Sunday, February 01, 2015

On Sunday, February 01, 2015 by Unknown in ,    
பாரதிய ஜனதா ஆட்சியில்தான் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது: முரளீதரராவ் பேட்டி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பாரதிய ஜனதா உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 21 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் தேசிய செயலாளர் முரளீதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் புதிய உறுப்பினர்களுக்கு கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தேசிய செயலாளர் முரளீதரராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பாரதிய ஜனதாவின் மத்திய அரசை மக்கள் வரவேற்று உள்ளனர். தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க திட்டம் வகுத்துள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு, செயல்படாத அரசாக உள்ளது.
இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க.விலும் பிரச்சனைகள் உள்ளன. எனவே தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.
தற்போதைய மத்திய ஆட்சியில்தான் மீனவர் பிரச்சனை தீர்க்கப்பட்டது. இதை முழுவதுமாக நீக்க மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் உள்ள அகதிகளில் விருப்பப்படுவோரை அவர்களது நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. ஆதரவு அளித்துள்ளது. ஆனால் அவர்கள் பிரசாரத்திற்கு வருவார்களா? என்பது அவர்களது விருப்பம்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் ஜெயந்தி நடராஜன் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த முரளிதரராவ், அவரை பாரதிய ஜனதா தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை. அவர் பாதிரய ஜனதாவில் இணைவாரா? என்பது அவருடைய விருப்பம். காங்கிரசில் இருந்து விலகியதற்கான காரணத்தை ஜெயந்தி நடராஜன் தெளிவாக தெரிவித்துள்ளார் என்றார்.

0 comments: