Monday, October 27, 2014

On Monday, October 27, 2014 by Unknown in    
வடகிழக்கு பருவமழை தீவிரம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 தினங்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அதேபோன்று மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து கடந்த ஒரு மாதமாக தடப்பள்ளி–அரக்கன் கோட்டை மற்றும் கீழ்பவானி பாசனத்துக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் 75 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த 14–ந்தேதி 70 அடியாக சுருங்கியது.
தற்போது பெய்யும் பருவ மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 78.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 642 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 14–ந்தேதிக்கு பின்னர் பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியில் இருந்து 78.34 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுதும் கடந்த சில நாட்களாக மழை பெய்வதால் பவானி ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கீழ்பவானி பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு 900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் 84 மி.மீட்டர் மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக பெருந்துறையில் 63 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
On Monday, October 27, 2014 by Unknown in    
கந்தசஷ்டி விழா தொடக்கம்: முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
தமிழ் கடவுளாம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாக்கள் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை புகழ்மிக்க சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவில், ஈரோடு திண்டல்மலை வேலாயுத சாமி கோவில், கோபி பச்சை மலை பாலமுருகன் கோவில், பவளமலை முத்து குமாரசாமி கோவில் மற்றும் ஈரோடு காசி பாளையம் மலேசிய பாலமுருகன் கோவில் ஆகிய கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் அபிசேகமும், சிறப்பு அலங்கார ஆராதனை நிகழ்ச்சியுடன் நடந்து வருகிறது.
கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பக்கத்து மாவட்டமான திருப்பூர், கோவை மாவட்டத்திலிருந்தும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வழிபட வந்த வண்ணம் உள்ளனர்.
திண்டல்மலை முருகன் கோவிலிலும் காலையிலிருந்தே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல் கோபி பச்சைமலை, பவளமலை முருகன் கோவில்களுக்கும் கந்தசஷ்டி விழா தொடங்கிய நாளிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டுச் செல்கிறார்கள்.
மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. அனைத்து கோவில்களிலும் வரும் 29–ந் தேதி சூரசம்ஹார விழாவும், 30–ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.
இன்னும் ஒரிரு நாட்களில் முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் பலர் காவடிகள் எடுத்து வருவார்கள், அலகுகள் குத்தியும், அந்தரத்தில் தொங்கியபடி பறக்கும் காவடியும் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். 
On Monday, October 27, 2014 by Unknown in    
தவிட்டுப்பாளையத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ஒத்திகை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் வெள்ள அபாயம் குறித்தும், அதில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை நடைபெற்றது. அதன்படி வெள்ள அபாய காலங்களில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்ற எளிதாக கிடைக்கக் கூடிய வாழைமரம், கயிறு, பரிசல், மரங்கள் உள்ளிட்டவை மூலம் காப்பாற்றுவது குறித்து ஒத்திகை நடத்தி காண்பித்தனர்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி நிலைய அலுவலர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் தியாகராஜன், சுந்தா, ஜெர்மையா, கலைச்செல்வன், கார்த்திகேயன், பொன்னர், செல்வம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
On Monday, October 27, 2014 by Unknown in ,    
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதள மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிக்கை
18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31–12–1996க்கு முன்னர் பிறந்தவர்கள்) புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் பேரில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக இன்டர்நெட் மையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வசதி சென்ற ஆண்டு முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இணையதள மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவத்தை குறைந்த செலவில் விரைவாகவும், எளிதாகவும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுவதுடன் அலைச்சலும் காலவிரயமும் தவிர்க்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் தாங்கள் அளித்த மனுவின் நடவடிக்கை விவரங்களை இம்மையங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளது. சொந்தமாக இணையதள வசதி உள்ளவர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இணையதள மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க இணையதள மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
On Monday, October 27, 2014 by Unknown in ,    

சென்னையில் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபட இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ.8-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான பறக்கும் பாதையில் ரெயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

அடுத்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி முறையாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது. இதற்கான கட்டணம் தற்போது தற்காலிக அடிப்படையில் தயாரிக்கப்பட்டு பரிசீலித்து வருகிறோம். பின்னர் முறையாக அரசின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அரசு ஆய்வு செய்து, மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதில் சில மாற்றங்களை செய்து முறையான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

மாதிரி கட்டணம் விவரம்:- முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.8-ம், 2 முதல் 4 கிலோ மீட்டர் வரை ரூ.10-ம், 4 முதல் 6 கிலோ மீட்டர் வரை ரூ.11-ம், 6 முதல் 9 கிலோ மீட்டர் வரை ரூ.14-ம், 9 முதல் 12 கிலோ மீட்டர் வரை ரூ.15-ம், 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை ரூ.17-ம், 15 முதல் 18 கிலோ மீட்டர் வரை ரூ.18-ம், 18 முதல் 21 கிலோ மீட்டர் வரை ரூ.19-ம், 21 முதல் 24 கிலோ மீட்டர் வரை ரூ.20-ம், 27 கிலோ மீட்டருக்கு ரூ.23-ம் கட்டணமாக வசூலிக்க மாதிரி கட்டண விவரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண விவரம் டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் தமிழக அரசு இதனை முறையாக பரிசீலித்து விரைவில் அறிவிக்க உள்ளது.

மெட்ரோ ரெயில் சேவையில் வண்ணாரப்பேட்டை முதல் எழும்பூர், மேதின பூங்கா முதல் சென்டிரல், மே தின பூங்கா முதல் ஏஜி-டி.எம்.எஸ், சைதாப்பேட்டை முதல் ஏஜி-டி.எம்.எஸ், நேரு பூங்கா முதல் எழும்பூர், ஷெனாய் நகர் முதல் திருமங்கலம், பச்சையப்பன் கல்லூரி முதல் ஷெனாய் நகர் இடையே தலா இரண்டு மார்க்கத்திலும் 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் மிஷின்) வீதம் 14 எந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுதவிர பச்சையப்பன் கல்லூரியிலிருந்து, நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் இடையே தலா ஒன்று வீதம் 2 எந்திரங்களும், கீழ்ப்பாக்கம் முதல் நேரு பூங்கா வரை உள்ள பகுதிகளில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதில் கீழ்ப்பாக்கம் முதல் நேரு பூங்கா மற்றும் மேதின பூங்கா முதல் சென்டிரல் வரை உள்ள பணிகள் தொடங்கப்படவில்லை. மீதம் உள்ள அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி 21 கிலோ மீட்டர் தூரம் அதாவது 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

முதல் சுரங்கம்தோண்டும் எந்திரம் ஷெனாய் நகரிலிருந்து அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர் மற்றும் திருமங்கலம் ஆகிய 4 ரெயில் நிலையங்களின் இடையே உள்ள 2 ஆயிரத்து 797 மீட்டர் தூரத்தை கடந்து வெற்றிகரமாக திருமங்கலம் ரெயில்நிலையத்தை அடுத்துள்ள வளைவு வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது.

Sunday, October 26, 2014

On Sunday, October 26, 2014 by Unknown   

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் “சூரியூர்”. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான். திருச்சியை சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல் பார்த்துக்கொண்டது.
இதை செயற்கைக்கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. பெப்சி(Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. இதையறிந்த பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தோம். அப்போது ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாக கலக்கவிட்டனர். அன்றுமுதல் சூரியூரை சார்ந்த திரு. ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையின் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலே கட்டப்பட்டிருப்பதை நகர் ஊரமைப்பு துறை மூலம் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளது.
இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு “ உலக தண்ணீர் தினம் – 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டோம். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை.
தற்போது வெளிவந்துள்ள “கத்தி” திரைப்படத்தின் மூலம் அனைத்துதரப்பட்ட மக்களுக்கும் “தண்ணீரின் அவசியமும், உரிமையும்” தெரியவந்துள்ளது. நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் நம் தலைமுறைகளின் தாகத்தை தணிக்கவேண்டுமே தவிர, அந்நிய நாட்டவர்களின் பணபசிக்கும், நம் நாட்டு துரோகிகளின் ஆடம்பர பசிக்கும் விட்டுவிடக்கூடாது.
“கத்தி” திரைப்படத்தில் வரும் கற்பனை கதையை பார்த்துவிட்டு கண்ணீர் விடும், ஆதங்கப்படும், கோபப்படும் ரசிகர்களே !
சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள். தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது “சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்று எங்களுடன் இணையபோகிறீர்களா? மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்.
கரம் கொடுங்கள்
மாற்றி அமைப்போம்

Join With Us:
https://facebook.com/thanneer3
https://facebook.com/vinothraj.seshan
                                                           தண்ணீர் இயக்கம்
www.thanneer.org                                                வினோத்ராஜ் சேஷன்: 9500189319                                        ivfvinothraj@gmail.com

On Sunday, October 26, 2014 by Unknown   

                          'ரமணா'  படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நண்பராக விளங்கினார்.
                அதன்பின் வந்த 'கஜினி' போன்ற படங்கள் வியாபார ரீதியில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றாலும், அவருடைய 'துப்பாக்கி' இளைஞர்களுக்கு நல்ல உரமாக விளங்கியது. பல பத்திரிகைகளின் பாராட்டுகளும், பத்திரிகையாளர்களின் பாராட்டுக்களும் பெற்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.
                தற்போது 'கத்தி'  பல சம்பவங்களையும், செய்திகளையும் கடந்து வெளியாகியுள்ளது. 'கத்தி'  பட தயாரிப்பாளர் பிரச்சனை. உறையிலிருந்து வெளிவந்த 'கத்தி' பல உயிர்களை பலியாக்கிவிட்டு, மீண்டும் உறைக்குள் திரும்பி அமைதியாகி விடுவதைப்போல 'கத்தி' பட விவகாரம் ஆகிவிட்டது.
                 'கத்தி'  படத்தைப் பற்றி கொளுத்திப் போட்ட வெடிகள் அனைத்தும் 'புஷ்வானம்' ஆகிப்போனது.  சில வெடிகள் பண மழையால் நனைந்து வெடிக்காமல் போனது.
                தமிழ் அமைப்புகள் நிலைப்பாடுகள்,  தங்களை தமிழ் உணர்வாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு வன்முறையில் இறங்கி வியாபாரம் செய்தவர்கள் நிலையைப் பற்றியெல்லாம் நாம் பிறகு பேசுவோம். முதலில் விவசாயிகளின் பிரச்னையை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கும் நண்பர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு பாராட்டுக்கள்.
     மக்கள் போராளியாக வாழ்ந்து மறைந்த தோழர்.ஜீவானந்தத்தின் பெயரை தனது முக்கிய கதாபாத்திரத்திற்கு வைத்த ஏ.ஆர்.முருகதாஸூக்கு கூடுதல் பாராட்டுக்கள்.
                'ரமணா'  படத்தின் மூலம் நண்பர் என்று நினைக்கத் தூண்டிய ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது 'தோழர்' என்று அழைக்கத் தூண்டுகிறது.
                ஒரு பெரிய கமர்ஷியல் ஹீரோ விஜய். அப்படிப்பட்ட கதாநாயகனை வைத்து தன்னுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தி, எந்த சமுதாய அக்கறையும் இல்லாமல் வாழும் சினிமா ரசிகர்களையும், திருப்திப்படுத்தி வெற்றி கண்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
                இதற்கிடையில் படம் வெளிவர உறுதுணையாக இருந்தவர்களில் பத்திரிகையாளர்களும் உண்டு. ரஷ்யாவின் தந்தை என்று அழைக்கப்படும் லெனின் திரைப்படங்களின் ஆளுமையை உணர்ந்து ஒரு அபிப்ராயத்தை சொன்னார்.
                ''சினிமா'' என்பது ஒரு ஊசி (CINEMA IS AN INJECTION). வியாதியை குணப்படுத்தும் ஊசியாகவும் பயன்படுத்தலாம்.  அதே சமயத்தில் உயிரைக்
கொல்லும் விஷ ஊசியாகவும் பயன்படுத்தலாம். அது அந்தந்த மருத்துவர்களைப் பொருத்து. அதாவது திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் இயக்குநர்களைப் பொருத்தது.
இதைப்போலவே கத்தியின் பயன்பாட்டைப் பற்றி ஒப்பிட்டு தந்தைப் பெரியார் சொல்லியுள்ளார். (கத்தியை திருடன் பயன்படுத்துவதும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் பயன்படுத்துவதும்)  'திருவிளையாடல்'   படத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்கள் எழுதிய ஒரு வசனம் நாகேஷ் அவர்களால் பேசப்பட்டது.
                '' பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.  குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்'' என்பதே அது. அதுபோல் நண்பர் ஏ.ஆர்.முருகதாஸ் 'கத்தி' படத்தில் சில குறிப்பிட்ட காட்சியில் பத்திரிகையாளர்களின் நிலையைப்பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
                முதலில் ஒரு உணர்வுள்ள பத்திரிகையாளன் என்கிற முறையில் என்னுடைய வருத்தத்தையும், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் என்ற முறையில் எங்களுடைய கண்டனத்தையும் அன்புடன் தெரிவிக்க விரும்புகிறோம்.
                சராசரி மனிதனைவிட, வித்தியாசமான சிந்தனையுடையவர்களே கலைஞர்களாக வருவது போல், சமூக மாற்றத்திற்காக தன்னுடைய எழுத்துக்களால் ஏதாவது ஒரு துரும்பாவது நிகழ்ந்து விடாதா என்று நினைப்பவர்களே எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும்  இத்துறைக்கு வருகின்றனர்.
சமூக விரோதிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் நடுவே சிக்கித் தவித்து, எங்கள் உணர்வுகளைப் போராடி பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.
                பெரும்பாலான ஊடங்களும், செய்திகளும், கட்சிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் சொந்தமாகிவிட்ட வேலையில் கஷ்டங்களும், கொள்கைகளும் மட்டுமே எங்களுக்கு தோளோடு தோளாக விளங்கி வருகிறது.
                தினம், தினம் எத்தனையோ அவலங்கள் எங்கள் காதுகளுக்கும், சிலது கண்களுக்கும் கூட அறியப்படுகிறது. எங்களின் உயிரைப்பற்றிக் கூட கவலைப்படாமல் அதை செய்தியாக்கி அனுப்புவோம்.ஆனால், அதை வெளியிடுவது முதலாளிகள் கையில்தான் உள்ளது. (எங்களுக்கு எதிராக திருப்பப்படுவதும் உண்டு) நல்ல கதைக்களத்திற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இல்லாமல் போவதுபோல...
                ஏ.ஆர்.முருகதாஸ் மிகப் பெரிய கடலை கண்டு வியக்க வேண்டும். ஏதோ
ஒரு மூலையில் வந்து கலக்கும் கூவத்தை கண்டு வருந்தக்கூடாது.
                யார், யாருக்கோ ஆதரவான படம். யார், யாருக்கோ எதிரான படம் என்பதெல்லாம் போய், சில காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான படமாக எண்ணத் தோன்றுவதாக சிலர் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
                 படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கதைக்கு அவசியமாகவே இருந்தாலும், படத்தின் இறுதி தீர்ப்பிற்கு ஊடகங்களின் பங்களிப்பே காரணமாக விளங்குவதாக உருவாக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில பத்திரிகையாளர்களின் இச்செயல்களைக் கொண்டு, அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளிவர உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொலைக்காட்சி’, ‘ புதிய தலைமுறை’ போன்ற பல ஊடகங்கள் அதேபோல் பல பத்திரிகைகள் விவசாயிகளின் பிரச்சனைகளை தொடர்ந்து காண்பித்து வருகிறது.
                ஆனால், யாருமே உதவ முன் வருவது இல்லை என்று சொல்லும் கருத்து ஏற்புடையது அல்ல. நல்ல கருத்துக்களையும், சமூக மாற்றத்திற்கான இது போன்ற படங்களை தொடர்ந்து இயக்கி வரும்,  நண்பர் ஏ.ஆர்.முருகதாஸ் எங்களின் உணர்வையும் மதித்து இனி எடுக்கும் படங்களில் செயல்பட வேண்டுகிறோம். அதே சமயத்தில் எங்களுடைய கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
   வெற்றி இரண்டு வகை. ஒரு வகை எல்லோரையும் கொன்று குவித்து வெற்றிப் பெறுவது.  மற்றொன்று, எல்லோரையும் கூட்டிக்கொண்டு போய் வெற்றிப் பெறுவது. அப்படிப்பட்ட வெற்றியைத்தான் நாம் அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியும்.
                'கத்தி'  பட வெற்றியை உங்களோடு சேர்ந்து எங்களை கொண்டாட முடியாமல் செய்துவிட்டீர்கள். இருப்பினும் 'கத்தி' படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
                                                                -       டி.எஸ்.ஆர்.சுபாஷ்,

                                                                            மாநிலத் தலைவர்   
                                        தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ்.

On Sunday, October 26, 2014 by farook press in ,    


On Sunday, October 26, 2014 by farook press in ,    

திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சனியன்று திருப்பூர் நகரின் மையத்தில் செல்லக்கூடிய ஜம்மனை ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். Sathyanagar Bridge KT MLA DRO Visit: திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஜம்மனை ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நிலைமையை பார்வையிடும் திருப்பூர் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் த.பாரிவேல் உள்ளிட்டோர். KT MLA: திருப்பூரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து காயிதே மில்லத் நகர், சத்யாநகர் விரிவு பகுதி பொது மக்களிடம் கருத்துக் கேட்கிறார் கே.தங்கவேல் எம்.எல்.ஏ.,
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஜம்மனை ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல் நேரில் சந்தித்ததுடன், அரசு அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
திருப்பூர் நகரின் தெற்குப் பகுதியில் மக்கள் பெருக்கும் மிகுந்த பகுதிகளின் ஊடாக ஜம்மனை ஓடை செல்கிறது. கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி இரவு இந்த ஓடையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருப்பூரில் மிகப்பெரும் நாசம் ஏற்பட்டது. அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள் சேதம் ஏற்பட்டது.
சுமார் மூன்றாண்டுகள் ஆன நிலையில் தற்போது மீண்டும் இந்த ஜம்மனை ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் அரசு நிர்வாகம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை வெள்ளத் தடுப்பு பணிகள் காரணமாகவும், சில இடங்களில் பாலங்கள் உயர்த்திக் கட்டப்பட்டதாலும் தற்போது பாதிப்புகள் ஏற்படவில்லை.
வெள்ளியன்று இரவு தொடர் மழை காரணமாகவும், திருப்பூரின் மேற்கு பகுதியில் உள்ள பல்லடம், பொங்கலூர் வட்டாரங்களில் குளம், குட்டைகள் நிரம்பி வருவதன் காரணமாகவும் ஜம்மனை ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து ஆங்காங்கே அரசு அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ கே.தங்கவேல் சனியன்று காலை ஜம்மனை ஓடையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். 
குறிப்பாக தாராபுரம் சாலை சங்கிலிப் பள்ளம் பாலம், காங்கயம் சாலை சங்கிலிப்பள்ளம் பகுதி, காயிதே மில்லத் நகர், சத்யாநகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். சத்யாநகர் விரிவுப் பகுதியில் கடந்தமுறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு ஓடையின் குறுக்கே பாலம் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியை பார்வையிட்ட எம்எல்ஏ கே.தங்கவேல் அப்பகுதி மக்களிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் த.பாரிவேல் உள்பட மாவட்ட, வட்ட அதிகாரிகளும், மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்டோரும் இப்பகுதிகளில் நிலைமையை நேரில் கண்காணித்தனர்.
இப்பகுதி பெண்கள் கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம், ஓடையின் இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டிக் கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டனர்.  
அதேபோல் தென்னம்பாளையம் முத்தையன் கோயில் அருகில் உள்ள பாலம், ஓடை பகுதியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதிகளையும் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
அவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஜெயபால், நகரக்குழு உறுப்பினர் பி.பாலன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
வெள்ள பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஓலி பெருக்கி வாகனம் மூலம் மாவட்ட நி்ரவாகத்தின் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு  செய்யப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் இரவு நேரங்களில் அருகாமையில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக் கூடம், கோயில் மண்டபங்களில் தங்க வைக்கவும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து இந்த ஓடைக்கு நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு அதிகாரிகளிடம் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
--------------------




T Oct 25 Flood Thenampalayam, T Oct 25 Flood Thenampalayam1: திருப்பூர் தென்னம்பாளையம் முத்தையன் கோயில் - வெள்ளியங்காடு சாலை சந்திப்பு பகுதியில் ஜம்மனை ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். இதனால் தென்னம்பாளையம் சாலையில் இருந்து வெள்ளியங்காடு பகுதிக்கு செல்லும் தரைமட்ட பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.