Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
பொள்ளாச்சியில் நகை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25½ பவுன் நகை கள் மீட்கப்பட்டன.

வாகன சோதனை

பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி துணை சூப்பிரண்டு முத்து ராஜன் மேற்பார்வையில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக் டர் சோமசுந்தரம் தலைமை யில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீ சார் உடுமலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட் டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்கள். இதனால் சந்தே கமடைந்த போலீசார் 2 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார் கள்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் மதுரை ராமமூர்த்தி நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 29), ஜீவா நகரை சேர்ந்த மாயாண்டி (26) என்பதும் தெரியவந்தது. இதில் சக்திவேல் கடந்த பிப்ரவரி மாதம் வெங்கடேசாகாலனி வி.கே.வி. லே-அவுட்டில் ராமசாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை திருடுபோன வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரைக்குடி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் மளிகை கடைக்கு சென்ற ஸ்ரீதேவி என்ற பெண் ணிடம் மாயாண்டி 5 ½ பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேல், மாயாண்டி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் களி டம் இருந்து 25½ பவுன் நகை களை மீட்டனர். பின்னர் கைதான 2 பேரையும் போலீ சார் கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி கட்சி முகவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.

மின்னணு எந்திரங்கள்

கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 பேர் ஓட்டுப்போட உள்ளனர். மாநகராட்சி தேர்தலுக்காக மொத்தம் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன.

மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,380 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.

சின்னங்கள் பொருத்தும்பணி

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான கணேஷ் தலைமையில் 5 உதவி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

கோவை ராம்நகர் அரங்கநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு அவற்றில் 16 வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் பொருத்தும் பணி நடைபெற்றது.

அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. முன்னதாக அனைத்து எந்திரங்களும் ஆணையாளர் கணேஷ் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன. அப்போது உதவி தேர்தல் அதிகாரி ரவி மற்றும் உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

‘சீல்’ வைக்கப்பட்டன

இதேபோல கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தி சீல் வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நாளை (புதன்கிழமை) மாலை போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.

பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வழங்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றுடன் அனைவருக்கும் வாக்காளர் சீட்டு வினியோகிக்கப்பட்டு விட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

தனியார் கல்லூரி

கோத்தகிரியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கட்டபெட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கல்லூரி முதல்வர் அடிக்கடி மாற்றப்படுவதால் நிர்வாகம் பாதிக்கப்படுவதாகவும், கல்வித்தரமும் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 11-ந் தேதி கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவ- மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.

மீண்டும் போராட்டம்

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாததால் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோத்தகிரி தாசில்தார் ராம்குமார், வருவாய் அதிகாரி கலைச்செல்வி, கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ராம்குமார் மாணவர்களிடம் உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-1 பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள்,சிறுத்தை புலிகள் உட்பட பல விலங்குகள் உள்ளன.

இதில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை தாக்குவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன. இதை தடுக்க அந்த பகுதியில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் தோட்ட பகுதியில் அகழி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 22 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் சில யானைகள் தேயிலை தோட்ட பகுதிகளிலும், சில யானைகள் படச்சேரி பகுதிளிலும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 கும்கிகள் வரவழைப்பு

தகவல் அறிந்ததும் காட்டு யானைகளை கும்கி யானைகள் மூலம் விரட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் தேஜ்ஸ்வீ உத்தரவின் பேரில் முதுமலையில் இருந்து சங்கர்,வசீம் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் கும்கிகள் மூலம் காட்டு யானைகளை தேடும் பணி நடந்தது.

