Sunday, September 21, 2014
அரண்மனை படத்தின் போஸ்டர்
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'அரண்மனை' படத்துக்கு தடை கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'அரண்மனை'. விஷன் ஐ மீடியா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து வெளியிட்டு இருக்கிறது.
இம்மாதம் 19-ம் தேதி வெளியாகி இருக்கும் இப்படத்துக்கு தடை கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில் இயக்குநர் எம்.முத்துராமன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இயக்குநர் எம்.முத்துராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்து வருகிறேன். இதுவரை 27 திரைப்படங்களை தயாரித்தும், 26 படங்களை வெளியிட்டும் இருக்கிறேன். இதில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
கடந்த 1978-ஆம் ஆண்டு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகுமார், ஸ்ரீதேவி, லதா ஆகியோர் நடித்த 'ஆயிரம் ஜென்மங்கள்' என்ற படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்தப் படம் அந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க திட்டமிட்டேன். 'ஆயிரம் ஜென்மங்கள்' பாகம் 2 என்ற தலைப்பில் மீண்டும் தயாரிக்க முடிவு செய்து செல்வா என்ற செல்வகுமாரை இயக்குநராக தேர்வு செய்தேன். முன்தொகையாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளேன். மேலும், வேறு சில தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பணம் கொடுத்துள்ளேன்.
இந்நிலையில், சினிமா துறையை சேர்ந்த எடிட்டர்கள், மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் பிறர் மூலம் 'அரண்மனை' என்ற பெயரில் வெளியாகியுள்ள படம் 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் கதையை ரீமேக் செய்து தயாரிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தகவல் தெரியவந்தது.
இந்தப் படத்தை 'விஷன் ஐ மீடியா' என்ற நிறுவனம் தயாரித்து, சுந்தர்.சி இயக்கியுள்ளார். 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தை அவர்கள் மீண்டும் வேறு பெயரில் எடுத்துள்ளது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் கடந்த 1-ஆம் தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, 'அரண்மனை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உத்தவ் தாக்கரே | படம்: பிடிஐ
மகாராஷ்டிர தேர்தல் கூட்டணியில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், 'சிவசேனாவுக்கு 151 இடங்கள்; பாஜகவுக்கு 119 இடங்கள்' என புது கூட்டணி கணக்கு ஒன்றை உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.
பாஜக, சிவசேனா கட்சிகளிடையே கடந்த சில நாட்களாக தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரிக்கவே வகை செய்யப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடலாம், எஞ்சிய 18 தொகுதிகளை சிறிய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என்று பாஜக கூறி வருகிறது. இதனை ஏற்க மறுத்துள்ள சிவசேனா, 155 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம் என்று தெரிவித்து வந்தது.
இந்த நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை புது கூட்டணி கணக்கு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி, சிவசேனாவுக்கு 151 இடங்கள்; பாஜகவுக்கு 119 இடங்கள் (2009-ல் வழங்கப்பட்ட எண்ணிக்கை) மற்றும் இதர கட்சிகளுக்கு 19 இடங்கள் ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதுவே தமது இறுதி முடிவு என்று பாஜகவுக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.
இம்முறை தொகுதிப் பங்கீட்டில் கடுமையான சிக்கல் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ள உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர மாநில நலனைக் கருத்தில்கொண்டே இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குஜராத் கலவரத்துக்குப் பின், நரேந்திர மோடிக்கு மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே அதரவு அளித்ததை உத்தவ் நினைவுகூர்ந்துள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவர் வினோத் தவ்டே கூறியபோது, சிவசேனாவுடனான கூட்டணி தொடரவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அந்தக் கட்சியின் தொகுதிப் பங்கீட்டை ஏற்க முடியாது என்று தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வரும் நிலையில், நேற்றுமுன்தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, மகாராஷ்டிர மாநில பாஜக பொறுப்பாளர் ஓ.பி.மாத் தூரை சந்தித்துப் பேசினார். நேற்றும் இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியவாத காங்கிரஸ் கெடு
இதனிடையே, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையிலும் கூட்டணிச் சிக்கல் நீடித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டிலும் குழப்பம் நீடிக்கிறது.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸுக்கு 124 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் முன்வந்துள்ளது. இதனை தேசியவாத காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்டது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் கூறும்போது, "50:50 என்ற அடிப்படையில் தொகுதிப் பங்கீடு அமைய வேண்டும் என்பதை காங்கிரஸிடம் பலமுறை தெரியப்படுத்தி விட்டோம். ஆனால் அந்தக் கட்சி தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்னும் 2 நாள்களில் காங்கிரஸ் முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவன் அசுவத்தாமன் குடும்பத்தினருடன் நடிகர் சிம்பு
"என் மகன் அசுவத்தாமன் தற்போது நன்றாக இருக்கிறான் என்றால், அதற்கு காரணம் சிம்பு சார்தான்" என்று திருவண்ணாமலையைச் சேர்ந்த சண்முகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள ஒரு சிறுவனின் மருத்துவச் செலவை நடிகர் சிம்பு ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது அச்சிறுவன் நன்றாக இருப்பதாக தகவல்கள், புகைப்படத்தோடு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.
இதை உறுதி செய்யும் விதமாக, சிம்புவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வந்த ஒரு நிலைத்தகவலை ரீ-ட்விட் செய்தார். சிம்புவின் இந்த நல்லெண்ண நடவடிக்கை, அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
உண்மையில் என்ன தான் நடந்தது, என்பதை அறிய அசுவத்தாமனின் தந்தை சண்முகத்தினைத் தொடர்பு கொண்டு பேசினேன். தனது மகனுக்கு சிம்பு செய்த உதவியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
"எனது பெயர் சண்முகம். திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறேன். எனது மகன் அசுவத்தாமனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தோள்பட்டையில் பயங்கர வலி ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். ஆனால், வலி குறையவில்லை என்றவுடன் திருவண்ணாமலையில் பெரிய மருத்துவமனையை அணுகினோம்.
சிறுவயதில் விளையாடும் போது கீழே விழுந்ததில், நோய்த்தொற்று ஏற்பட்டு ரத்தம், நுரையீரல் மற்றும் எலும்பு ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அதிர்ச்சியளித்தார்கள். உடனே சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் என்றவுடன் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தோம்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள இலவச பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தோம். நுரையீரல் பாதிப்பு இருந்தாலும், செயற்கை சுவாசம் கொடுத்தாக வேண்டும் என்று கூறி, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்றார்கள். ஒரு நாளைக்கு ரூ.25,000 ஆகும் என்றவுடன், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள்தான் பண உதவிகள் செய்து வந்தார்கள். ஆனால், பணம் அதிகம் தேவைப்பட்டது.
எனக்கு திருவண்ணாமலை கோயிலுக்கு வரும்போது நடிகர் சிம்புவோடு பரிச்சயம் ஏற்பட்டது. அவருடைய நண்பர் தீபனுக்கு இரவு 11:30 மணிக்கு போன் செய்து எனது மகன் பற்றிய விவரங்களை கூறினேன். 12:30 மணிக்கு என்னை சிம்பு அழைத்தார். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நானே மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். மிகவும் சந்தோஷப்பட்டேன்.
சிம்புவே ராமச்சந்திரா மருத்துவமனையில் தெரிந்த மருத்துவர்களுக்கு போன்செய்து, அவரே பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். இப்போது சிகிச்சை முடிந்து, எனது மகன் நன்றாக இருக்கிறான். அவனை பார்க்கும்போது எல்லாம் சிம்பு செய்த உதவி தான் ஞாபகம் வருகிறது. இன்றைக்கு எனது மகன் நன்றாக இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிம்பு சார் தான்.
சந்தானம் சாரும் கொஞ்சம் உதவிகள் செய்தார். எனது மகனுக்கு அதிகமான உதவிகள் செய்தது சிம்பு சார் தான். அவருக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் எல்லாம் சொல்லிவிட முடியாது.
மருத்துமனையில் இருந்து சிம்பு சாரைப் பார்க்க எனது மகனை அழைத்து சென்றேன். அப்போது எனது மகனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார். குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், வேறு ஏதாவது உதவி என்றால் தயங்காமல் கேளுங்கள் என்றார். அவர் பேசியவுடன் கண்கள் குளமாக நின்றுக் கொண்டிருந்தேன்" என்றார்.
நளினி சிதம்பரம் | கோப்புப் படம்
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
சென்னையில் சனிக்கிழமை மாலை நளினி சிதம்பரம் விசாரிக்கப்பட்டதாக, சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது சிறையில் உள்ள சாரதா நிதி நிறுவன தலைவர் சுதிப்த சென் அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நளினி சிதம்பரத்தை சிபிஐ விசாரித்திருப்பதாக தெரிகிறது.
மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவனத்தை சுதீப்த சென் 2006-ல் தொடங்கினார். முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று மக்களிடம் கூறி, கிட்டத்தட்ட ரூ. 6,000 கோடியைத் திரட்டியது அந்நிறுவனம்.
சுற்றுலாப் போக்குவரத்து, ஹோட்டல் தொழில், திரைப்படத் துறையில் முதலீடு, தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், ரியல் எஸ்டேட் வியாபாரம், மோட்டார் சைக்கிள் உற்பத்தி, அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு என்று சாரதா பிரம்மாண்டம் காட்டியது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான சதாப்தி ராய், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, குனால் கோஷ் போன்றோர் அதன் 'பிராண்ட் அம்பாசடர்'களாகச் செயல்பட்டார்கள். இவையெல்லாம் மக்களை இந்த நிறுவனத்தின்பால் மேலும் மேலும் ஈர்த்தன.
இந்திய முதலீட்டுச் சட்டப்படி, 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து முதலீடு திரட்ட 'செபி' அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். 2009-ல் 'செபி' நோட்டீஸ் அனுப்பியதும், புதிதாக 200 நிறுவனங்களை உருவாக்கி, முதலீட்டாளர்களை அவற்றில் பிரித்துப் பதிவு செய்து, 'செபி'யின் முயற்சியை முறியடித்தது அந்நிறுவனம். முதலீட்டாளர்களுக்கு வட்டியும் அசலும் தரப்படவில்லை. ஒருநாள் விஷயம் வெடித்து முறைகேடு வெளியே வந்தது.
சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டபோது, மேற்கு வங்கக் காவல் துறை விசாரித்தால் போதும் என்ற முதல்வர் மம்தா பானர்ஜி, நீதிபதி சியாமள சென் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தார். ஊழலை வெளிக்கொணர்வதைவிட, மறைக்கவே மாநில அரசு முயல்கிறது என்று முதலீட்டாளர்கள் சந்தேகப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் உதவி நாடப்பட்டது. அதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
சாரதாவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டியுள்ளனர். அவர்களில் 83% பேர் ரூ.10,000-க்கும் குறைவாகச் செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நளினி சிதம்பரம்...
சாரதா நிதி நிறுவனத் தலைவர் சுதிப்த சென், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் விவகாரம் தொடர்பாக சிபிஐ-க்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள் பலர் தன்னிடம் இருந்து மிரட்டி பணத்தைப் பறித்துக் கொண்டு, பிரச்னைகள் ஏற்பட்டால் என்னைக் காப்பதாக உறுதியளித்தனர்' என்று தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு டிவி சேனலை கையக்கப்படுத்தும் ஒப்பந்தத்தில் நளினி சிதம்பரம் சட்ட ஆலோசகராக பங்கு வகித்ததாகவும், அதற்காக அவருக்கு ரூ.1 கோடியை கட்டணமாக செலுத்தியதாகவும் அந்தக் கடிதத்தில் சுகிப்த சென் குறிப்பிட்டுள்ளதுதான் சிபிஐ-யின் விசாரிப்புக்கு காரணம்.
