Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
மாமல்லபுரம் : கல்பாக்கம் அணுசக்தி வளாக கடற்பகுதியை, நவீன படகு மூலம் கண்காணிக்க, கடலோர பாதுகாப்பு குழுமம் முடிவெடுத்துள்ளது.

சென்னை, கல்பாக்கத்தில், இந்திராகாந்தி அணு ஆராயச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் உட்பட முக்கிய அணுசக்தி நிறுவனங்கள் இயங்கி வரும் அணுசக்தி வளாகம் அமைந்துள்ளது. சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமான, மாமல்லபுரத்திற்கு தெற்கில், 3 கி.மீ., தொலைவில், கடலோர பகுதியில் இவ்வளாகம் உள்ளது. இவ்வளாகத்தை தகர்க்கப் போவதாக, பயங்கரவாதிகள், தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

காவல் நிலையம் அமைப்பு : இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அணுமின் நிலையம் உட்பட முக்கிய பகுதிகள், ராணுவ கட்டுப்பாட்டிலும், பிற பகுதிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,), கண்காணிப்பிலும் உள்ளன. சுற்றுப்புற பகுதி நவீன ரேடார் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடற்பகுதியை, கடலோர பாதுகாப்பு குழுமம் கண்காணித்து வருகிறது. பயங்கரவாதிகள், கடல் வழியே ஊடுருவி, மும்பை நகரை தாக்கியதை தொடர்ந்து, அத்தகைய ஊடுருவலை, இங்கு தவிர்க்க, கடற்பகுதி கண்காணிப்பிற்காக, சதுரங்கப்பட்டினம், முதலியார்குப்பம் மற்றும் கோவளம் ஆகிய இடங்களில், கடலோர காவல் நிலையம் அமைக்கப்படுகிறது.

ஆய்வு : இந்நிலையில், கல்பாக்கம் கடற்பகுதி கண்காணிப்பிற்கென, படகு துறை அமைக்கவும், இக்குழுமம் முடிவெடுத்துள்ளது.இங்கு, 500 மெ.வா., முன்மாதிரி அதிவேக ஈணுலை (பாவினி) நிலையத்திற்கு, கடல்நீர் கொண்டுவரும் ஜெட்டி பகுதி, பக்கிங்காம் கால்வாய், கடலில் கலக்கின்ற முகத்துவாரம் ஆகிய இடங்கள், படகு துறைக்காக ஆய்வில் உள்ளன.காவல் துறை கூடுதல் இயக்குனர் (கடலோர பாதுகாப்பு குழுமம்) சைலேந்திரபாபு, கடந்த 11ம் தேதி, இந்திராகாந்தி அணு ஆராயச்சி மைய மின்னணு பிரிவு இயக்குனர் சத்தியமூர்த்தி, சி.ஐ.எஸ்.எப்., கண்காணிப்பாளர் (கமாண்டன்ட் ) காமா உட்பட பலருடன், பாவினி பகுதியில் ஆய்வு செய்தார்.

அலை சீற்றத்தை தடுக்க...
இதுகுறித்து, மாமல்லபுரம் ஆய்வாளர் வேலு கூறுகையில், ''கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கடற்பகுதியை கண்காணிக்க, நவீன கருவிகளுடன் கூடிய ரோந்து படகு பயன்படுத்த உள்ளோம். படகை நிறுத்த, பாவினி ஜெட்டி பகுதியை ஆய்வு செய்து வருகிறோம். அங்கு, கடல் நீரேற்று பகுதியில் உள்ள கான்கிரீட் துாண்களில், இரும்பிலான இணைப்பை ஏற்படுத்தி, படகை நிறுத்தும் வசதி உள்ளது. படகை நிறுத்துவதற்கேற்ப, அலை சீற்றத்தை தடுக்க, நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும். அங்கு இயலாவிட்டால், முகத்துவார பகுதியில் அமைக்கவும், ஆய்வு செய்கிறோம்,'' என்றார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை சென்ட்ரலில் மெட்ரோ, ரயில், பேருந்து போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டத்துக்கு, 389 கோடி ரூபாய் தேவைப்படும் என, நகர்ப்புற வளர்ச்சி துறை மதிப்பிட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை பெறுவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சென்னையில், வண்ணாரப்பேட்டை- - விமான நிலையம், சென்ட்ரல் -- பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன.இருவழித்தடங்களும், சென்ட்ரல், ஆலந்துார் ஆகிய இடங்களில் சந்திக்கின்றன.இரு மெட்ரோ வழித்தடங்கள், புறநகர் மின்சார ரயில், மேம்பால ரயில், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள், வெளி மாவட்டம், வெளிமாநில ரயில்கள் வந்து செல்வது என, பல்வேறு வகையான போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோரும் வந்து செல்லும் மிக முக்கியமான போக்குவரத்து முனையமாக இந்த சந்திப்பு அமைய உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில் உள்ள இப்பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

