Monday, August 17, 2015

On Monday, August 17, 2015 by Unknown in ,    
விருதுநகர் நகராட்சியில் நூற்றாண்டு விழா நிதி ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தமும் விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருவதாகவும், அதனால் திட்ட மதிப்பீடு தொகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
  விருதுநகர் நகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்து நகராட்சி நிர்வாகம் அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு சிறப்பு நிதி ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்தது.
  இந்நிதி மூலம் புதிய சாலைகள் அமைக்கும் பணிக்கு ரூ 14.20 கோடியும், குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் 3 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்க ரூ.5 கோடியும், 4 சுகாதார வளாகங்கள் அமைக்க ரூ.60 லட்சமும், தெரு விளக்குகளை எல்.இ.டியாக மாற்ற ரூ.50 லட்சமும், நகராட்சி நூற்றாண்டு நினைவுத்தூண் அமைக்க ரூ.70 லட்சமும், கல்லூரி சாலையில் பூங்காவை நவீன முறையில் சீரமைக்க ரூ.1 கோடியும், பழைய பேருந்து நிலையத்தில் தரைப் பகுதி சீரமைக்கவும், வணிக வளாகங்களை புதுப்பிக்கவும் மற்றும் காத்திருப்போர் அறை கட்டவும் ரூ.1 கோடியும், நகராட்சி அலுவலக கட்டடங்கள் அமைக்க ரூ.2 கோடியும் என பணிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    அனைத்து பணிகளும் மேற்கொள்வதற்கு நகராட்சியில் ஒப்பந்தமும் விடப்பட்டது. இதில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட சுமார் 5 சதம் வரை கூடுதலாகவே ஒப்பந்ததாரர்கள் ஏலம் பெற்றனர்.
இதற்கு முன்பு குறிப்பாக 4 இடங்களில் சமுதாய சுகாதார வளாகங்கள் அமைக்க கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் விடப்பட்டு, 7 மாதங்கள் முடிந்த நிலையிலும் பணிகள் துவங்கவில்லை. இதேபோல் விருதுநகர் மக்களின் ஒரே பொழுது போக்கு மையமாக இருப்பது வி.என்.பி.ஆர் பூங்கா. இதை மேம்பாடு செய்யவும் நினைவுத் தூண் அமைக்கவும் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் விடப்பட்டும் பணிகள் தொடங்கவில்லை.  
    அதேநேரத்தில் சாலை போடும் பணிகள் மட்டும் வேகமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் சாலை போடும் பணியில் கூடுதலாக பலன் இருப்பதால் முக்கியத்துவம் கொடுத்து பணியில் ஈடுபடுகின்றனர். சுகாதார வளாகம் கட்டும் பணி, நினைவுத் தூண் அமைத்தல், பூங்கா மேம்பாடு பழைய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கவில்லை. அதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
     இது குறித்து நகராட்சி தலைவர் மா.சாந்தி கூறுகையில், நகராட்சியில் ஒவ்வொரு பணிகளும் மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் விட்டு வேலைக்கான உத்தரவு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கும் போது அதில் வேலையை துவங்கும் தேதி மற்றும் முடிக்கும் காலமும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் சாலை அமைக்கும் பணி முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து பழைய பேருந்து நிலைய பணிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு பணியும் குறிப்பிட்ட நாள்களுக்குள் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

0 comments: