Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
தண்டையார்பேட்டை, : கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜான்சன் (52). திருவொற்றியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்றிருந்தனர். 
நேற்று முன்தினம் வீட்டில் புகுந்த ஒரு ஆசாமி, திடீரென ஜான்சனின் முகத்தில் சரமாரியாக தாக்கினான். இதில் அவரது பல பற்கள் ஆடின. உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த போலீசார் ஓடிவந்தனர். அதற்குள் ஆசாமி தப்பிவிட்டான். ஸ்டான்லி மருத்துவமனையில் ஜான்சன் அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து ஏழுகிணறு போலீசார் விசாரிக்கின்றனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபரால் மெரினாவில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா சதுக்கத்தில் உள்ள நேப்பியர் பாலம் வழியாக செல்லும் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். திடீரென கூவத்தின் உள்ளே இறங்க ஆரம்பித்தவர் ஆழமான பகுதிக்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் சென்றார். பின்னர், அங்கிருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் இரண்டு குழுவாக பிரிந்து ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றனர். பின்னர், வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவர் கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், தனது பெயரை சத்தியராஜ், சத்திய கமல் என்று மாற்றி மாற்றி கூறினார். அதன் பிறகுதான் தெரிந்தது கூவத்தில் நீந்தியவர் மனநிலை பாதித்த வாலிபர் என்று. அதன்பிறகு சாப்பாடு வாங்கி கொடுத்து அவரை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
On Monday, September 15, 2014 by farook press in ,    
ஆலந்தூர், : ஆலந்தூர் புதுப்பேட்டை தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணியை சேர்ந்த லோகேஷ் என்பவரின் தம்பிக்கு நேற்று திருமணம் நடந்தது. அமைச்சர் சின்னையா, வெங்கட்ராமன் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் பரிமளா நந்தகுமார் ஆகியோரை வரவேற்று ஆலந்தூர் எம்.கே.என் சாலை போலீஸ் பூத் அருகிலும், புதுப்பேட்டை திருமண மண்டபம் பகுதியிலும் பேனர் வைத்திருந்தனர். அதில் முதல்வர் ஜெயலலிதா படம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கும்பல் அந்த பேனரை கிழித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பரங்கிமலை போலீசில் லோகேஷ் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேனரில் அதே பகுதியை சேர்ந்த சிலரின் பெயர் இடம் பெறாததால் ஆத்திரம் அடைந்த சிலர் கிழித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் வேறு ஏதாவது காரணத்திற்காக பேனர் கிழிக்கப்பட்டதா எனவும் விசாரணை நடக்கிறது.
On Monday, September 15, 2014 by farook press in ,    
தாம்பரம், : பின்னால் வந்த மணல் லாரி மோதியதில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக பலியானார். நண்பர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர்கள் தேவா (எ) தேவேந்திரன் (19), சிவபிரகாசம் (20), வினோத் (20). கூலி தொழிலாளர்கள்.
நேற்று முன்தினம் மூவரும் ஒரே பைக்கில் கூடுவாஞ்சேரி சென்றுள்ளனர். அங்கு நண்பரை சந்தித்துவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தாம்பரம் காந்தி ரோடு சிக்னல் அருகே வந்தபோது, பின்னால் வந்த மணல் லாரி, பைக் மீது வேகமாக மோதியது. 
இதில் சம்பவ இடத்திலேயே தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வினோத், சிவபிரகாசம் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீ சார், மணல் லாரி டிரைவர் பாலுவை (37) கைது செய்து விசாரிக்கின்றனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
ஆவடி, : கொரட்டூர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (43). இவர், நேற்று முன்தினம் இரவு வாக்கிங் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்மநபர், ஸ்ரீவித்யாவை வழிமறித்து, அவரது கழுத்தில் கிடந்த 8 சவரன் நகையை பறித்து கொண்டு தப்ப முயன்றார். அவர் சத்தம் போட்டதில், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த ஆசாமியை விரட்டி பிடித்து, தர்மஅடி கொடுத்து கொரட்டூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், வானவில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜான் என்ற லிட்டில் ஜான் (38) என தெரிந்தது. 
அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : போலீஸ் சித்ரவதையால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்த பெயின்டரின் சடலத்தை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த இலுப்பூரை சேர்ந்தவர் ரவி (40), பெயின்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த மாதம் பூந்தமல்லி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரவி பெயின்ட் அடித்தார். அப்போது, அந்த வீட்டில் நடந்த கொலை பற்றி விசாரிக்க பூந்தமல்லி போலீசார் ரவியை கடந்த 12ம் தேதி காலை அழைத்து சென்றனர்.
அப்போது, கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் அவரை சித்ரவதை செய்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் காலை மீண்டும் அவரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்தனர். இதனால், மனமுடைந்த ரவி, போலீசார் சித்ரவதையால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, பூச்சி மருந்து குடித்து இறந்தார். மணவாளநகர் போலீசார் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையே, ரவியின் மனைவி ராஜேஸ்வரி மணவாளநகர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், என் கணவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மறுத்தால், உன் மனைவியை விபசார வழக்கில் கைது செய்வோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான  போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்து ரவியின் உடலை மருத்துவர்கள் வழங்கியபோது, அங்கு திரண்ட உறவினர்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சடலத்தை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து வந்த சப் கலெக்டர் வீரப்பன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உறவினர்கள் சடலத்தை பெற்று சென்றனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : திருநின்றவூர் அருகே கள்ளக்காதலி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனியார் கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர், பாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அம்சா (38), கட்டிட தொழிலாளி. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அம்சாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுக்கு முன் தங்கராஜ் பிரிந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே, அதே பகுதியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ஏழுமலை (43) என்பவருடன் அம்சாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். ஏழுமலைக்கு ஏற்கனவே திருமணமாகி அனுராதா (36) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு, அம்சாவுக்கும், ஏழுமலைக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அம்சா தனது மகள்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். பின்னர், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த ஏழுமலை அம்சாவை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அவர் மயங்கி விழுந்தவுடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அம்சாவின் உடலில் ஊற்றி தீவைத்து விட்டு அங்கிருந்து ஏழுமலை தப்பியோடி விட்டார்.
அம்சாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடல் முழுவதும் கருகிய நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அம்சா இறந்தார்.
புகாரின் பேரில், திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஏழுமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் 586 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, சந்தேகத்தின் பேரில் 586 பேர் கைது செய்யப்பட்டனர். போதையில் வாகனம் ஓட்டியதாக 88 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
On Monday, September 15, 2014 by farook press in ,    
குரோம்பேட்டை, : பல்லாவரம் நகராட்சி 21வது வார்டு பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் நகராட்சிக்கு முறைப்படி பணம் கட்டாமல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டிருப்பதாக நகராட்சிக்கு புகார் வந்தது.
இதை தொடர்ந்து, பல்லாவரம் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் பொறியாளர் சீனிவாசன் தலைமையில் 21வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினர்.
அப்போது நேதாஜி நகர், மாணிக்கம் நகர் பகுதிகளில் 51 இணைப்புகள் நகராட்சியில் பணம் கட்டாமல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதுபோல், நேதாஜி நகரில் நகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் 18 வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து துண்டித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இணைப்பு எடுத்தவர்கள் பணம் கட்டியதாக கூறினர். ஆனால், நகராட்சியில் பணம் கட்டப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதி பா.ஜ கவுன்சிலர் வைரம் சீனிவாசன், அப்பகுதியினரிடம் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடாக இணைப்புகள் கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நகராட்சி சார்பில் சிட்லப்பாக்கம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில், குரோம்பேட்டை நேதாஜி நகர் மெயின்ரோட்டை சேர்ந்த விஜயகுமார் (42) என்பவர் சிட்லப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
அதில், பா.ஜ கவுன்சிலர் வைரம் சீனிவாசனிடம் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெற ரூ.13 ஆயிரம் முதல் தவணையாக கொடுத்ததாகவும், இணைப்பு பெற்றபின் நகராட்சியால் அது துண்டிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் நகராட்சியில் பணம் கட்டாமல் முறைகேடாக இணைப்பு கொடுத்து எங்களிடம் பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதுபோல மேலும் 9 பேர் சேர்ந்து புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிட்லப்பாக்கம் போலீசார் 420 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கவுன்சிலர் வைரம் சீனிவாசனை போலீசார் தேடினர். அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதால் தேடி வருகின்றனர். 
பொது மக்களிடம் பணம் வாங்கி திருட்டுத்தனமாக குடிநீர், பாதாள சாக்கடை இணைப்¢பு வழங்கி பாஜ கவுன்சிலர் மோசடி செய்த சம்பவம் குரோம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வழங்கப்பட்டுள்ள இணைப்பு முறையாக அனுமதி பெற்று வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்துகொள்ள வேண்டும். இன்னும் பல வார்டுகளில் திருட்டு இணைப்புகள் பற்றி ரகசியமாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனறனர்.

பல வார்டுகளில்
திருட்டுத்தனமாக இணைப்பு?
பல்லாவரம் நகராட்சி 21வது வார்டில் மட்டுமின்றி நகராட்சியின் பல வார்டுகளை அனுமதியின்றி கவுன்சிலர்கள் பலர் திருட்டுத்தனமான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கியுள்ளனர். ஆனால், பாஜ உறுப்பினர் வார்டில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒருதலைப்பட்சமானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.