Monday, October 27, 2014



கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் வெள்ள அபாயம் குறித்தும், அதில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை நடைபெற்றது. அதன்படி வெள்ள அபாய காலங்களில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்ற எளிதாக கிடைக்கக் கூடிய வாழைமரம், கயிறு, பரிசல், மரங்கள் உள்ளிட்டவை மூலம் காப்பாற்றுவது குறித்து ஒத்திகை நடத்தி காண்பித்தனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி நிலைய அலுவலர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் தியாகராஜன், சுந்தா, ஜெர்மையா, கலைச்செல்வன், கார்த்திகேயன், பொன்னர், செல்வம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.


சென்னையில் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபட இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ.8-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான பறக்கும் பாதையில் ரெயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
அடுத்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி முறையாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது. இதற்கான கட்டணம் தற்போது தற்காலிக அடிப்படையில் தயாரிக்கப்பட்டு பரிசீலித்து வருகிறோம். பின்னர் முறையாக அரசின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அரசு ஆய்வு செய்து, மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதில் சில மாற்றங்களை செய்து முறையான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
மாதிரி கட்டணம் விவரம்:- முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.8-ம், 2 முதல் 4 கிலோ மீட்டர் வரை ரூ.10-ம், 4 முதல் 6 கிலோ மீட்டர் வரை ரூ.11-ம், 6 முதல் 9 கிலோ மீட்டர் வரை ரூ.14-ம், 9 முதல் 12 கிலோ மீட்டர் வரை ரூ.15-ம், 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை ரூ.17-ம், 15 முதல் 18 கிலோ மீட்டர் வரை ரூ.18-ம், 18 முதல் 21 கிலோ மீட்டர் வரை ரூ.19-ம், 21 முதல் 24 கிலோ மீட்டர் வரை ரூ.20-ம், 27 கிலோ மீட்டருக்கு ரூ.23-ம் கட்டணமாக வசூலிக்க மாதிரி கட்டண விவரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண விவரம் டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் தமிழக அரசு இதனை முறையாக பரிசீலித்து விரைவில் அறிவிக்க உள்ளது.
மெட்ரோ ரெயில் சேவையில் வண்ணாரப்பேட்டை முதல் எழும்பூர், மேதின பூங்கா முதல் சென்டிரல், மே தின பூங்கா முதல் ஏஜி-டி.எம்.எஸ், சைதாப்பேட்டை முதல் ஏஜி-டி.எம்.எஸ், நேரு பூங்கா முதல் எழும்பூர், ஷெனாய் நகர் முதல் திருமங்கலம், பச்சையப்பன் கல்லூரி முதல் ஷெனாய் நகர் இடையே தலா இரண்டு மார்க்கத்திலும் 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் மிஷின்) வீதம் 14 எந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுதவிர பச்சையப்பன் கல்லூரியிலிருந்து, நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் இடையே தலா ஒன்று வீதம் 2 எந்திரங்களும், கீழ்ப்பாக்கம் முதல் நேரு பூங்கா வரை உள்ள பகுதிகளில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதில் கீழ்ப்பாக்கம் முதல் நேரு பூங்கா மற்றும் மேதின பூங்கா முதல் சென்டிரல் வரை உள்ள பணிகள் தொடங்கப்படவில்லை. மீதம் உள்ள அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி 21 கிலோ மீட்டர் தூரம் அதாவது 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.
முதல் சுரங்கம்தோண்டும் எந்திரம் ஷெனாய் நகரிலிருந்து அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர் மற்றும் திருமங்கலம் ஆகிய 4 ரெயில் நிலையங்களின் இடையே உள்ள 2 ஆயிரத்து 797 மீட்டர் தூரத்தை கடந்து வெற்றிகரமாக திருமங்கலம் ரெயில்நிலையத்தை அடுத்துள்ள வளைவு வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
Sunday, October 26, 2014
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் “சூரியூர்”. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான். திருச்சியை சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல் பார்த்துக்கொண்டது.
இதை செயற்கைக்கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. பெப்சி(Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. இதையறிந்த பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தோம். அப்போது ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாக கலக்கவிட்டனர். அன்றுமுதல் சூரியூரை சார்ந்த திரு. ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையின் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலே கட்டப்பட்டிருப்பதை நகர் ஊரமைப்பு துறை மூலம் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளது.
இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு “ உலக தண்ணீர் தினம் – 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டோம். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை.
தற்போது வெளிவந்துள்ள “கத்தி” திரைப்படத்தின் மூலம் அனைத்துதரப்பட்ட மக்களுக்கும் “தண்ணீரின் அவசியமும், உரிமையும்” தெரியவந்துள்ளது. நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் நம் தலைமுறைகளின் தாகத்தை தணிக்கவேண்டுமே தவிர, அந்நிய நாட்டவர்களின் பணபசிக்கும், நம் நாட்டு துரோகிகளின் ஆடம்பர பசிக்கும் விட்டுவிடக்கூடாது.
“கத்தி” திரைப்படத்தில் வரும் கற்பனை கதையை பார்த்துவிட்டு கண்ணீர் விடும், ஆதங்கப்படும், கோபப்படும் ரசிகர்களே !
சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள். தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது “சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்று எங்களுடன் இணையபோகிறீர்களா? மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்.
கரம் கொடுங்கள்
மாற்றி அமைப்போம்
Join With Us:
https://facebook.com/thanneer3
https://facebook.com/vinothraj.seshan
தண்ணீர் இயக்கம்
www.thanneer.org வினோத்ராஜ் சேஷன்: 9500189319 ivfvinothraj@gmail.com
'ரமணா' படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நண்பராக விளங்கினார்.
அதன்பின் வந்த 'கஜினி' போன்ற படங்கள் வியாபார ரீதியில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றாலும், அவருடைய 'துப்பாக்கி' இளைஞர்களுக்கு நல்ல உரமாக விளங்கியது. பல பத்திரிகைகளின் பாராட்டுகளும், பத்திரிகையாளர்களின் பாராட்டுக்களும் பெற்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.
தற்போது 'கத்தி' பல சம்பவங்களையும், செய்திகளையும் கடந்து வெளியாகியுள்ளது. 'கத்தி' பட தயாரிப்பாளர் பிரச்சனை. உறையிலிருந்து வெளிவந்த 'கத்தி' பல உயிர்களை பலியாக்கிவிட்டு, மீண்டும் உறைக்குள் திரும்பி அமைதியாகி விடுவதைப்போல 'கத்தி' பட விவகாரம் ஆகிவிட்டது.
'கத்தி' படத்தைப் பற்றி கொளுத்திப் போட்ட வெடிகள் அனைத்தும் 'புஷ்வானம்' ஆகிப்போனது. சில வெடிகள் பண மழையால் நனைந்து வெடிக்காமல் போனது.
தமிழ் அமைப்புகள் நிலைப்பாடுகள், தங்களை தமிழ் உணர்வாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு வன்முறையில் இறங்கி வியாபாரம் செய்தவர்கள் நிலையைப் பற்றியெல்லாம் நாம் பிறகு பேசுவோம். முதலில் விவசாயிகளின் பிரச்னையை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கும் நண்பர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு பாராட்டுக்கள்.
மக்கள் போராளியாக வாழ்ந்து மறைந்த தோழர்.ஜீவானந்தத்தின் பெயரை தனது முக்கிய கதாபாத்திரத்திற்கு வைத்த ஏ.ஆர்.முருகதாஸூக்கு கூடுதல் பாராட்டுக்கள்.
'ரமணா' படத்தின் மூலம் நண்பர் என்று நினைக்கத் தூண்டிய ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது 'தோழர்' என்று அழைக்கத் தூண்டுகிறது.
ஒரு பெரிய கமர்ஷியல் ஹீரோ விஜய். அப்படிப்பட்ட கதாநாயகனை வைத்து தன்னுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தி, எந்த சமுதாய அக்கறையும் இல்லாமல் வாழும் சினிமா ரசிகர்களையும், திருப்திப்படுத்தி வெற்றி கண்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதற்கிடையில் படம் வெளிவர உறுதுணையாக இருந்தவர்களில் பத்திரிகையாளர்களும் உண்டு. ரஷ்யாவின் தந்தை என்று அழைக்கப்படும் லெனின் திரைப்படங்களின் ஆளுமையை உணர்ந்து ஒரு அபிப்ராயத்தை சொன்னார்.
''சினிமா'' என்பது ஒரு ஊசி (CINEMA IS AN INJECTION). வியாதியை குணப்படுத்தும் ஊசியாகவும் பயன்படுத்தலாம். அதே சமயத்தில் உயிரைக்
கொல்லும் விஷ ஊசியாகவும் பயன்படுத்தலாம். அது அந்தந்த மருத்துவர்களைப் பொருத்து. அதாவது திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் இயக்குநர்களைப் பொருத்தது.
இதைப்போலவே கத்தியின் பயன்பாட்டைப் பற்றி ஒப்பிட்டு தந்தைப் பெரியார் சொல்லியுள்ளார். (கத்தியை திருடன் பயன்படுத்துவதும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் பயன்படுத்துவதும்) 'திருவிளையாடல்' படத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்கள் எழுதிய ஒரு வசனம் நாகேஷ் அவர்களால் பேசப்பட்டது.
'' பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்'' என்பதே அது. அதுபோல் நண்பர் ஏ.ஆர்.முருகதாஸ் 'கத்தி' படத்தில் சில குறிப்பிட்ட காட்சியில் பத்திரிகையாளர்களின் நிலையைப்பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் ஒரு உணர்வுள்ள பத்திரிகையாளன் என்கிற முறையில் என்னுடைய வருத்தத்தையும், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் என்ற முறையில் எங்களுடைய கண்டனத்தையும் அன்புடன் தெரிவிக்க விரும்புகிறோம்.
சராசரி மனிதனைவிட, வித்தியாசமான சிந்தனையுடையவர்களே கலைஞர்களாக வருவது போல், சமூக மாற்றத்திற்காக தன்னுடைய எழுத்துக்களால் ஏதாவது ஒரு துரும்பாவது நிகழ்ந்து விடாதா என்று நினைப்பவர்களே எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் இத்துறைக்கு வருகின்றனர்.
சமூக விரோதிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் நடுவே சிக்கித் தவித்து, எங்கள் உணர்வுகளைப் போராடி பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.
பெரும்பாலான ஊடங்களும், செய்திகளும், கட்சிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் சொந்தமாகிவிட்ட வேலையில் கஷ்டங்களும், கொள்கைகளும் மட்டுமே எங்களுக்கு தோளோடு தோளாக விளங்கி வருகிறது.
தினம், தினம் எத்தனையோ அவலங்கள் எங்கள் காதுகளுக்கும், சிலது கண்களுக்கும் கூட அறியப்படுகிறது. எங்களின் உயிரைப்பற்றிக் கூட கவலைப்படாமல் அதை செய்தியாக்கி அனுப்புவோம்.ஆனால், அதை வெளியிடுவது முதலாளிகள் கையில்தான் உள்ளது. (எங்களுக்கு எதிராக திருப்பப்படுவதும் உண்டு) நல்ல கதைக்களத்திற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இல்லாமல் போவதுபோல...
ஏ.ஆர்.முருகதாஸ் மிகப் பெரிய கடலை கண்டு வியக்க வேண்டும். ஏதோ
ஒரு மூலையில் வந்து கலக்கும் கூவத்தை கண்டு வருந்தக்கூடாது.
யார், யாருக்கோ ஆதரவான படம். யார், யாருக்கோ எதிரான படம் என்பதெல்லாம் போய், சில காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான படமாக எண்ணத் தோன்றுவதாக சிலர் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கதைக்கு அவசியமாகவே இருந்தாலும், படத்தின் இறுதி தீர்ப்பிற்கு ஊடகங்களின் பங்களிப்பே காரணமாக விளங்குவதாக உருவாக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில பத்திரிகையாளர்களின் இச்செயல்களைக் கொண்டு, அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளிவர உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொலைக்காட்சி’, ‘ புதிய தலைமுறை’ போன்ற பல ஊடகங்கள் அதேபோல் பல பத்திரிகைகள் விவசாயிகளின் பிரச்சனைகளை தொடர்ந்து காண்பித்து வருகிறது.
ஆனால், யாருமே உதவ முன் வருவது இல்லை என்று சொல்லும் கருத்து ஏற்புடையது அல்ல. நல்ல கருத்துக்களையும், சமூக மாற்றத்திற்கான இது போன்ற படங்களை தொடர்ந்து இயக்கி வரும், நண்பர் ஏ.ஆர்.முருகதாஸ் எங்களின் உணர்வையும் மதித்து இனி எடுக்கும் படங்களில் செயல்பட வேண்டுகிறோம். அதே சமயத்தில் எங்களுடைய கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றி இரண்டு வகை. ஒரு வகை எல்லோரையும் கொன்று குவித்து வெற்றிப் பெறுவது. மற்றொன்று, எல்லோரையும் கூட்டிக்கொண்டு போய் வெற்றிப் பெறுவது. அப்படிப்பட்ட வெற்றியைத்தான் நாம் அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியும்.
'கத்தி' பட வெற்றியை உங்களோடு சேர்ந்து எங்களை கொண்டாட முடியாமல் செய்துவிட்டீர்கள். இருப்பினும் 'கத்தி' படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
- டி.எஸ்.ஆர்.சுபாஷ்,
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