சிபிஐ விசாரணை குறித்து கருத்து கேட்க, பிடிஐ செய்தி நிறுவனம் அவரைத் தொடர்புகொண்டபோது, அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
அதேவேளையில், ஓர் ஆண்டு முழுவதும் சட்ட உதவிகள் செய்ததற்கு ரூ.1 கோடி கட்டணமாக பெறப்பட்டது என்றும், அது வெளிப்படையான விஷயம் என்றும் நளினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால
த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
(குப்லாய் கான்)
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.
|
கோவை பீளமேட்டில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு விமானங்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் கோவை விமான நிலையத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் கேட்பாராற்று ஒரு மர்ம பேக் நீண்ட நேரமாக உள்ளது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து வெடிகுண்டு இருந்தால் அதனை செயல் இழக்க செய்யுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
உஷாரான போலீசார் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் மேப்ப நாயுடன் உடனடியாக சென்றனர். போனில் கிடைத்த தகவல்படி கார் நிறுத்துமிடத்தில் மர்ம பேக் இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை சோதனை செய்தனர்.
சோதனை முடிவில் அது வெறும் காலி பேக் என்றும் பயணிகள் யாரோ தேவையில்லை என்று போட்டுச்சென்றிருக்கலாம் என்று தெரியவருகிறது. இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கோவை பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது பைன் பியூச்சர் நிறுவனம். இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக விவேக், செந்தில்குமார், நித்யானந்தா ஆகியோர் இருந்தனர்.
கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர். முதலீட்டாளர்களின் புகாரையடுத்து பைன் பியூச்சர் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆர்.எஸ்.புரத்தில் பைன் பியூச்சருக்கு சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. இது குறித்தும் கோவை பொருளாராத குற்றப்பிரிவில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் விவேக் குறிப்பிட்ட வணிக வளாகத்துக்கு சென்று கடையின் வாடகையை தன்னிடம் தருமாறு அங்குள்ளவர்களிடம் கேட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது எப்படி உங்களிடம் வாடகை தரமுடியும். நாளை கோர்ட்டு எங்களிடம் வாடகை கேட்டால் என்ன செய்வது என்று கூறினர்.
வணிக வளாகம் எனக்கு சொந்தம். நான் தான் உங்களுக்கு இடம் கொடுத்தேன். என்னிடம் தான் வாடகை கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து வணிக வளாகத்தில் வாடகைக்கு உள்ளவர்கள் கோவை பொருளாதாரா குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இது குறித்து விவேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையை அடுத்த நெகமம் அருகேயுள்ள பனப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் சதாசிவம் (வயது 48).
இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. குடிப்பழக்கம் உள்ள முருகேசன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவார்.
வழக்கம் போல போதையில் வந்த முருகேசன் தனது மனைவியுடன் சண்டை போட்டார். வாய்க்குவந்தபடி திட்டினார். பொறுமையிழந்த சசிகலா பக்கத்து வீட்டில் உள்ள பஞ்சாயத்து தலைவரிடம் ‘எனது கணவர் என்னிடம் சண்டைக்கு வருகிறார். அவரை தட்டிக்கேளுங்கள்’ என்றார்.
உடனே சதாசிவம் அங்கு வந்து முருகேசனை சத்தம் போட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘என்னை தட்டிக்கேட்க நீ யார்?’ என்று ஆவேசமாய் பேசிய முருகேசன் திடீரென்று பஞ்சாயத்து தலைவர் சதாசிவத்தின் வலது கை ஆள்காட்டி விரலை கடித்து துப்பினார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டார். வலியால் அலறி துடித்த பஞ்சாயத்து தலைவர் சதாசிவத்தை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விரலை பறிகொடுத்த சதாசிவம் நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முருகேசனை தேடி வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவரின் கைவிரலை தொழிலாளி கடித்து துப்பிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
மதியம் 12.30 மணியளவில் கோவை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது. அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மினி டோர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி டோர் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.
பின்னர் அந்த லாரி கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய பின்னர் பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது. அதன் பின்னர் அங்குள்ள கடை மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 1 ஆண் மற்றும் 3 பெண்கள் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் சிங்காநல்லூர் போலீசாரும், கிழக்கு போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காயமடைந்தவர்கள் அப்பநாயக்கன்பட்டி புதூரைச் சேர்ந்த முருகன் (வயது 65), அவரது மனைவி கலா மணி (52), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி அம்சவேணி (35), பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன், அவரது மனைவி ஜெயந்தி என்பது தெரிய வந்தது. மற்றொரு பெண் பெயர் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து சிங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...