ஒருங்கிணைப்பு : ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி இங்கு வருவோர், இந்த சந்திப்பில் இன்னொரு போக்குவரத்து சேவைக்கு மாறுவதில் எவ்வித தடங்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையம், மூர்மார்க்கெட் புறநகர் மின்சார ரயில், பூங்கா நகர் மின்சார ரயில், ரிப்பன் கட்டடம், அரசு பொது மருத்துவமனை, மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றை பொதுவாகவும், ஒன்றுடன் ஒன்றும் இணைக்கும் வகையில், அதிநவீன நடைமேம்பாலம் அமைக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை துறை உருவாக்கியது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருமா என்பது குறித்து குழப்பம் நிலவும் சூழலில், இப்பகுதியில் பல்வேறு வகையான போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய திட்டம் : இதுகுறித்து நகரமைப்பு துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தம், 70 ஆயிரம் ச.மீ., பரப்பளவுக்கு பூமிக்கடியில், அடுக்கு தளங்களை கொண்டதாக அமைக்கப்படும், மெட்ரோ ரயில் சேவையை, மக்கள் எளிதாக பயன்படுத்த, பிற போக்குவரத்து சேவைகளுடன் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும். இதற்காக, 'சென்ட்ரல் ஸ்கொயர்' என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை உருவாக்கும் பணிகள், நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில், 500 கார்கள், 1,000 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம், அனைத்து தரப்பு மக்களும், எளிதாக, வெவ்வேறு வகை போக்குவரத்து சேவைக்கு செல்லும் வகையில், ஆறு வழித்தடங்கள் அமைப்பது என, இத்திட்டம் உருவாக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி இத்திட்டத்தை செயல்படுத்த, 389 கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை, கட்டுமான திட்ட அனுமதியின்போது வசூலிக்கப்படும் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து பெறுவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை : சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையிலும், கந்து வட்டிக்காரர்களின் 'அடாவடி' வட்டி வசூலில் இருந்து தப்பிக்க முடியாமல், கோர்ட் ஊழியர்கள் 80க்கும் மேற்பட்டோர் கதறுகின்றனர்.

கந்துவட்டிக் கொடுமையால் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. சமீபத்தில், கந்து வட்டி சாவுகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. ஆனாலும், மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதில் 'கடுமை' காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் கந்து வட்டிக்காரர்களின் நடவடிக்கை ஒரு படி மேலே போய், கடன் வாங்கியவர்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துக்கொள்வது, பெண்களை சிறை வைப்பது, குழந்தைகளை கடத்துவது என, அடுத்தடுத்த இம்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பெரும்பாலும், தங்க நகை தொழிலாளர்கள், ஜவுளி விற்பனையாளர்கள், தினசரி மார்க்கெட் வியாபாரிகள் இக்கொடுமையில் சிக்கி தவிக்கின்றனர். கந்து வட்டி வசூலிப்பவர்களின் நடமாட்டம் நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதில் ஒரு சில போலீஸ் அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பது, கொடுமையான விஷயம். பணத்தேவையில் கஷ்டப்படுவோரை தேடிப்பிடித்து உதவி செய்யும் கந்து வட்டி ஆசாமிகள், அடுத்தடுத்த தவணைகளில் பணத்தை திரும்ப பெறுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், கடும் வார்த்தைகளால், அர்ச்சனை செய்கின்றனர். இதற்கு பணம் வாங்கியவர்கள் வாய் மூடியாகவே இருக்கின்றனர். கடன் பெற்றவர்கள் தாங்கள் வாங்கிய கடனுக்கு ஈடாக, 'கையெழுத்திட்ட செக்'கை முன் கூட்டியே ஒப்படைத்திருப்பது தான் காரணம்.

இக்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகியதன் விளைவு, கந்து வட்டி நபர்களை கைது செய்யவும், தடை செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இச்சூழலிலும், இக்கொடுமை வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கோர்ட் ஊழியர்களிடமும் பரவியுள்ளது. நீதிகேட்டு பாதிக்கப்படும் மக்கள் கோர்ட்களை அணுகி வரும் நிலையில், கோர்ட் ஊழியர்களே, கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் குடும்பத்தினரின் தொழில் அபிவிருத்திக்காகவும், குடும்பச் செலவுகளுக்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளனர். இதற்கு மூன்று ரூபாய் வட்டி தர சம்மதமும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடன் தொகையை கட்ட முடியாமல் திணறுகின்றனர். வசூலுக்கு வரும் கந்து வட்டி ஆசாமிகள், கோர்ட் ஊழியர்கள் முன்னிலையில், நாகூசும் வார்த்தைகளால் பெண்களை மட்டுமல்லாது, ஆண் ஊழியர்களையும் திட்டுகின்றனர்.கோவையில் மட்டும், 86 ஊழியர்கள் கந்து வட்டி ஆசாமிகளிடம் சிக்கியுள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் கோர்ட்களிலும் கந்து வட்டி ஆசாமிகளின் கைவரிசை நீண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வட்டியை கட்ட முடியாமல் அவதிப்படும் ஊழியர்கள் வேறு வழியின்றி, சக ஊழியர்களிடம் தங்கள் இயலாமையை தெரிவித்து அழுகின்றனர்.இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்ட நீதிபதியை சந்தித்து, தங்களை கந்து வட்டிக் கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என முறையிட உள்ளதாக கோர்ட் ஊழியர்கள் தெரிவித்தனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
குடும்ப பிரச்னையில் தற்கொலை : மண்ணரையை சேர்ந்தவர் மோகன்தாஸ், 44; ஸ்டீம் ஆப்ரேட்டர். திருமணமாகி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால், மதுவுக்கு அடிமையானார். இதனால், குடும்பத்தில் பிரச்னை அதிகரித்தது. வெறுப்படைந்த அவர், வீட்டில்யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
ஆட்டோ திருட்டு: திருப்பூர், கரட்டாங்காடு 4வது வீதியில் வசிப்பவர் சிவகுமார், 40; சரக்கு ஆட்டோ இயக்கி வருகிறார். இவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை, வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். கடந்த 13ம் தேதி, மர்ம நபர்கள் சரக்கு ஆட்டோவை திருடிச் சென்றனர். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை விற்றவர் கைது: இடுவம்பாளையம், கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அதே பகுதியில், டீக்கடை நடத்தி வருகிறார். வீரபாண்டி போலீசார், இவரது கடையில் சோதனை நடத்தினர். புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார், ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கடைகள் ஆக்கிரமிப்பு; போலீசார் வழக்கு: திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக வந்த புகாரில், ரூரல் போலீசார் ஆய்வு நடத்தினர். அப்பகுதியில் உள்ள இரண்டு பேக்கரி முன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல், ராம் நகர், ராமமூர்த்தி நகர் பகுதிகளில் வடக்கு போலீசார் ஆய்வு செய்தனர். அங்கும், மக்களுக்கு இடையூறாக கடைகள் போடப்பட்டிருந்தன. கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வடக்கு மற்றும் ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி மோதி ஒருவர் பலி: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர், கலியபெருமாள் மகன் சாத்தப்பன், 26. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கோவையில் இருந்து திருவாரூர் செல்வதற்காக, பல்லடம் வழியாக தனது பைக்கில் வந்துள்ளார். கே.என்.புரம் அருகே வந்தபோது, அங்கு நின்றிருந்த லாரி பின்புறம், சாத்தப்பனின் பைக் மோதியது. படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு, போலீசார் அனுப்பி வைத்தனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருட்டு; வாலிபர் கைது: திருப்பூர், பூலுவப்பட்டி தோட்டத்து பாளையத்தை சேர்ந்தவர் தர்மேந்திரா, 34; பனியன் கம்பெனி தொழிலாளி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர், 35, என்பவர் தர்மேந்திரா வசிக்கும் காம்பவுண்டுக்குள் சென்று, அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு லிட்டர் பெட்ரோலை திருடியுள்ளார். மேலும், அவரது வீட்டு ஜன்னலை திறந்து மொபைல்போனை திருடியுள்ளார். அதைபார்த்த தர்மேந்திரா, ராஜசேகரை பிடித்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் : மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், திருப்பூர் வீரர் வெண்கல பதக்கம் வென்றார்.
சென்னை ரைபிள் கிளப் சார்பில், மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, சென்னை அடுத்த அலமாதியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆண்களுக்கான சர்வதேச ட்ராப் மற்றும் டபுள் ட்ராப் பிரிவில், திருப்பூரை சேர்ந்த ரமேஷ்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இவருக்கு, சென்னை ரைபிள் கிளப் செயலாளர் சீதாராமராவ், இணை செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர், பதக்கம் வழங்கி கவுரவித்தனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் சிக்கண்ணா கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ரூ.4.40 கோடி மதிப்பில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது. கைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, மேஜைபந்து, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகள் நடத்தும் வகையில், மைதானம் ஏற்படுத்தப்படும்.அதேநேரத்தில், விளையாட்டுக்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடைப்பந்து விளையாட்டுக்கு மட்டுமே, அரசு பயிற்சியாளர் உள்ளார். மற்ற விளையாட்டுகளுக்கு இல்லாததால், விளையாட்டில் சாதிக்க விரும்பும் வீரர், வீராங்கனைகள், வெளியூர் பயிற்சியாளர்களையே நம்பியுள்ளனர்.இந்நிலையில், விளையாட்டு பயிற்சியாளர்களை நியமிக்கும் வகையில், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்டால், திறமையை வளர்த்து கொள்ள மாணவ, மாணவியருக்கு, பேருதவியாக இருக்கும்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம் கூறுகையில், ""திருப்பூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி துரிதகதியில் நடந்து வருகிறது.""இவை முடிந்ததும், விளையாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளோம்,'' என்றார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
பல்லடம் : பல்லடத்தில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு தொடர் ஓட்டப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் திருப்பூர் வீரர்கள் வெற்றி பெற்றனர்.
மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, பல்லடம் சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் கிளப், லயன்ஸ் கிளப் சார்பில், விழிப்புணர்வு தொடர் ஓட்டப்போட்டி நேற்று நடைபெற்றது. பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற போட்டியை, எம்.எல்.ஏ., பரமசிவம் துவக்கி வைத்தார். 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 கி.மீ., போட்டியிலும்; 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் 6 கி.மீ., ஓபன் பிரிவு மற்றும் 8 கி.மீ., போட்டியிலும்; 40 வயதுக்கு மேற்பட்டோர் 6 கி.மீ., பிரிவிலும்; பெண்கள் 4 கி.மீ., பிரிவிலும் பங்கேற்றனர்.
மாணவியர் பிரிவில் கோவை சேர்ந்த அம்பிகா முதலிடம் பெற்றார். கோவை கிருஷ்ணவேணி இரண்டாமிடம், திருப்பூரை சேர்ந்த சினேகா மூன்றாமிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா முதலிடம் பெற்றார். திருப்பூரை சேர்ந்த மயில்சாமி இரண்டாமிடம், திருப்பூர் அருண்குமார் மூன்றாமிடம் பெற்றனர். 10 முதல் 12ம் வகுப்பு மாணவியர் பிரிவு தொடர் ஓட்டத்தில், பல்லடத்தை சேர்ந்த கோகிலதேவி முதலிடம், திருப்பூர் சவுந்தர்யா இரண்டாமிடம், கோவை சிவசில்வா மூன்றாமிடம் பெற்றனர். மாணவர் பிரிவில், கோவை சக்திவேல் முதலிடம், கோவை பாலன் இரண்டாமிடம், திருப்பூர் ஆனந்தராஜ் மூன்றாமிடம் பிடித்தனர்.
பொதுப்பிரிவு பெண்கள் போட்டியில், திருப்பூர் பிரேமா முதலிடம் பெற்றார். கோவை விஜயாபாண்டி இரண்டாமிடம், பல்லடம் லட்சுமி மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த மயில்சாமிக்கு முதலிடம் கிடைத்தது. கோவை ராமச்சந்திரன் இரண்டாமிடம், திருப்பூர் பிரேம்குமார் மூன்றாமிடம் பிடித்தனர்.தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது.

On Monday, September 15, 2014 by farook press in ,    
அவிநாசி : அவிநாசி அருகே, மந்தகதியில் நடைபெறும் சாக்கடை கால்வாய் கட்டுமான பணியை, விரைவாக முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிகவுண்டன்புதூர் - மங்கலம் ரோட்டில், பாலமுருகன் கோவில் அருகில் பள்ளம் இருந்தது. சில மாதங்களுக்கு முன், அப்பகுதியில் ரோடு மேடாக்கப்பட்டு, அதன் கீழ் மழை நீர் வடிகால் குழாய் பதிக்கப்பட்டது. அதன் மறுமுனையில், மழை நீர் வெளியேறும் வகையில், ஆறு அடி ஆழத்தில் வடிகால் கட்டப்பட்டது. அதன் முடிவில், காசிகவுண்டன்புதூரில் உள்ள சாக்கடை கால்வாயில் இணைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதில் இணைக்காமல், அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாயில், கழிவுநீர் தேங்கியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதியினர் கூறுகையில், "நெடுஞ்சாலைத்துறை சார்பில், மழைநீர் வடிகால் கட்டி, மூன்று மாதமாகிறது. நீர் வெளியேறும் பாதை (டிஸ்போசபிள் பாயின்ட்) அமைக்காததால், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. விரைவாக பணியை முடித்து, கழிவுநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்,' என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், "மழைநீர் வடிகால் வெளியேறும் வகையில், மங்கலம் ரோட்டில் அமைக்கப்பட்ட கால்வாயின் மறுமுனையை, சாக்கடை கால்வாயுடன் இணைக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் அப்படியே நிற்கின்றன. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். காசிகவுண்டன்புதூர் வழியாக குழாய்களை பதித்து, கழிவுநீரை வெளியேற்றும் வகையில், பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்,' என்றார்.