இதை தொடர்ந்து தேயிலை தோட்டப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். இந்த பணியில் சேரம்பாடி ரேஞ்சர் கணேசன், பிதிர்காடு ரேஞ்சர் சோமசுந்தரம் மற்றும் வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
திருப்பூர் வடக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா திருப்பூர் குமார்நகர் பகுதியில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் சுவரில் ஆபாசபட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய சண்முக சுந்தரம்(வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
On Tuesday, September 16, 2014 by farook press in ,    
உடுமலையில் அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணாவின் உருவசிலைக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
அ.தி.மு.க.
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவிற்கு பொதுக்குழு உறுப்பினர் எம்.கண்ணாயிரம் தலைமை தாங்கினார். அங்குள்ள அண்ணாவின் உருவசிலைக்கு மடத்துக்குளம் தொகுதி சி.சண்முகவேலு எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் வக்கீல் ஏ.கே.மனோகரன், கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குனர் பி.சிதம்பரநாதன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என்.வாசுதேவன், நகர பேரவை செயலாளர் வி.என்.வெங்கடேஷ், நகர கழக மாவட்ட பிரதிநிதி யு.ஜி.கே.சற்குணசாமி, துணைச்செயலாளர் எம்.முருகவேல், கவுன்சிலர் ஜி.தனலட்சுமி, ஜெ.ஹரிபிரசாத், ஜெ.மணிவண்ணன், பாபு, கணியூர் நடராஜ், பொற்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
தி.மு.க. சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு நகர செயலாளர் சி.வேலுச்சாமி தலைமை தாங்கி உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாவின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செ.செல்வராஜ், நகர கழக அவைத்தலைவர் இந்துபாய் என்கிற சாகுல்அமீது, துணை செயலாளர் வக்கீல் எம்.வெங்கடாசலம், பொருளாளர் டி.ஜவஹர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கராஜ் என்கிற மெய்ஞான மூர்த்தி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் தா.வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், முபாரக் அலி, நகராட்சி கவுன்சிலர்கள் அப்பாசாமி, பாலசுப்பிரமணியன், ஆதம்ஸா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Tuesday, September 16, 2014 by farook press in ,    
மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு மூல ஸ்தாபனம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஒருநிலை கோபுர விமானம் ஆகியவை அமைத்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி கடந்த 13–ந்தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் மங்கள இசையுடன் தொடங்கி ரக்ஷாபந்தனம், யாகசாலை பூஜைகள், ஹோமங்கள், ஆகுதிகள், முளைப்பாரி எடுத்தல், புதிய விக்ரகங்கள் பிம்பசுத்தி, இறைதிருமேனிகள் நிலைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மங்கள இசையுடன் தொடங்கி லட்சுமி கணபதி ஹோமம், 4–ம் கால யாக வேள்விகள், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதை தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
On Tuesday, September 16, 2014 by farook press in ,    
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் இயற்கை இன்னல்கள் ஏற்படும்போது தானே காப்பாற்றியும், பிறரை காப்பாற்றுவது எவ்வாறு என்று செயல்முறை விளக்கம் குறித்த நிகழ்ச்சி பல்லடத்தில் உள்ள மணிமகாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பல்லடம் தாசில்தார் அம்சவேணி, நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழு தலைவர் பிஸ்வால் தலைமையில் அக்குழுவினர் வெள்ளம், சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், கட்டிடம் இடிந்த பின் அக்கட்டிடத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, வெள்ளப்பெருக்கு வீடு சூழ்ந்து கொண்டால் வெளியேறுவது, பாம்பு கடித்தால் எவ்வாறு முதலில் சிகிச்சை மேற்கொள்வது, விஷவாயு வெளிவரும்போது செய்ய வேண்டியதை குறித்து அக்குழுவினர் செய்து காட்டினார்கள்.
On Tuesday, September 16, 2014 by farook press in ,    
உடுமலை அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயன்றுள்ளனர்
சிறுத்தைப்புலி நடமாட்டம்
உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதியில் அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சின்னாறு வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சிறுத்தைப்புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய், காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன.
ஒரு சில நேரங்களில் வனப்பகுதியில் இருந்து யானை காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதுண்டு. இந்த நிலையில் கடந்த 4–ந்தேதி அமராவதிநகரில் உள்ள பள்ளிக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்றை சிறுத்தைபுலி கொடூரமாக கடித்து கொன்றுள்ளது. மேலும் வன அதிகாரி வீட்டில் உள்ள நாய்க்குட்டியை கடித்து இழுத்து சென்று உள்ளது.
கூண்டு
மேலும் பல இடங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை பார்த்து பொதுமக்கள் பார்த்து அச்சம் அடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சிறுத்தைப்புலியின் நடமாடத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுத்தைப்புலியை பிடிக்க கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற இடத்திற்கு சற்று தொலையில் கூண்டு வைத்துள்ளனர். கூண்டுக்குள் சிறுத்தைப்புலியை பிடிக்க ஆட்டுக்குட்டி ஒன்றையும் வைத்துள்ளனர். அமராவதி நகர் பகுதி மக்களை பீதிக்கு உள்ளாகி வரும் சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சிக்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.