவர்சில்வர் பாத்திர கம்பெனி அதிபரிடம் தொல்லை கொடுத்த பிரபல கந்துவட்டி மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சண்முகம்

சென்னை காரப்பாக்கம், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சொந்தமாக எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனி வளர்ச்சிக்காக, இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். சென்னை புரசைவாக்கம், கரியப்பா தெருவில் வசிக்கும் காமராஜ் (வயது 39) என்ற துணிக்கடை அதிபர், இந்த கடன் தொகையை கொடுத்துள்ளார். இவர் சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை வைத்துள்ளார்.

சண்முகம் தான் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியபிறகும், காமராஜ், வட்டிக்கு வட்டி கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கோர்ட்டிலும் வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

கந்துவட்டி புகார்

இதனால், சண்முகத்தின் மகன் டில்லிராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமராஜ் மீது புகார் கொடுத்தார். புகாரில் அவர் கூறியதாவது:-

எனது தந்தை சண்முகம் தான் வாங்கிய ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.30 லட்சத்து 25 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பிறகும், எனது தந்தை கடனுக்காக கொடுத்த சொத்து ஆவணங்களை காமராஜ் திருப்பி தர மறுக்கிறார். ஏற்கனவே பெற்ற ரூ.30.25 லட்சம் போக,மேலும் ரூ.27 லட்சம் கேட்டு, மிரட்டுகிறார். அவர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தந்தை கொடுத்த சொத்து ஆவணங்களை திருப்பி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காமராஜ் கைது

இந்த புகார் மனு மீது கந்து வட்டி தடுப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கந்துவட்டிக்காரர் காமராஜ் நேற்று கைது செய்யப்பட்டார். அவரால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை கந்து வட்டி மன்னர், என்றே போலீசார் வர்ணித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டுள்ள காமராஜின் குடும்பத்தினர், வேலூர் மாவட்டம், ஆம்பூரில் வாழ்கிறார்கள். காமராஜ் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தைரியமாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைபாதை கடைகள் வைப்பதற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வணிக வளாகம்

சென்னை பாண்டிபஜாரில் நடைபாதை வியாபாரிகளுக்கென மாநகராட்சி வணிக வளாகம் கட்டிக்கொடுத்துள்ளது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 629 கடைகள் உள்ளன. வணிக வளாக கட்டிடத்தில் தரை தளத்தில் உள்ள கடைகளில் மட்டும் வியாபாரம் நடைபெறுகிறது.

1 மற்றும் 2-வது தளங்களில் உள்ள கடைகளுக்கு குறைவான வாடிக்கையாளர்கள் செல்வதால் போதுமான வியாபாரம் நடைபெறுவதில்லை. இதனால் வியாபாரிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், தியாகராயநகர் பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி இடத்தில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

இந்தநிலையில் நேற்று நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகத்தில் விற்பனை பாதித்த கடை உரிமையாளர்கள் 279 பேர் விழாக்காலத்தையொட்டி தற்காலிகமாக நடைபாதைகளில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கள் கடைகளை பூட்டிவிட்டு திரண்டு செல்ல முயன்றனர். தகவல் அறிந்த பாண்டிபஜார் போலீசார் அவர்களை வணிக வளாகத்தில் இருந்து வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து நடைபாதையில் பொருட்கள் விற்பனை செய்ய முயன்ற கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து வியாபாரிகள் மீண்டும் தங்களது கடைகளை திறந்தனர்.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
டிப்ளமோ நர்சிங் கவுன்சிலிங்’ சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது.

கலந்தாய்வு தொடங்கியது

தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர்கள் கல்லூரிகளில் உள்ளன. இந்த கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக 8 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் சென்னையில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.

தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு 3 கட்டங்களாக நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய முதல் கட்ட கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. இதில் 14 மாற்றுத்திறனாளிகள், 3 விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் 35 பேர் என மொத்தம் 52 பேர் கலந்து கொண்டனர்.

பின்னர் காலை 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு நடந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் 793 பேர் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் நேற்று நடந்த முதல் நாள் கலந்தாய்வில் 845 பேர் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதமும் உடனே வழங்கப்பட்டது.

18-ந்தேதி வரை நடக்கிறது

கலந்தாய்வு முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வு 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. இன்று முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கலந்தாய்வில், மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளை தேர்வு செய்து வருகின்றனர்.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் கருணாநிதி பேசினார்.

தி.மு.க. முப்பெரும் விழா

தந்தை பெரியாரின் பிறந்தநாள், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தி.மு.க.வின் பிறந்தநாள் என 3 விழாக்களையும் சேர்த்து, முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, மேல்நிலைப்பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சான்றிதழ், பணமுடிப்பு மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

விருதுகள்

மேலும், பெங்களூரைச் சேர்ந்த வி.டி.சண்முகத்திற்கு பெரியார் விருதையும், முனவர் ஜானுக்கு அண்ணா விருதையும், புதுக்கோட்டை விஜயாவுக்கு பாவேந்தர் விருதையும், நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருதையும் அவர் வழங்கினார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். விழாவில், விருது மற்றும் பரிசுகளை வழங்கி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-

எல்லோரும் பாடுபடவேண்டும்

இங்கு விருதுபெற்றவர்களை வாழ்த்தும்போது, இந்த இயக்கத்துக்காக உழைத்தவர்கள் என்று மக்களுக்கு காட்டி, இன்னும் பலர் இதுபோல் உருவாகவேண்டும் என வழங்கப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இங்கு பேசும்போது, இந்த இயக்கத்தை வழிநடத்த எல்லோரும் தொடர்ந்து பாடுபடவேண்டும் என்றார்.

சமீபகாலமாக நம்முடைய கூட்டங்களில் நீண்டநேரம் பேசும் சூழ்நிலை எனக்கு இல்லை. அதற்கு உடல்நலம் இடம்தரவில்லை. ஆனாலும், உடல்நலத்துடன் போட்டிப்போட்டுக்கொண்டு முடிந்தவரை பேசி வருகிறேன். நாட்டு மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்படவேண்டுமென்று தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், நாம் உணர்ச்சி மூட்டியதால் மக்கள் எழுச்சிபெற்றார்களா? என்று பார்த்தால், அதற்கு சரியான பதில் கிடைக்காத நிலையில், இந்த முப்பெரும் விழாவை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்றால், மனதிற்கு சங்கடமாக இருக்கிறது.

இளைஞர்கள் உழைக்கவேண்டும்

அரும்பாடுபட்டு பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்றோர் உழைத்து உருக்குலைந்துபோன மக்களை காப்பாற்ற கூறியது எந்தளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது?. சமுதாயத்தில் மக்களை தட்டிஎழுப்ப நாம் உழைத்த உழைப்பும் பயன்பட்டதா? என்று எண்ணிப்பார்க்கும்போது, பெருமைக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. சாதியின் பெயரால் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்ற நிலையை உருவாக்க இந்த இயக்கம் பாடுபட்டு வருகிறது.

ஆனாலும், சாதிப்பேய் பிடித்து ஆட்டிக்கொண்டுதான் இருக்கிறது. தீண்டத்தகாதவர்கள் என்று இன்னும் கூறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். எனவே, இன்னமும் நாங்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறோம். சமுதாயத்துக்காக எங்கள் உழைப்பு போதாது. எனவே, எங்கள் உழைப்பை தொடர்ந்து, இளைஞர்கள் உழைக்கவேண்டும். அப்போதுதான் இந்த நாடு வாழமுடியும்.

பணநாயகம்...

தி.மு.க. இங்கு முப்பெரும் விழா கொண்டாடிக்கொண்டிருக்கிற நேரத்தில், நீங்கள் எல்லோரும் சூளுரை ஒன்றை ஏற்கவேண்டும். தமிழர்களாக வாழ்வோம், தமிழ்மொழியை காப்போம் என்ற சூளுரையை ஏற்கவேண்டும்.

இந்த கழகத்தை நீங்கள் எல்லோரும் வெற்றிபெற செய்யவேண்டும். அப்படியென்றால், நான் இந்த இடத்தில் தேர்தலை குறிப்பிடவில்லை. தேர்தலில் எப்படியும் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது. ஜனநாயகம் தோற்று, பணநாயகம் வெல்லும் காலம் நிலவுகிறது. எனவே, ஜனநாயகத்தை காக்க, பணநாயகத்தை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும். அனைவரும் தமிழ்வளர்ப்போம் வாருங்கள்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன், ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, பூங்கோதை, முன்னாள் எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.
On Tuesday, September 16, 2014 by farook press in ,    
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமான காற்று வீசியது.

இந்தநிலையில் நேற்று இரவு 9.10 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. புரசைவாக்கம், வேப்பேரி, வில்லிவாக்கம், பெரம்பூர், திருவான்மியூர், அடையார், மைலாப்பூர், தாம்பரம் உள்பட பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது.

மரக்கிளைகள் முறிந்தன

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றும் வீசத்தொடங்கியது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த திடீர் மழையால் நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. காஞ்சீபுரத்தில் நேற்று இரவு 7.40 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 2 மணிநேரத்துக்கு மேல் நீடித்தது. இதனால் நகரின் முக்கிய வீதியான மூங்கில் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் திருத்தணியில் உள்ள ம.பொ.சி. சாலை, காந்தி ரோடு, கந்தசாமி தெரு, கீழ் பஜார் தெரு உள்பட பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஆறுபோல் ஓடியது. பல இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.

ஹஜ்பயண முதல் விமானம்

உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,015 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 226 பெண்கள் உள்பட 450 பேர் சென்றனர்.

புனித ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரகீம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபூபக்கர் ஆகியோர் சால்வைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதில் தமிழக அரசு செயலாளர்கள் முகமது நஜிமுத்தீன், அருள்மொழி, காயிதே மில்லத் விழாக்குழுத்தலைவர் வீரை கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

7 விமானங்கள்

புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை விமானநிலையத்தில் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

4-வது நுழைவு வாயில் ஹஜ் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான நிலைய ஆணையகம், விமான நிலைய போலீசார், சுங்க இலாகா, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, குடியுரிமை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தனியாக கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சருக்கு நன்றி

புனித ஹஜ் பயணம் சிறப்பாக அமைய முதல்-அமைச்சர் சார்பில் வழியனுப்ப வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஹஜ் பயணிகளுக்காக முதல்-அமைச்சர் ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளார். ஹஜ் பயணிகளின் பயணம் சிரமம் இன்றி இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உணவு வசதி

இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர் கூறும்போது, ‘தமிழகத்தில் இஸ்லாமிய மக்கள் புனித ஹஜ் பயணத்திற்கு செல்ல தகுந்த உதவிகளை செய்து தந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய-மாநில அரசின் உதவியுடன் இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் முதல்முறையாக புனித ஹஜ் பயணிகள் மதினாவில் தங்கும் 8 நாட்கள் 3 வேளையும் உணவுகள் வழங்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் இந்த பணி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து செல்லும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கும் உணவு வழங்கப்பட உள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தே.மு.தி.க.வின் 10-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுலைமான், ஒன்றிய செயலாளர்கள் கோலார்பட்டி பாலு, நித்தியானந்த சரவணன், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கேப்டன் மன்ற செயலாளர் சையது காஜாசெரிப் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் கோல்டுகுமார், தே.மு.தி.க. நிர்வாகிகள் ஜெகன், கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.