Saturday, December 20, 2014

On Saturday, December 20, 2014 by Unknown in ,    
கொட்டும் மழையில் நேரடி ஆய்வு: கிரானைட் குவாரிகள் பற்றி சகாயத்திடம் அடுக்கடுக்காக புகார்கள்
கிரானைட் குவாரிகளில் நேற்று கொட்டும் மழையில் ஆய்வு நடத்திய சகாயத்திடம் அடுக்கடுக்காக புகார்கள் தரப்பட்டன.
2–ம் நாள் ஆய்வு மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நேற்று 2–வது நாளாக ஆய்வு நடத்தினார்.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி, கிரானைட் முறைகேடுகள் பற்றி விசாரித்து வரும் அவர், நேற்றுமுன்தினம் திருவாதவூர் பகுதி குவாரிகளை ஆய்வு செய்தார். நேற்று அரிட்டாபட்டி, கீழவளவு ஆகிய இடங்களில் உள்ள புராதன சின்னங்கள், சமணர் குகைகள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், அப்பகுதியில் நடந்துள்ள முறைகேடுகளை ஆய்வு செய்தார்.
அப்போது, மலைகள் இருக்கும் இடங்களில் கிரானைட் குவாரிகள் நடத்த அனுமதி தந்ததையும், மலையைகுளம் என அரசு பதிவேட்டில் பதிவு செய்துள்ளதையும் அவர் கண்டுபிடித்தார். அவருடன் அதிகாரிகள் சென்றனர்.
அரிட்டாபட்டியில் வட்ட வடிவ பிராமி தமிழ் கல்வெட்டுக்கள், சமணர்கள் வசித்த குகைகள், புத்தர் சிலை, ஒரே கல் பாறையில் 10 அடி நீள அறை, அதில் 6 அடி உயர லிங்கம், விநாயகர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ள குடவரை கோவில் ஆகியவற்றை சகாயம் பார்வையிட்டார்.
7 மலைகள் அரிட்டாபட்டி கிராமத்தில் பஞ்சபாண்டவர் மலை, ராமன் ஆய்வு மலை, களிஞ்சமலை, கழுகுமலை, தேன்கூடுமலை, அகப்பட்டான்மலை, கூகைகட்டிமலை ஆகிய 7 மலைகள் உள்ளன. இந்த மலைகள் மீது பி.ஆர்.பி. நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுக்கத் தொடங்கிய போது கிராம மக்கள் கிரானைட் கல் வெட்டுவதை தடுத்து போராடியதை தொடர்ந்து கிரானைட் கல் வெட்டும் வேலை நிறுத்தப்பட்டது. அந்த இடத்தை சகாயம் பார்வையிட்டார்.
அப்போது ஊராட்சிமன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான பெண்கள் மலைமீது ஏறி வந்து சகாயத்திடம் புகார் செய்தனர். அவர்கள், ‘‘இந்த மலைகளின் மீது இருந்து வரும் மழைத் தண்ணீரை கொண்டு ஆங்கிலேயர் காலத்தில் மழை நீர் தடுப்பு அணை கட்டப்பட்டது. கிராம மக்களின் காவல் தெய்வங்களாக இந்த 7 மலைகள் உள்ளன. மலையில் புராதன சின்னங்களும், கோவில்களும் உள்ளன. இங்கு கிரானைட் கல் வெட்டி எடுத்து அழிக்க முயன்றனர். இதனை தடுத்து காப்பாற்றுங்கள்’’ என தெரிவித்தனர்.
‘‘இந்த மலைகள் வெறும் பாறைகள் இல்லை. இவை சமூகத்தின் வரலாறு. எப்படி கிரானைட் கல் வெட்டி எடுக்க அனுமதித்தனர்? இந்த மலையில் கிரானைட் குவாரிக்கு அனுமதித்தது ஏன்? தூரத்தில் உள்ள குடவரை கோவிலை மட்டுமே தொல்லியல் துறை கண்டுகொண்டது ஏன்?’’ என தொல்லியல் துறையினரிடம் சகாயம் கேட்டு அதற்கான விளக்கம் தருமாறு பதிவு செய்து கொண்டார்.
மலை மீதுள்ள மழைநீர் தடுப்பு அணையையும், அதில் இருந்து வெளிவரும் கால்வாயையும், சுனையையும் வருவாய்த்துறையினர் அரசு பதிவேடுகளில் ஏன் பதிவு செய்யவில்லை என ஆர்.டி.ஓ. செந்தில்குமாரியிடம் சகாயம் கேட்டார். அதற்கு விளக்கம் தருமாறு பதிவு செய்து கொண்டார்.
கிரானைட் குவாரிக்கு அனுமதி தருவதற்கு முன் இந்த மலையில் உள்ள புராதன சின்னங்களை கனிமவளத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
குளம் ஆக மாறிய மலை அரிட்டாபட்டியில் ஆய்வு செய்த பின்னர் கீழவளவில் உள்ள பஞ்சபாண்டவர் மலைக்கு சகாயம் சென்றார். அங்கு சமணர்கள் வசித்த குடவரைகளை பார்வையிட்டு அங்கு புத்தர் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதை பார்த்து பிரமித்துப்போனார்.
இந்த மலையின் பரப்பளவு என்ன என கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டார். அப்போது அவர் வரைபடத்தை காண்பித்தார். அதில், 58 ஏக்கர் பரப்பளவு உள்ள ‘பஞ்சபாண்டவர் குளம்’ என குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்த சகாயம், தொல்லியியல் துறையின் ‘புராதன பஞ்சபாண்டவர் மலை’, அரசு பதிவேட்டில் ‘பஞ்சபாண்டவர்குளம்’ என பதிவாகி, அதன் அருகே கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே ஆர்.டி.ஓ. விடம் கீழவளவில் உள்ள 666 ஏக்கர் அரசு புறம்போக்கு இடங்களில் கிரானைட் குவாரி ஆக்கிரமிப்புகளின் அளவு பற்றிய முழு விவரத்தை தருமாறு கூறினார்.
பல கண்மாய்கள் மாயம் பின்பு, கீழவளவு ஊராட்சிமன்ற தலைவர் தர்மலிங்கம், ‘‘கீழவளவு பகுதியில் கண்மாய்கள் மண்மூடி மறைக்கப்பட்டுள்ளன. நல்லிகண்மாயில் கிரானைட் குவாரி நடத்திவிட்டு அதில் பெரிய கற்களை போட்டு மூடி உள்ளனர். இது போல கீழவளவு பகுதியில் ஏராளமான கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. இத்தனை குவாரிகள் செயல் பட்டும் கீழவளவு ஊராட்சிக்கு வரவேண்டிய வரி வருவாய் வரவில்லை. இதனால் போதிய நிதி இல்லாமல் கிராமத்தில் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை’’ என சகாயத்திடம் புகார் கூறினார்.
‘‘உயர் அதிகாரிகள் முதல் கீழ் மட்ட ஊழியர் வரை நல்ல கட்டமைப்பு உள்ள துறை பொதுப்பணித்துறையாகும். பின்னர் ஏன் விவசாய வாழ்வாதார குளங்கள், கண்மாய்களை பாதுகாக்க முடியவில்லை’’ என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட சாகாயம் கீழவளவு பகுதி கண்மாய்களின் பாதிப்பு மற்றும் தற்போதைய நிலைமை குறித்து முழுமையான விளக்கம் தருமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

0 comments: