Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்தது.  நேற்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைந்த மங்கள்யான் விண்கலம் புகைப்படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் உள்ள வண்ணப் புகைப்பட கேமரா எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளன என்று இஸ்ரோ தெரிவித்தது. தற்போது மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் இஸ்ரோவின் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. 7300 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று இஸ்ரோ பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளதா? அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது? அங்கு மீத்தேன் வாயு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்து உள்ளது. இதற்கு தேவையான கருவிகள் அதில் பொருத்தப்பட்டு உள்ளன. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி இதுபற்றிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வைக்கும். மேலும், படங்களையும் எடுத்து அனுப்பி வைக்கும். மங்கள்யானின் ஆயுள்காலம் 6 மாதங்கள் ஆகும். அதுவரை அது செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி தனது பணியை வெற்றிகரமாக மேற்கொள்ளும். மங்கள்யான் விண்கலத்தின் செயல்பாடுகள் பெங்களூரை அடுத்து பைலாலு, அமெரிக்காவில் உள்ள கோல்டுஸ்டோன், ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட், ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா ஆகிய 4 இடங்களில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கண்காணிக்கப்படும்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி கலைவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து, வியாழக்கிழமை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வியாழன் (செப்.25) காலை மாணவி ராஜராஜேஸ்வரியின் பரதநாட்டியம், மகரஜோதி குழு இன்னிசை. மாலையில் பக்தி இன்னிசை, பரத நாட்டியம், என்.ரெங்கநாத சர்மாவின் கர்நாடக சங்கீதம், இரவு திரைப்பட நடிகை அம்மு ராமச்சந்திரனின் பரதநாட்டியம்.
வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரம். காலை வத்ஸலா, தரணி பாண்டியன் குழுவின் பக்தி இன்னிசைகள், மாலையில் பத்மினி முருகன் குழுவின் இன்னிசை, பி.முருகனின் வயலின், ஆர்.மகாலட்சுமியின் பரத நாட்டியம், சுரேஷ் சிவனின் தேவார இன்னிசை, இரவில் தாயே நீயே துணை எனும் தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, போடி குருசாமி குழு பக்தி மெல்லிசை.
சனிக்கிழமை அருள்மிகு அம்மன் சயனத் திருக்கோலம். காலை டாக்டர் பி.பாலசுப்பிரமணியன் ஆன்மிகச் சொற்பொழிவு, எம்.சோஷ்ட்னாலட்சுமி கர்நாடக சங்கீதம், குமரகுருபரனின் பக்தி மெல்லிசையும், மாலையில் பரத நாட்டியம், இரவு கே.கே.விக்னேஷின் கர்நாடக சங்கீதம், கடையநல்லூர் ஆர்.சிங்காரவேலுவின் பக்தி மெல்லிசை.
ஞாயிற்றுக்கிழமை முருகனுக்கு வேல் வழங்கும் திருக்கோலம். காலையில் பரத நாட்டியம், வை.சங்கரலிங்கத்தின் சொற்பொழிவு, நாத சங்கமம், மாலையில் பரதநாட்டியங்கள், இரவு நாகை முகுந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, மஹதியின் கர்நாடக சங்கீதம்.
திங்கள்கிழமை அருள்மிகு அம்மன் கோலாட்ட அலங்காரம். காலையில் பக்தி இன்னிசை, சண்முக திருக்குமரன் தலைமையில் அங்கையற்கண்ணி கருணை பொலிவது திருக்கரமே, திருவடியே எனும் தலைப்பில் ஆன்மிகச் சொல்லரங்கம், மாலையில் பரத நாட்டியங்கள், இரவு ஈஸ்வரி-ஈஸ்வரன் குழுவின் பக்தி மெல்லிசை.
செவ்வாய்க்கிழமை அம்மன் திருமணக் கோலம். காலையில் சென்னை ஷோபனா சுவாமிநாதனின் வீணை இன்னிசை, பரத நாட்டியங்கள், மாலையில் பக்தி இன்னிசை, கரூர் ம.சுகந்திபிரியாவின் மீனாட்சித் திருக்கல்யாண நாட்டிய நாடகம், மீனாட்சி ராமச்சந்திரனின் ஆன்மிகச் சொற்பொழிவு, இரவு துஷாரா ஸ்ரீனிவாசனின் பரத நாட்டியம்.
புதன்கிழமை (அக்.1) மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம். காலை விஜய்கணேஷின் புல்லாங்குழல் இன்னிசை, பரத நாட்டியம், மாலை இளம்பிறை மணிமாறனின் ஆன்மிகச் சொற்பொழிவு, கவிதா மகேந்திரனின் பக்திப் பாடல்கள், பரத நாட்டியம்.
வியாழன் (அக்.2) காலையில் பக்தி மெல்லிசை, பரத நாட்டியம், மாலை கர்நாடக சங்கீதம், பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் சேக்கிழார் தந்த செல்வம் எனும் பொருளிலான ஆன்மிகச் சொற்பொழிவு. இரவில் பேராசிரியர் ரா.மோகன் தலைமையில் 21-ஆம் நூற்றாண்டு ஆன்மிகத் திருக்கொடை உரையரங்கம், சீர்காழி ஜி.சிவசிதம்பரத்தின் இன்னிசை. வெள்ளிக்கிழமை (அக்.3) விஜயதசமி. மாலையில் 108 வீணை வழிபாடு.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் உத்தரவின்பேரில் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் கைதுமதுரை சின்னசொக்கிக்குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகமது. ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கடந்த 2-ந் தேதி கொடைக்கானலுக்கு கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி(39) என்பவரை முதலில் கைது செய்தனர். இதையடுத்து, மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் (26) என்பவர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில், போலீசார் கொடைக்கானலுக்கு சென்று ஜமால்முகமது உடலை மீட்டனர். பின்பு இந்த கொலை வழக்கு தொடர்பாக பலரை தேடி வந்த நிலையில் விருதுநகர் கோர்ட்டில் முக்கிய குற்றவாளிகளான முகமது சித்திக் (35), மாரிமுத்து (27) ஆகியோர் சரண் அடைந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

“அலாவுதீன் டிரஸ்ட் என்ற அமைப்புக்குச் சொந்தமான 1 ஏக்கர் 64 சென்ட் நிலம் அரசரடி புதுஜெயில் ரோடு, முரட்டன்பத்திரி பகுதியில் உள்ளது. இந்த டிரஸ்டுக்கு தலைவராக ஜமால்முகமதுவும், 11 பேர் உறுப்பினராகவும் இருந்து வந்தனர். இந்த நிலத்தை விற்கும் உரிமைக்கான பவரை ஜமால்முகமதுவிற்கு டிரஸ்ட் உறுப்பினர்கள் வழங்கி இருந்தனர்.

அந்த நிலத்தில் கணேசன் என்பவரின் மாமனார் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து உழவடை செய்து வந்தார். அவரது இறப்பிற்கு பின்னர் கணேசன் நிலத்தை பராமரித்து வந்தார். எனவே அந்த நிலத்தில் தனக்கு பங்கு தருமாறு கணேசன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கணேசனுக்கு ஆதரவாக வக்கீல் ஒருவர் இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் அரசரடி ஏ.ஏ.ரோட்டில் வசிக்கும் பழனிவேலுக்கு (முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமியின் சகலை) இந்த நிலம் தொடர்பாக தெரியவந்தது. எனவே அவர் நிலத்தை விற்கும் போது தங்களுக்கு தருமாறும், ஒரு சென்ட் ரூ.8 லட்சம் வரை தருவதாகவும் ஜமால்முகமதுவிடம் கூறினார். அதன்பின் முன் பணமாக ரூ.65 லட்சம் ஜமால்முகமதுவிற்கு வழங்கப்பட்டது. பணம் வழங்கி வெகு நாட்கள் ஆகியும், இடத்தை பத்திரம் போட்டுத் தராமல் ஜமால்முகமது தயங்கி வந்தார்.

இந்த நிலையில், உழவடை செய்து வரும் கணேசன், கூடல்புதூர் சித்திக் உள்ளிட்டோர் ஜமால்முகமதுவை கடத்தினார்கள்.

கடந்த 1-ந் தேதி அலாவுதீன் டிரஸ்டுக்கு சொந்தமான நிலத்தில், 5 சென்ட் நிலம் பழனிவேல் பெயருக்கும், 5 சென்ட் நிலம் பழனிவேல் மனைவி உமாராணி பெயருக்கும், 10 சென்ட் நிலம் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா பெயருக்கும் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலத்தில் மீதிப்பகுதி அனைத்துக்கும் கணேசன் பெயரில் பவர் வாங்கப்பட்டது.

இந்த பத்திரப் பதிவுக்காக சம்பவத்தன்று ஜமால்முகமதுவிற்கு ரூ.20 லட்சம் பணம் ரொக்கமாகவும், ரூ.10 லட்சம் காசோலையாகவும் கொடுக்கப்பட்டன. அதன்பிறகுதான் (செப். 2-ந் தேதி) ஜமால்முகமது கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் தெரியவந்த நிலையில், ஜக்கிய ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், “ஜமால்முகமது கொலை வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கில் அறக்கட்டளை சொத்துக்களை விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களையும், அந்த சொத்துக்களை வாங்கி லாபம் அடைந்தவர்களையும் இதுவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே சி.பி.ஐ. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உரிய நீதி கிடைக்கும்” என்று கூறியிருந்தனர்.

இதுபற்றி தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, ஜமால்முகமதுவிடம் சொத்துக்களை வாங்கிய இந்திரா (திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மகள்), பழனிவேல் (ஐ.பெரியசாமியின் சகலை), அவருடைய மனைவி உமாராணி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

கைதான 3 பேரும் மதுரை 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மாலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு திரிவேணி, அவர்கள் 3 பேரையும் வருகிற 7-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, இந்திரா, உமாராணி ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், பழனிவேல் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள்
குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. உதவி கமிஷனர் பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று மனு கொடுத்தனர்.
இந்நிலையில் புதூர் லூர்து பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் மாநகராட்சிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகிப்பதில்லை.
இதன் காரணமாக தாங்கள் மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் குடிநீர் பிரச்சினை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் குறைதீர் கூட்டத்துக்கு சென்ற அவர்கள் உதவி கமிஷனர் பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த னர். 50–க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
சிபாரிசு அடிப்படையில் சேர்ந்த 6 காவலாளிகள் பணி நியமனம் ரத்து: மதுரை ஐகோர்ட்டு உத்தரவுஉசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பணி நியமனங்கள் அனைத்தும் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், அரசியல்வாதிகளின் பரிந்துரைப்படி நடந்துள்ளதாகவும், எனவே, அந்த பணி நியமனங்களை ரத்து செய்து விட்டு அதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கணேசன் என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி.சங்கர் நேரில் ஆஜரானார். அவரிடம், விசாரணை குறித்த பல்வேறு தகவல்களை நீதிபதி எஸ்.நாகமுத்து கேட்டார். அதற்கு சி.வி.சங்கர் பதில் அளித்தார்.

