Friday, September 19, 2014
கோவையில் நடந்த மோதல் சம்பவத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., பா.ஜனதா வேட்பாளர் உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க.–பா.ஜனதா மோதல்
கோவை மேயர்தேர்தலையொட்டி நேற்றுமுன்தினம் பிரசாரம் முடிந்திருந்த நிலையில் சவுரிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினர் வீடுவீடாக சென்று ஆதரவு கேட்பதாக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த கட்சியின் மேயர் வேட்பாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் தொகுதி சின்னச்சாமி எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்து சம்பவம் குறித்து கேட்க முற்பட்டபோது, மோதல் சம்பவம் மேலும் அதிகரித்தது.
போலீசில் புகார்
இதில் பா.ஜனதா வேட்பாளர் நந்தகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டதுடன், ஒருசில நிர்வாகிகளின் சட்டைகளும் கிழிக்கப்பட்டன. அத்துடன் இருதரப்பினர் கார்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த மாநகர போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் சார்பில் பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
100 பேர் மீது வழக்கு
இந்த வழக்கு குறித்து போலீசார் கூறும்போது, தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பு நிர்வாகிகள் சார்பில் புகார் செய்யப்பட்டு உள்ளது. பா.ஜனதா நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் அ.தி.மு.க.வை சேர்ந்த சின்னச்சாமி எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீதும், அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் பா.ஜனதா மேயர் வேட்பாளர் நந்தகுமார் உள்பட 50 பேர் என்று மொத்தத்தில் 100 பேர் மீது, ஏராளமானோர் கூடி கலகம் செய்தல், வாகனங்களை உடைத்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது என்றனர்.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்களித்தனர்.பின்னர் அவர்கள் கூறும்போது,
எங்கள் கட்சிக்கே வெற்றி கிடைக்கும் என்று ஒவ்வொருவரும் நம்பிக்கை தெரிவித்தனர். அமைச்சர்
கோவை மேயர்தேர்தலில் தமிழக உள்ளாட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை 9 மணிக்கு ஓட்டு போட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் கோவை கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்றுக்காலை 7.45 மணியளவில் ஓட்டுப்போட்டார். அவருடன் மனைவி தயமந்தி, தாயார் புவனேஸ்வரி ஆகியோரும் சென்று வாக்களித்தனர்.
அப்போது கணபதி ப.ராஜ்குமார் கூறியதாவது:–
கோவை மாநகராட்சியின் அடிப்படை வசதிகளுக்காக முதல்–அமைச்சர் ரூ.2,378 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.நான் வெற்றி பெற்றால் கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் சப்ளையை தீவிரமாக அமல்படுத்துவேன். கோவையின் பெரும் பிரச்சினையாக உள்ள போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா வேட்பாளர்
கோவை மேயர் தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் ஆர்.நந்தகுமார் நேற்று காலை 7–45 மணியளவில் துடியலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்போட வந்தார். அவர் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.
ஓட்டு போட்டுவிட்டு வந்த பின்னர் அவர் கூறும்போது, ‘கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெளியூரை சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி ஓட்டு போட முயற்சிக்கிறார்கள். போலீசும் தேர்தல் ஆணையமும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூ.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் பத்மநாபன் தனது மனைவி மனோன்மணியுடன் கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மழலையர் பள்ளியில் காலை 8.15 மணிக்கு வந்து ஓட்டுப்போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆளும் கட்சி இடைத்தேர்தலை ஜனநாயக முறையில் நடத்தாததாலும், தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியதாலும் பெரும்பாலான மக்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை. வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு தங்கி இருந்ததாலும், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாலும் பொதுமக்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடவில்லை. இதுவே வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணம் ஆகும்.
கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கைகள், எங்களுடைய நேர்மை, உழைப்பு ஆகியவற்றுக்கு பொதுமக்கள் தங்கள் வாக்குகள் மூலம் நியாயம் வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு பத்மநாபன் தெரிவித்தார்.
காந்தீய மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் டாக்டர் டென்னிஸ் கோயில் பிள்ளை, மஞ்சீஸ்வரி மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
எம்.எல்.ஏ.க்கள்
கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தா.மலரவன், கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மனைவி சியாமளாவுடன் சென்று வாக்களித்தார்.
சிங்காநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சின்னசாமி மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஓட்டு போட்டார்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., வி.சி.ஆறுகுட்டி விளாங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் முதல் ஓட்டாக தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் மனைவி பானுமதி, மகன்கள் சஞ்சய், அருண்குமார் ஆகியோரும் ஓட்டுப்போட்டனர்.
கோவை மேயர் தேர்தலில் புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொதுமக்கள் ஓட்டுப்போடுவதில் ஆர்வம் செலுத்தினார்கள். 90 வயது மூதாட்டி உள்பட வயதான பெண்களை தூக்கி வந்து ஓட்டு போட வைத்தனர்.
புறநகர் பகுதியில் கூட்டம்
கோவை மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், கோவை புறநகர் பகுதியில் நேற்று காலை முதல் விறு,விறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கிராமப்புற பகுதிகள் அதிகம் நிறைந்த வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை முதல் விறு,விறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 166–வது வாக்குச்சாவடியில் மொத்தம் உள்ள 1,310 பேரில், காலை 11 மணியளவில் 501 பேர் ஓட்டு போட்டு இருந்தனர். இதனால் காலை 11 மணியளவில் இந்த வாக்குச்சாவடியில் 38 சதவீதம் ஓட்டுப்பதிவானது.
கோவை சுகுணாபுரம், அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் காணப்பட்டனர். இதனால் இந்த வாக்குச்சாவடியில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. பகல் 11 மணியளவில் 20 சதவீதமும், மாலை 3 மணியளவில் 40 சதவீதமும் ஓட்டுப்பதிவானது.கோவைபுதூரை சேர்ந்த மதீனா என்ற பெண், 4 மாத கைக்குழந்தையை கையில் தூக்கியபடி வந்து ஓட்டு போட்டார். அவர் வரிசையில் நிற்காமல் விரைவில் ஓட்டுப்போட பொதுமக்கள் வசதி செய்து கொடுத்தனர்.
93 வயது மூதாட்டி
வடவள்ளி மருதமலை ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 155–வது வாக்குச்சாவடியில் 93 வயது அங்கம்மாள், உறவினர் ஒருவரின் துணையுடன் ஆட்டோவில் வந்து ஓட்டு போட்டார். இதேபோல் அந்த வாக்குச்சாவடியில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.
கவுண்டம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டியம்மாள் என்ற 90வயது மூதாட்டியை கைத்தாங்கலாக தூக்கி வந்து உறவினர் உதவியுடன் ஓட்டு போட வைத்தனர். துடியலூர் பகுதியில் காலையில் விறு,விறுப்பாக ஓட்டுப்பதிவு காணப்பட்டது. பிற்பகலில் மந்த நிலையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கீர்த்தி என்ற மாணவி காலில் காயம் அடைந்த நிலையிலும், காரில் வந்து ஆர்வத்துடன் ஓட்டு போட்டார்.
கோவை புறநகர் பகுதிகளான வீரக்கேரளம், வடவள்ளி, சரவணம்பட்டி பகுதிகளில் ஆர்வமுடன் பொதுமக்கள் வாக்களித்தனர்.
மாலையில் விறு,விறுப்பு குறைந்தது
கோவை புறநகர் பகுதியில் காலையில் காணப்பட்ட விறு,விறுப்பு மாலையில் குறைந்தது. பல வாக்குச்சாவடிகளில் பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் ஓட்டு போட்டனர்.
ஓணாப்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பல வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டு இருந்ததால் இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
ஓட்டுப்போட்டுவிட்டு வந்தவர்கள் கூறும்போது, திரும்ப, திரும்ப தேர்தல் நடைபெறுவது தேவையில்லாதது, மக்களின் வரிப்பணம் விரையமாகிறது. எனவே அவசியமானால் மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
கோவை மேயர் தேர்தலில் அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி, வாக்குச்சாவடி அருகே பாரதீய ஜனதாவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பாரதீய ஜனதாவினர் எதிர்ப்பு
கோவையை அடுத்த துடியலூர் 1–வது வார்டு பகுதியில் நேற்று காலை ஓட்டுப்பதிவு நடைபெற்றுகொண்டிருந்தது.அப்போது அந்த பகுதியில் வெளியூரை சேர்ந்த சிலர் நின்றுகொண்டு அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பதாக பாரதீய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அங்கிருந்த அ.தி.மு.க.வினருக்கும், பாரதீய ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினார்கள்.
சம்பவ பகுதிக்கு பாரதீய ஜனதா வேட்பாளர் நந்தகுமார் வந்து பார்வையிட்டார். அவர் கூறும்போது, வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினர் துடியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் குவிந்து நின்று வாக்குச்சாவடி அருகே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
கள்ள ஓட்டு போட முயற்சி
இந்த நிலையில் கவுண்டம்பாளையம் ராமசாமி பள்ளியில் 32–வது வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை பிடித்து பாரதீய ஜனதா பிரமுகர் சந்திரன் என்பவர் போலீசில் ஒப்படைத்தார். அவர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் ஆவார். துடியலூர் போலீசார் அவரை வேனில் ஏற்றி சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவை 32–வது எண் வாக்குச்சாவடியில் ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக கூறி, பாரதீய £னதா கட்சியினர் வாக்குச்சாவடி அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட கூடுதல் துணைசூப்பிரண்டு அதிவீரபாண்டியன், மற்றும் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினார்கள். சம்பவ இடத்துக்கு பாரதீயஜனதா மாநில செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆகியோரும் வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றனர்.
துடியலூர் பகுதியில் ஓட்டுப்பதிவு தொடங்கிய காலை முதல் மாலைவரை இருகட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றம் நிலவியதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகி உண்ணிகிருஷ்ணன் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:–
திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளி போனசாக ஊதியத்தின் 10 சதவீதத்தை வழங்க வேண்டும். மேலும் சில தனியார் நிறுவனங்கள் போனஸ் தொகையை தர மறுக்கின்றன. இதனால் போனஸ் தராத உரிமையாளர்களை எதிர்த்து அவினாசி, காங்கயம், திருப்பூர் தாலுகா அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
மத்திய அரசால் வழங்கப்படும் நெசவாளர் கடன் அட்டை திட்டப்படி வழங்க வேண்டிய ரூ.25 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள பிரதம மந்திரியின் 100 நாள் வேலைப்படி மாவட்டத்தில் வழங்கப்பட உள்ள கடன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசின் திட்டப்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தறிக்கூடத்துடன் கூடிய பசுமை வீட்டு திட்டத்தை நடைமுறை படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் நேற்று 61 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது.
34 பேர் போட்டியின்றி தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் 56 உள்ளாட்சி பதவி உள்பட தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28–ந் தேதி தொடங்கி கடந்த 4–ந் தேதி வரை நடந்தது. வேட்பு மனு பரிசீலனை முடிந்து, மனுக்கள் கடந்த 8–ந் தேதி வரை வாபஸ் வாங்கப்பட்டன. இதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் நகராட்சி 17–வது வார்டு கவுன்சிலர், 4 பேரூராட்சி கவுன்சிலர், குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரியகுமாரபாளையம் ஊராட்சி தலைவரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 28 பேரும் என்று மொத்தம் 34 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
22 பதவிகளுக்கு 72 பேர் போட்டி
திருப்பூர் மாநகராட்சியில் 2 வார்டு, பல்லடம் நகராட்சி 6–வது வார்டு, தளி பேரூராட்சி 5–வது வார்டு ஆகியவற்றில் கவுன்சிலர் பதவிக்கும், மடத்துக்குளம் பேரூராட்சி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி ஆகிய 2 பேரூராட்சி தலைவர் பதவி உள்பட மொத்தம் 22 பதவிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த 22 பதவிகளுக்கு 72 பேர் போட்டியிட்டனர்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. நகரப்பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலமும், ஊரக பகுதியில் வாக்குச்சீட்டு மூலமும் ஓட்டுப்பதிவு நடந்தது. நகரப்பகுதியில் 57.47 சதவீதமும், ஊரக பகுதியில் 63.59 சதவீதமும் என்று மாவட்டம் முழுவதும் 60.98 சதவீதம் பேர் வாக்களித்தனர். குறைந்த பட்சமாக திருப்பூர் மாநகராட்சி 22–வது வார்டில் 52.51 சதவீதமும், அதிகபட்சமாக குடிமங்கலம் ஒன்றியம் பொன்னேரி ஊராட்சி 3–வது வார்டில் 90.63 சதவீதமும் வாக்குப்பதிவானது.
பலத்த பாதுகாப்பு
பதற்றமான வாக்குச்சாவடிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் ஓட்டுப்பதிவு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. தேர்தல் பணிகளை கண்காணிக்க உள்ளூர் பார்வையாளர்களாக 10 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஓட்டுப்பதிவை கண்காணித்தனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு ஊரக பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் 5 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 15 இன்ஸ்பெக்டர்கள், 75 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோல் மாநகர பகுதியில் 2 வார்டுகளுக்கு 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பதிவான வாக்குகளை எண்ண 20 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஓட்டுப்பெட்டிகளும் சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன. வருகிற 22–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
தாராபுரம் அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அலங்கியம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
ஆடு மேய்ப்பதில் தகராறு
தாராபுரம் அருகே உள்ள உண்டாரப்பட்டியை சேர்ந்தவர் குமரவேல் (வயது50). இவருடைய மனைவி முருகாத்தாள் (45). இவர்களுக்கு சொந்தமான நிலம் பாலமரத்து தோட்டத்தில் உள்ளது. இங்கு கணவன்–மனைவி இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள். இங்குள்ள தோட்டத்தில் காய்கறி, கரும்பு மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
இவர்களின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் சொந்தமாக ஆட்டுப்பட்டி அமைத்து ஆடு வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று கருப்புசாமியின் ஆடுகள், முருகாத்தாள் தோட்டத்திற்குள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல்
இதை பார்த்த முருகாத்தாளும், குமரவேலும் சத்தம் போட்டனர். அப்போது அங்கு வந்த கருப்புசாமிக்கும் முருகாத்தாளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது கருப்புசாமிக்கு ஆதரவாக அவருடைய மனைவி பாப்பாத்தி, மகன் ஆனந்தன், மகள் பானுமதி ஆகியோர் வந்தனர். பின்னர் இருதரப்பினரும் அங்குள்ள பொருட்களை ஒருவர் மீது மற்றொருவர் வீசி தாக்கிக்கொண்டனர். இதில் முருகாத்தாளும், கருப்புசாமியும் காயம் அடைந்தனர்.
உடனே அவர்கள் இருவரும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து முருகாத்தாள் அலங்கியம் போலீசில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு
போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரித்து, முருகாத்தாளை தாக்கியதாக கருப்புசாமி, அவருடைய மனைவி பாப்பாத்தி, மகன் ஆனந்தன் மற்றும் மகள் பானுமதி ஆகியோர் மீது கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதே போல் கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் முருகாத்தாள் மற்றும் அவருடைய கணவர் குமரவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முருகாத்தாள் கணவரின் தம்பிதான் கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அரிமாசங்கத்தில் பத்திரிகையாளர்கள் பொது உரிப்பினர் கூட்டம் 19/09/2014 அன்று நடைபெற்றது. இதில் தலைவர் R .V .சுப்ரமணியம் , செயலாளர் தூயவன் , பொருளாளர் பழனியப்பன் மேலும் சகபத்திரிகையாளர்கலும் கலந்துகொண்டனர் . இதில் துணை தலைவராக பணிபுரிந்த ஜோசப் ராஜா அவர்கள் ஈரோட் டிர்க்கு பணிமாற்றம் செய்யப்படபட்டதால் பி .கே .முகைதீன் அவர்கள் சக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நாளை
வியாழக்கிழமை நடக்கவுள்ள நிலையில், இது குறித்த இரு தரப்பு பிரசாரம்
உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
ஸ்காட்லாந்து மக்கள் தங்கள் எதிர்காலத்தை தங்கள் கைகளிலேயே எடுத்துக்கொள்ள
வேண்டும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சரும், ஸ்காட்லாந்து
சுதந்திரத்துக்கான பிரசாரத்துக்கு தலைமை தாங்குபவரான , அலெக்ஸ் சால்மண்ட்
கோரியிருக்கிறார்.
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றாலும், அது பவுண்டையே தனது நாணயமாக வைத்துக்கொள்ளும் என்று அவர் பிபிசியிடம் பேசுகையில் கூறினார்.
எஞ்சியிருக்கும் பிரிட்டனுடன் பவுண்டை பொது நாணயமாக வைத்துக்கொள்வது
என்பது குறித்த ஒரு பொதுப் புத்தியின் அடிப்படையிலான உடன்பாடு ஒன்றை பிற
பிரிட்டிஷ் அரசியல் தலைவர்களுடன் எட்டலாம் என்றும் அவர் கூறினார்.
ஸ்காட்லாந்து பிரிந்துபோகக் கூடாது என்று வாதாடும் அணியின் தலைவரான,
அலிஸ்டர் டார்லிங், ஸ்காட்லாந்து ஐக்கிய ராச்சியத்தின் ஒரு பகுதியாகவே
இருக்கவேண்டும் என்று கோருவதில் தேச பக்தியற்ற செயல் ஏதுமில்லை என்றார்.
போட்டி மிகவும் கடுமையாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
சமீபத்தில் வெளிவந்த மூன்று வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் ஸ்காட்லாந்து
பிரிவினைக்கு எதிரான தரப்புக்கு சுமார் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில்
கூடுதல் ஆதரவு இருக்கிறது என்றும் ஆனால் இன்னும் சுமார் 8லிருந்து 14 சதவீத
வாக்காளர்கள் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்றும் காட்டின.
'ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்'
இதனிடையே, இத்தகைய கருத்தறியும் வாக்கெடுப்புகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு
நல்லதல்ல என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் கூறியிருக்கிறார்.
இவை பொருளாதார மந்தநிலையையும் வறுமையையும்தான் விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றால், அது ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திரும்ப
விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று அவர் மீண்டும் கூறினார்.
ஆனல் ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றால் அதன் ஐரோப்பிய ஒன்றிய
உறுப்புரிமையை இழக்கக்கூடும் என்று சொல்லப்படுவதை பிபிசியிடம் பேசிய
ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் நிராகரித்தார்.
ஓய்வு பெற்ற ராணுவத் தளபதிகள் அறிக்கை
ஸ்காட்லாந்து ஐக்கிய ராச்சியத்திலிருந்து பிரிந்து போவதென்பது
சம்பந்தப்பட்ட எல்லோரையும் பலவீனப்படுத்தும் என்று பிரிட்டிஷ் ராணுவத்தில்
பணி புரிந்து ஓய்வுபெற்ற 14 உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஸ்காட்லாந்து மக்களுக்கு, பிரிட்டனின் 'சன்' பத்திரிகையின் மூலம் எழுதிய
வெளிப்படையான கடிதத்தில், இந்த ஓய்வு பெற்ற ஜெனெரல்கள், அட்மிரல்கள்
மற்றும் விமானப் படைத் தளபதிகள் , வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான
கூட்டணியான ஐக்கிய ராச்சியம், இந்தப் பிரச்சினையால் உடைந்து, அதன் மூலம்,
ஒரு சிக்கலான உலகில், மக்களை அபாயத்தில் ஆழ்த்திவிடும் என்று கூறினர்.
ஆனால், ஸ்காட்லாந்து தேசியவாதிகளின் தலைவரான, அலெக்ஸ் சால்மண்ட், இந்த
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் தலையீட்டை விமர்சித்தார். தங்களது ராணுவ
சேவையை அரசியல் காரணங்களுக்காக இவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றார்
சால்மண்ட். இந்த சேவை என்பது ஜனநாயகத்துக்கு, மகாராணிக்குமானது என்றார்
அவர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...







