Sunday, February 01, 2015

On Sunday, February 01, 2015 by Unknown in ,    
மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த கோதண்டராமன் மகன் குருமணி (வயது25), கம்பி கட்டும் தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் அட்டாக் பாண்டியின் தரப்பினருக்கும், குருமணிக்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருமணி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் குருமணியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமணியை பற்றி விசாரித்து தேடி வந்தனர்.
குருமணியுடன் மோதியவர்களை பிடித்து விசாரித்த போது குருமணி கடத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குருமணியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் அட்டாக் பாண்டியின் கூட்டாளியான சந்தானம் உள்பட 4 பேரை பிடித்து மேலும் துருவி, துருவி விசாரித்தனர்.
இந்த விசாரணையில் வாலிபர் குருமணியை சந்தானம் உள்பட 9 பேர் சேர்ந்து கடத்தி அடித்து கொன்றுவிட்டு உடலை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடர்ந்த சீமை கருவேல் மரங்களுக்கு மத்தியில் எரித்தனர். பின்னர் உடல் முழுவதும் எரிந்ததும் அதன் அடையாளம் தெரியாதபடி சாம்பலை அள்ளி அருகில் உள்ள குளத்தில் கரைத்தது தெரியவந்தது. இதையடுத்து அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளான சந்தானம், திருப்பதி, முத்துமணி, நயினா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கொலை நடந்த இடம், உடல் எரிக்கப்பட்ட இடம், சாம்பல் கரைக்கப்பட்ட குளம் ஆகியவற்றை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த கொலைக்கும், அட்டாக் பாண்டிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 comments: