Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி அருண்செல்வராசனை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்தது.

பாகிஸ்தான் உளவாளி

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண்செல்வராசனை கடந்த 10-ந் தேதி தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அருண்செல்வராசனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு கடந்த 12-ந்தேதி பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு போலீசார் மனு செய்து இருந்தனர்.

நேற்று முன்தினம் மனுவை விசாரித்த நீதிபதி மோனி, அருண்செல்வராசனை எத்தனை நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிப்பது என்பது குறித்து புதன்கிழமை(நேற்று) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

6 நாள் காவல்

அதன்படி நேற்று இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நடந்தது. அப்போது பாகிஸ்தான் உளவாளி அருண்செல்வராசனை 18-ந்தேதி(இன்று) மதியம் 12 மணி முதல் 23-ந்தேதி மாலை 4 மணி வரை மொத்தம் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், அப்போது அருண்செல்வராசன் சட்ட உதவிகள் குறித்து கேட்டால் தேசிய புலனாய்வு போலீசார் செய்து தர வேண்டும் என்றும் நீதிபதி மோனி உத்தரவிட்டார்.

மேலும் அருண்செல்வராசனுக்கு ராஜீவ்காந்தி கொலையாளிகளுடன் தொடர்பு உள்ளதா? என்று விசாரிக்க வேண்டும் என்பதால் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. அதிகாரிகள் அளித்த மனுவை நீதிபதி மோனி திருப்பி அனுப்பினார்.

சி.பி.ஐ. பதில் மனு

“ராஜீவ்காந்தி கொலையாளிகள் சம்பந்தப்பட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகையில், இங்கு ஏன் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்ய வேண்டும்? அதற்கான பதில் மனுவை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த விசாரணையின் போது அருண்செல்வராசன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படவில்லை. தேசிய புலனாய்வு போலீசார் இன்று(வியாழக்கிழமை) புழல் சிறையில் இருந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வார்கள்.

விசாரணையின் போது அருண்செல்வராசனை போல் வேறு யாராவது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் தமிழகத்தில் பதுங்கி உள்ளார்களா? தமிழகத்தில் எந்தப்பகுதிகளை தாக்க சதி திட்டம் தீட்டப்பட்டது. இவனுக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments: