Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by farook press in ,    
வால்பாறையை அடுத்துள்ள ஒரு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகம் தங்களது சம்பளத்தில் தொழில்வரிபிடித்தம் செய்ததற்கான ரசீது தரவேண்டும், தேயிலைத் தோட்டங்களில் பல்வேறு இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் தோல்வி யாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளும் வருகிறது.
எனவே இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடுதலாக கூலி வழங்கவேண்டும். தொழிலாளர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் கடந்த வாரம் வேலை நிறுத்தம் செய்தனர்.
பின்னர் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோர் இது குறித்து எஸ்டேட் நிர்வாகத்திடமும் தொழிலாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் எஸ்டேட் நிர்வாகம் எந்த வித உடன்பாட்டிற்கும் வரவில்லை. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மீது எஸ்டேட் அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து எஸ்டேட் மேலாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக வால்பாறை போலீசில் எஸ்டேட் நிர்வாகத்தினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரையும் திரும்ப பெறவேண்டும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் வேலையையும் கெடுக்காமல் தொழிலும் பாதிக்காமல் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் எஸ்டேட் தோட்ட அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போடும் போராட்டத்தை செய்துவருகின்றனர்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நேற்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
On Sunday, September 21, 2014 by farook press in ,    
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஊனத்துரையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் அங்குள்ள கெங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி திருப்பூர் மாவட்டம் அவினாசி நாடார் காலனியை சேர்ந்த அமுதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இனிய இல்லறத்தின் சாட்சியாக இவர்களுக்கு மலர்விழி (17) என்ற மகளும், தினேஷ்குமார் (16) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்–மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு மூண்டது. அமுதா தனது கணவர் சுப்பிரமணியத்தை அவினாசி போலீஸ் நிலையத்துக்கு மாறுதல் பெற்றுவரும்படி கூறிவிட்டு அவினாசிக்கு வந்து விட்டார்.
மனைவியை பார்க்க சுப்பிரமணி அவினாசி புறப்பட்டு வந்தார். நாடார் காலனி அருகே வந்தபோது அவர் திடீரென ரோட்டில் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் போலீஸ் ஏட்டு விஷம் அருந்தியதை கண்டு பிடித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி போலீஸ் ஏட்டு சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.
எந்த போலீஸ் நிலையத்துக்கு மாறுதலாகி வர நினைத்தாரோ அதே போலீஸ் நிலையத்தில் அவரின் தற்கொலை வழக்குப்பதிவாகி விசாரணை நடைபெறுகிறது
On Sunday, September 21, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாராபுரம் சாலையில் களிமேடு பகுதியில் தனியார் இடத்தில் வாடகைக் கட்டிடத்தில் டி.எஸ்.பி அலுவலகம் தற்போது இயங்கி வருகிறது. இந்த குறையை போக்க சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு பல லட்சம் செலவு செய்து நவீன வசதிகளுடன் டி.எஸ்.பி. அலுவலகம் கட்டப்பட்டது.
ஆனால் இன்னும் திறப்பு விழா செய்யப்படவில்லை. தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு மக்கள் வந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்தின் அருகில் காங்கயம் போலீஸ் நிலையம், மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் காங்கயம் கோர்ட்டு வாளகம், காங்கயம் சட்டமன்ற அலுவலகம் அமைந்துள்ளது. அதனால் மக்கள் தங்கள் குறைகளை போக்க வந்து செல்ல ஏதுவாக உள்ளது.
தனியார் இடத்தில் டி.எஸ்.பி அலுவலகம் இயங்குவதால் மாதா மாதம் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள புதிய அலுவலகத்தை திறப்பதன் மூலம் மாத வாடகை செலுத்த வேண்டியதில்லை. மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும் என்பது பொதுமக்கள் கருத்தாகும். அரசு விரைவில் முடிவு எடுக்குமா?

On Sunday, September 21, 2014 by farook press in ,    
பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்று விவசா யிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் சப்–கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அதிகாரிகள் காமநாயக்கன் பாளையம், புத்தரச்சல், கண்டியன்கோவில், வடமலைப்பாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது சிலர் பி.ஏ.பி வாய்க்காலில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவது தெரியவந்தது. இதுதொடர்பாக பி.ஏ.பி. திட்ட உதவி பொறியாளர் கருணாகரன் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் விவசாயிகளான விஜயகுமார், குருசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
On Sunday, September 21, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் ஏ.டி.காலனியைச் சேர்ந்தவர் உதயகுமார்(வயது 20). இவர் காரணம்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப்பில் லாரி மெக்கானிக்காக வேலைபார்த்து வந்தார்.
ஒர்க்ஷாப்புக்கு வந்த டிப்பர் லாரியை உதய குமாரும், ஒர்க்ஷாப் உரிமையாளருமான ஏழுமலையும் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர் பாராதவிதமாக ஜாக்கி சரிந்தது. இதில் லாரி அப்படியே இருவரையும் அமுக்கியது. லாரிக்கு அடியில் சிக்கிய உதயகுமாரும், ஏழுமலையும் படுகாயமடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி உதயகுமார் பரிதாபமாக இறந்தார்.
On Sunday, September 21, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சி அனைத்து ஆட்டு இறைச்சி வியாபாரிகள் நலச் சங்க தலைவர் தங்கராஜ் (எ) மாரிமுத்து, ஆலோசனை தலைவர் அய்யாக்குட்டி, செயலாளர் இப்பராஹிம், பொருளாளர் ராஜி ஆகியோர் கூறியதாவது:–
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் அனைவரும் திருப்பூர் மாநகராட்சி பழைய சந்தைப்பேட்டை பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள ஆடுவதைக் கூடத்தில் ஆடுவதை செய்து வருகிறோம்.
ஆனால் 4 மண்டலத்திற்கும் சேர்த்து ஒரு ஆடுவதைக் கூடம் மட்டும் இருப்பதால் அனைவரும் ஆடுவதை செய்வது என்பது சிரமமாக உள்ளது. போக்குவரத்து தூரம், கால தாமதம் ஆகிய காரணங்களால் அனைவரும் ஒரே இடத்தில் ஆடுவதை செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை நான்கு மண்டலங்களிலும் ஆடுவதைக் கூடம் அமைத்து தர வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே 4 மண்டலங்களிலும் ஆடுவதைக் கூடம் கட்டித்தர வேண்டும்.
வடக்கு பகுதி அனுப்பர் பாளையம், பாண்டியன் நகர், புதுப்பஸ்ஸ்டேண்ட், மற்றும் நல்லூர், செட்டிபாளையம், கோயில் வழி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கடைக்காரர்களுக்கு தூரம் மற்றும் போக்குவரத்து சிரமம் காலதாமதம் ஏற்படுவதால் எங்களது வியாபரத்தை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.
On Sunday, September 21, 2014 by Unknown in ,    


மதுக்கடை பார்களை மூட உத்தரவிட்ட கேரள அரசுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
மாநிலம் முழுவதும் மதுவிலக்கை ஏற்படுத்த கேரள மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அந்த மாநிலத்தில் செயல்பட்டு வந்த 418 மதுக்கடை பார்களை மூட சமீபத்தில், உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மதுக்கடை பார் உரிமையாளர்கள் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
 
இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.டி.சங்கரன், பி.டி.ராஜன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கேரள அரசு புதிய மதுவிலக்கு கொள்கையை அறிவித்துள்ள நிலையில், இந்த ரிட் வழக்குகள் வீணானவை எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.
 
மேலும், புதிய மதுவிலக்கு கொள்கையை எதிர்த்து, ஒற்றை நீதிபதியை வழக்குதாரர்கள் நாடலாம் என நீதிபதிகள் கூறினர்.
On Sunday, September 21, 2014 by Unknown in ,    




ஆவின் பால் கலப்பட முறைகேட்டால் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 
ஆவின் கூட்டுறவு நிலையங்களில் சேகரிக்கப்படும் பால், சென்னைக்கு கொண்டு வரப்படும் வழியில் திருடப்பட்டு, எடுக்கப்படும் பாலுக்கு நிகரான அளவு  தண்ணீர் அதில் கலக்கப்படுவதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வழக்கு சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.
 
இவ்விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்ததாரரும், அ.தி.மு.க. பிரமுகருமான வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
இதையடுத்து அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தினமும் சுமார் 1,500 லிட்டர் பால் திருடப்பட்டதாகவும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பால் திருட்டு நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி, ஆவின் நிறுவனத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று சிபிசிஐடி அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் வைத்தியநாதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும்போது இதுகுறித்த முழுமையான தகவல்கள் உறுதிப்படுத்தப்படும் என்றும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
On Sunday, September 21, 2014 by Unknown in ,    



பிரதமர் நரேந்திர மோடியை ‘மைக்ரோசாப்ட்’நிறுவனத்தின் நிறுவனரும், உலகப்பெரும் பணக்காரருமான பில் கேட்ஸ்  டெல்லியில் சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின் போது அவர், பிரதமர் மோடி சமூக சுகாதார திட்டத்தில் கவனம் செலுத்துவதற்கும், அனைத்து மக்களுக்கும் வங்கிக்கணக்கு தொடங்கும் நோக்கத்துடன் ‘ஜன தன யோஜனா’ திட்டத்தை செயல்படுத்துவதற்கும் பாராட்டு தெரிவித்தார்.
 
இதேபோன்று, பில் கேட்சின் சமூக சேவைகளை மோடி பாராட்டினார்.
 
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பெரும்இழப்பை சந்தித்துள்ள காஷ்மீர் மாநிலத்துக்கு உடனடி நிவாரணமாக 7 லட்சம் டாலர் நிதி (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4¼ கோடி) வழங்குவதாக பில்கேட்ஸ் தெரிவித்தார்.
 
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோரையும் பில்கேட்ஸ் சந்தித்துப் பேசினார்.
 
அப்போது கிராமப்புற சுகாதார மேம்பாடு, மோடி அரசு தொடங்கியுள்ள பிரமாண்ட கிராமப்புற சுகாதார பிரசார இயக்கத்தில் தாங்கள் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறு பற்றி பில்கேட்ஸ் விவாதித்தார்.