Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
நீலாங்கரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

டிரைவர்

சென்னையை அடுத்த நீலாங்கரை செங்கேணியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் முதல் தளத்தில் வாடகைக்கு வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருடைய மனைவி மலர் (32). இவர்களது மகள்கள் ஹரிணி (7), பரணி (3). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஹரிணி 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

வெங்கடேசன், சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

உடல் கருகி கிடந்தனர்

நேற்று அதிகாலை வெங்கடேசன் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்ததும் வீட்டின் உரிமையாளர் வனராஜா மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து கதவை தட்டினார்கள். ஆனால் யாரும் கதவை திறக்காததால் கடப்பாரையால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

வீட்டிற்குள் தீ எரிந்து கொண்டு இருந்தது. வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்ததால் உள்ளே சென்றவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து பார்த்தனர்.

அப்போது படுக்கை அறையில் வெங்கடேசன், மலர், ஹரிணி ஆகியோர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். சிறுமி பரணி மட்டும் இடுப்பு மற்றும் கால்கள் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதுபற்றி தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய சிறுமி பரணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரணியும் பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதையடுத்து தீயில் கருகிய வெங்கடேசன், மலர், ஹரிணி, பரணி ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி நீலாங்கரை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

காதல் திருமணம்

வெங்கடேசனின் சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் இடையார்கிராமம் ஆகும். மலர், கோவையைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நீலாங்கரைக்கு வந்து வாடகை வீட்டில் குடியேறினர். பாலவாக்கம் தனியார் நிறுவனத்தில் வெங்கடேசன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு வெங்கடேசனை வேலையில் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. அதன்பிறகு அவர், பல இடங்களில் வேலை தேடினார். ஆனால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

மேலும் மகளின் பள்ளி கட்டணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. ஒரு வாரமாக வீட்டில் சமையல் செய்யாமல் ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

வறுமை, கடன்தொல்லை

அவர்கள் பிணமாக கிடந்த அறையில் ஒரு பெட்ரோல் கேனும் கிடந்தது. வேலை இல்லாததாலும், வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாகவும் வெங்கடேசன் தனது குடும்பத்துடன் தீக்குளித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் பெட்ரோல் ஊற்றி அவர்கள் தீ வைத்துக்கொண்டபோது அலறல் சத்தம் கேட்கவில்லை. எனவே வெங்கடேசன், முதலில் மனைவி, மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு அவர்கள் மயங்கி கிடந்த போது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தானும் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

காரணம் என்ன?

மலரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தினரிடம் இருந்து வெங்கடேசன் பிரிந்து தனியாக வசித்து வந்தார். வேலைக்கு செல்லாததால் கடன் தொல்லை அதிகமாகி அதில் மனமுடைந்து அவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: