Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
உடுமலையில் அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணாவின் உருவசிலைக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
அ.தி.மு.க.
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவிற்கு பொதுக்குழு உறுப்பினர் எம்.கண்ணாயிரம் தலைமை தாங்கினார். அங்குள்ள அண்ணாவின் உருவசிலைக்கு மடத்துக்குளம் தொகுதி சி.சண்முகவேலு எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் வக்கீல் ஏ.கே.மனோகரன், கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குனர் பி.சிதம்பரநாதன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என்.வாசுதேவன், நகர பேரவை செயலாளர் வி.என்.வெங்கடேஷ், நகர கழக மாவட்ட பிரதிநிதி யு.ஜி.கே.சற்குணசாமி, துணைச்செயலாளர் எம்.முருகவேல், கவுன்சிலர் ஜி.தனலட்சுமி, ஜெ.ஹரிபிரசாத், ஜெ.மணிவண்ணன், பாபு, கணியூர் நடராஜ், பொற்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
தி.மு.க. சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு நகர செயலாளர் சி.வேலுச்சாமி தலைமை தாங்கி உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாவின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செ.செல்வராஜ், நகர கழக அவைத்தலைவர் இந்துபாய் என்கிற சாகுல்அமீது, துணை செயலாளர் வக்கீல் எம்.வெங்கடாசலம், பொருளாளர் டி.ஜவஹர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கராஜ் என்கிற மெய்ஞான மூர்த்தி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் தா.வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், முபாரக் அலி, நகராட்சி கவுன்சிலர்கள் அப்பாசாமி, பாலசுப்பிரமணியன், ஆதம்ஸா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Tuesday, September 16, 2014 by farook press in ,    
மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு மூல ஸ்தாபனம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஒருநிலை கோபுர விமானம் ஆகியவை அமைத்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி கடந்த 13–ந்தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் மங்கள இசையுடன் தொடங்கி ரக்ஷாபந்தனம், யாகசாலை பூஜைகள், ஹோமங்கள், ஆகுதிகள், முளைப்பாரி எடுத்தல், புதிய விக்ரகங்கள் பிம்பசுத்தி, இறைதிருமேனிகள் நிலைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மங்கள இசையுடன் தொடங்கி லட்சுமி கணபதி ஹோமம், 4–ம் கால யாக வேள்விகள், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதை தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
On Tuesday, September 16, 2014 by farook press in ,    
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் இயற்கை இன்னல்கள் ஏற்படும்போது தானே காப்பாற்றியும், பிறரை காப்பாற்றுவது எவ்வாறு என்று செயல்முறை விளக்கம் குறித்த நிகழ்ச்சி பல்லடத்தில் உள்ள மணிமகாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பல்லடம் தாசில்தார் அம்சவேணி, நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழு தலைவர் பிஸ்வால் தலைமையில் அக்குழுவினர் வெள்ளம், சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், கட்டிடம் இடிந்த பின் அக்கட்டிடத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, வெள்ளப்பெருக்கு வீடு சூழ்ந்து கொண்டால் வெளியேறுவது, பாம்பு கடித்தால் எவ்வாறு முதலில் சிகிச்சை மேற்கொள்வது, விஷவாயு வெளிவரும்போது செய்ய வேண்டியதை குறித்து அக்குழுவினர் செய்து காட்டினார்கள்.
On Tuesday, September 16, 2014 by farook press in ,    
உடுமலை அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயன்றுள்ளனர்
சிறுத்தைப்புலி நடமாட்டம்
உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதியில் அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சின்னாறு வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சிறுத்தைப்புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய், காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன.
ஒரு சில நேரங்களில் வனப்பகுதியில் இருந்து யானை காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதுண்டு. இந்த நிலையில் கடந்த 4–ந்தேதி அமராவதிநகரில் உள்ள பள்ளிக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்றை சிறுத்தைபுலி கொடூரமாக கடித்து கொன்றுள்ளது. மேலும் வன அதிகாரி வீட்டில் உள்ள நாய்க்குட்டியை கடித்து இழுத்து சென்று உள்ளது.
கூண்டு
மேலும் பல இடங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை பார்த்து பொதுமக்கள் பார்த்து அச்சம் அடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சிறுத்தைப்புலியின் நடமாடத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுத்தைப்புலியை பிடிக்க கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற இடத்திற்கு சற்று தொலையில் கூண்டு வைத்துள்ளனர். கூண்டுக்குள் சிறுத்தைப்புலியை பிடிக்க ஆட்டுக்குட்டி ஒன்றையும் வைத்துள்ளனர். அமராவதி நகர் பகுதி மக்களை பீதிக்கு உள்ளாகி வரும் சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சிக்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
செந்துறை,
6 பெண்கள், குழந்தை உள்பட 8 பேரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்தது எப்படி என்பது பற்றி அந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒப்பந்தக்காரர்
செந்துறை அருகே உள்ள சேந்தமங்கலம் ஏரிக்கரையை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அப்பகுதியின் அருகில் உள்ள ஒரு சிமெண்டு ஆலையில் ஒப்பந்தக்காரராக இருந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களின் குழந்தைகள் மகாலட்சுமி, கீர்த்தனா, இன்பதமிழன். வேல்முருகன் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோருடன் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வேல்முருகனின் பெற்றோர் பெருமாள், மல்லிகா மற்றும் அவரது மகள் மகாலட்சுமி, மகன் இன்பத்தமிழன் ஆகியோர் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சென்று படுத்துக்கொண்டனர். வேல்முருகன், அவரது மனைவி பார்வதி, 1 வயது மகள் கீர்த்தனா ஆகியோர் குடிசை வீட்டில் தூங்கினார்கள்.
3 பேர் கொலை
மறுநாள் அதிகாலை வேல்முருகன் வீட்டிற்கு டிரைவர் விஜயகாந்த் டிராக்டரை எடுக்க சென்றார். அப்போது அங்கு வேல்முருகன் கோடாரியால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் காயங்களுடன் குழந்தை கீர்த்தனா மயங்கி கிடந்தது. சிறிது தூரத்தில் பார்வதி நிர்வாண நிலையில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது மார்பில் சூலத்துடன் கூடிய சாமி சிலை ஒன்றும் கிடந்தது.
இதனைக்கண்ட விஜயகாந்த் அலறியடித்து கொண்டு ஓடி உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து மயங்கிய நிலையில் கிடந்த குழந்தை கீர்த்தனாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையும் இறந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
5 தனிப்படை
இதே போல் அரியலூர் அருகே கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. தனியார் அறவை ஆலையில் வேலை பார்த்து வந்த இவருக்கு 3 மகள்கள். இதில் ஒரு மகள் சரஸ்வதி (35) கணவரை பிரிந்து தாயுடன் குடிசை வீட்டில் தங்கி, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 29–ந் தேதியன்று இரவு வீட்டில் லட்சுமியும், சரஸ்வதியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த 5 கொலைகள் தொடர்பாக துப்பு துலக்க போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.
வாக்குமூலம்
இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பீடாக்கடை உரிமையாளர் செல்வத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி, பொருட்களை திருடிய வாலிபரை தம்மம்பட்டி போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை அடுத்த கத்தரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்னக்கரை மகன் சுப்பராயன் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொலை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது குறித்து சுப்பராயன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாவது;–
நான் லாரி கிளீனராக வேலை பார்த்தேன். பின்னர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் 2 நாட்களாக வேலை தேடி அலைந்தேன். வேலை கிடைக்கவில்லை. சாப்பிடுவதற்கு பணம் இல்லாததால், சிமெண்டு ஆலை எதிரே இருந்த கோழிக்கடையில் உள்ளே புகுந்து ஒரு கோழியையும், கத்தியையும் எடுத்து கொண்டு வெளியே வந்தேன். அதனை சுட்டு சாப்பிடலாம் என்று சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சேந்தமங்கலத்தில் தனியாக இருந்த வீட்டை பார்த்ததும் அதில் பணம், நகை கிடைக்கும் என்று உள்ளே சென்றேன்.
கோடாரியால் வெட்டினேன்
வீட்டிற்குள் சட்டையில் இருந்த 200 ரூபாய் மற்றும் வேல்முருகனின் செல்போனை எடுத்தேன். அப்போது பார்வதி எழுந்து எனது கையை பிடித்து விட்டார். அதனால் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து பார்வதியை வெட்டினேன். சத்தம் கேட்டு எழுந்த வேல்முருகனையும் வெட்டினேன். குழந்தை அழுது கொண்டு இருந்ததால் கோடாரியால் தாக்கினேன்.
பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பார்வதியை கற்பழித்துவிட்டு, மேலும் பணம், நகைகள் உள்ளனவா என்று தேடி பார்த்துவிட்டு, அங்கே நிறுத்தி இருந்த வேல்முருகனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றேன்.
பணம் கொள்ளை
அப்போது செந்துறை போலீசார் இரவு ரோந்தின் போது வழிமறித்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து பொன்பரப்பி சென்ற போது பெட்ரோல் தீர்ந்து விட்டதால் முந்திரி காட்டிலேயே மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டேன். இதேபோன்று கயர்லாபாத்தில் தனியாக இருந்த தாய், மகளை கொன்றுவிட்டு அதில் சரஸ்வதியை கற்பழித்துவிட்டு அவர்கள் வைத்து இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் திருச்சி கல்லக்குடியில் ஜெயமேலு (82) என்ற மூதாட்டியையும், 2012–ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் பத்திரகவுண்டம்பாளையத்தில் பணம் தரமறுத்த தனது பாட்டியையும் கொலை செய்ததையும், தம்மம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்கல் குவாரியில் கிளீனராக வேலை பார்த்தபோது அங்கு வட்டி தொழில் செய்து வந்த சின்னபாப்பு (45) என்ற பெண்ணையும் கொடூரமாக கற்பழித்து கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 500–ஐ கொள்ளையடித்ததையும் சுப்பராயன் ஒப்புக்கொண்டார்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து அரியலூர், திருச்சி, சேலம் ஆகிய 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் சுப்பராயனை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காமக்கொடூரன் ஜெய்சங்கர் போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒருவனே இத்தனை கொலைகளை தடயமில்லாமல் செய்து இருப்பது போலீசாரிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
On Monday, September 15, 2014 by farook press in ,    
பரமத்தி வேலூர் அருகே குடும்பத்தகராறில் மகன், மகளுடன் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் முன்பு கிடந்த அவர்கள் 3 பேரின் பிணங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி டிரைவர்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கொந்தளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் முனியப்பன் (வயது 35). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி (28). இவர்களுக்கு நரேந்திரபிரசாத் (11) என்ற மகனும், கவுசிகா (10) என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ்வரி கொந்தளம் வெங்கமேடு பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது முனியப்பன் தனது மகன் நரேந்திரபிரசாத் மற்றும் மகள் கவுசிகா ஆகியோருடன் நண்பரது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

பிணங்களாக கிடந்தனர்

இந்த நிலையில் மகேஷ்வரி தந்தை வீட்டில் இருந்து நேற்று காலை தனது வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது வீட்டினுள் அமைக்கப்பட்டு இருந்த தென்னை கீற்று வேலி அருகே மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்ததையும், அந்த மோட்டார் சைக்கிளுக்கு கீழ் தனது மகன் நரேந்திரபிரசாத், மகள் கவுசிகா மற்றும் கணவர் முனியப்பன் ஆகியோர் பிணமாக கிடந்ததையும் பார்த்து மகேஷ்வரி கதறி அழுதார்.

இந்த சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெஸ்கி, பரமத்தி வேலூர் துணை சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விஷம் குடித்து தற்கொலை

பின்னர் இறந்து போன 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக லாரி டிரைவர் முனியப்பன் தன் குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர்களின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே குடும்பத்தில் தந்தை மற்றும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

On Monday, September 15, 2014 by farook press in ,    
தேன்கனிக்கோட்டை அருகே போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேர் கைது செய்யப் பட்டார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி

தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது இருது கோட்டை. இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 36). இவர் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ஆவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் அதே ஊரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென் றார்.

அப்போது கடைக்காரரு டன் தகராறு செய்தார். இது தொடர்பாக தேன்கனிக் கோட்டை போலீஸ் நிலையத் தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேன்கனிக் கோட்டை போலீஸ் ஏட்டு வடிவேல் மற்றும் 2 போலீசார் இருதுகோட்டைக்கு சென் றனர்.

6 பேர் மீது வழக்கு

அப்போது அங்கிருந்த செல்வம், மற்றும் மரியப்பா, முனிராஜ், நாகராஜ். சாப் ரானப்பள்ளியை சேர்ந்த சுரேஷ், ஜெயராமன் ஆகிய 6 பேரும் சேர்ந்து போலீசாரை தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

அது குறித்து ஏட்டு வடிவேல் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ் கர் வழக்குப்பதிவு செய்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக செல்வம் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். அவர்களில் முனிராஜ், சுரேஷ், ஜெயராமன் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். செல்வம், மரியப்பா, நாகராஜ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரி அருகே 2 இடங்களில் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வழங்கல் அலுவலர் பிச்சைராமன் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், மாதன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ரோந்துப்பணி

இந்த குழுவினர் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேன்கனிக்கோட்டை வட்டம் உடையாண்டஅள்ளி அருகே சாலையோரம் உள்ள புளியமரத்தின் கீழ் கேட்பாரற்று 15 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் இந்த ரேஷன் அரிசி கர்நாடக மாநிலத்திற்கு கடத்த வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல் ஒப்பதவாடி கூட் ரோடு அருகில் சாலையோரம் 14 மூட்டைகளில் ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை ஆந்திராவுக்கு கடத்த முயன்றதுவிசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 இடங்களில் இருந்தும் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றி, கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதன் மொத்த எடை 1½ டன் ஆகும். மேலும் இந்த ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
மார்த்தாண்டத்தில் இருந்து முக்கூட்டுக்கல்லுக்கு அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் நேற்று முக்கூட்டுக்கல்லில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தது. மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் வந்ததும், அந்த பஸ் பழுதடைந்து சாலையில் நின்றது. தொடர்ந்து, அதில் இருந்த பயணிகள் இறக்கிவிடப் பட்டனர். 

பின்னர், போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஊழியர்கள் பஸ்சை சீரமைக்கும் முயற் சியில் ஈடுபட்டனர்.