அதன் பின்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

“ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி.சங்கரின் விசாரணை அறிக்கை திருப்தியாக இல்லை. பரிந்துரை கடிதம் கொடுத்தவர்களிடம் அவர் விசாரணை நடத்தவில்லை. பணி நியமனத்துக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் பேசி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்தும் முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணை சம்பந்தமாக ஐகோர்ட்டு எழுப்பி உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தென்மண்டல சூப்பிரண்டு சேவியர் தனராஜ் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை 6 மாதத்துக்குள் முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வானவர்களின் பட்டியலில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பெயர்களுக்கு நேர் எதிரே எந்த அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட 2 பேரின் பெயருக்கு எதிரே ‘மெரிட்’ (தகுதி) என்றும், மற்ற 6 பேரின் பெயருக்கு எதிரே அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த 6 பேரின் பணி நியமனங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அடுத்த முறை நியமனங்கள் மேற்கொள்ளும் போது தகுதி அடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். 
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
சிறைவாசலில் காத்திருந்து கர்ப்பிணியாக்கிய வாலிபரை கரம் பிடித்த இளம்பெண்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி, கூலித் தொழிலாளி. இவரது மகள் வீரலெட்சுமி (வயது19). வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் வேலை பார்த்து வருகிறார்.
பாலமேடு, கோனபட்டியை சேர்ந்த ரவி மகன் முரளி (வயது 20). இவர்கள் இருவரும் மேட்டுப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோனபட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்கு தோழி அழைத்ததன்பேரில் வீரலட்சுமி சென்று இருந்தார். அங்கு இருந்த முரளி, தனியாக பேச வேண்டும் என்று கூறி வீரலட்சுமியை மோட்டார் சைக்கிளில் சேந்தமங்கலம் என்ற ஊருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தென்னந்தோப்புக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக வீரலட்சுமியிடம் முரளி உறுதி அளித்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள முரளி மறுத்துள்ளார்.
இதுகுறித்து சமயநல்லூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் கற்பழிப்பு வழக்கில் முரளியை கைது செய்து, கடந்த 6–ந் தேதி மதுரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் வீரலெட்சுமி 2 மாத கர்ப்பிணியானார். அதனால் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி, முரளிக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தனர். இந்த தகவலை சிறையில் இருக்கும் முரளியிடம் தெரிவித்து அவரிடமும் சம்மதம் பெற்றதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து முரளியை ஜாமீனில் எடுத்து வீரலட்சுமியுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு முரளியை ஜாமீனில் வெளியே எடுத்தனர். இதையொட்டி நேற்று மாலை அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு காத்திருந்த வீரலட்சுமி மற்றும் முரளியை காரில் அழைத்துக் கொண்டு சென்றனர். மிளகரனையில் உள்ள அய்யனார் கோவில் முன்பு 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரையில் 3 பேர் கொலை: பழிக்குப்பழி வாங்க பதுங்கி இருந்த 4 பேர் கைதுமதுரையில் ஜெய்ஹிந்துபுரம், மீனாம்பிகை நகர் பகுதியில் கடந்த 19–ந் தேதி வீட்டிற்குள் புகுந்து சகோதரர்களான கருப்புராஜ் (வயது 21), பாம்பு நாகராஜ் (19), இவர்களை பார்க்க வந்த நண்பர் கார்த்திக்(21) ஆகிய 3 பேரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட பழி வாங்கும் போட்டியில் 3 பேரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் குண்டுமணி, பிரேம், சவுந்தர் என்ற சவுந்தரபாண்டியன், அலெக்ஸ், மொட்டை மணி, எஸ்.மணி, சுடலைமுத்து, சித்திரைவேல் பாண்டியன் ஆகியோர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதற்கிடையில் நண்பர் பாம்பு நாகராஜை கொலை செய்தவர்களை பழிக்குப் பழியாக கொலை செய்ய ஒரு கும்பல் திருப்பரங்குன்றம் சந்திரபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஹார்வி பட்டியைச் சேர்ந்த இளவரசன் (23), பழங்கா நத்தம் பிரபு (21), ஜெய்ஹிந்து புரம் மருது பாண்டியன் (23), பழையனூர் பாண்டி வேல் (23) ஆகியோரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள் 4 பேரையும் ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
தாது மணல் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்: தமிழ்நாடு மனித உரிமை தலைவர் வலியுறுத்தல்
தமிழகத்தில் இனி ஆற்று மணல், தாது மணல் மற்றும் கிரானைட் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய தலைவர் ராஜூ வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய தலைவர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் சட்ட விரோதமாக கிரானைட் தொழில் மூலம் நடத்தப்பட்ட முறைகேடுகள் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 90 குற்ற வழக்குகளில் 50–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 84 குவாரிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பாலாறு, வைகை, வெள்ளாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பல ஆறுகள் மணல் கொள்ளையர்களால் நாசமாக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 55 ஆயிரம் லாரிகளில் ஆற்று மணல் எடுக்கப்படுகிறது.
கேரளா, கர்நாடகாவில் ஆற்று மணல் எடுக்க தடை உள்ளதால் இங்கிருந்து மணல் கடத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் இனி ஆற்று மணல், தாது மணல், கிரானைட் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் கீழ் சிறப்பு குழு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு திறம்பட செயல்பட உரிய கால அவகாசம், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுவதுடன், அவரது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணை அறிக்கைகளையும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். இந்த கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தினந்தோறும் வழக்கு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
Displaying scan.jpgDisplaying scan 001.jpg
சமூகத்தின் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படவேண்டியவர்கள் முதியவர்கள் ஆனால்  காவல் துறையினரின் அலட்சியத்தால் கண்ணீரோடு உயிருக்கு போராடி வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை  பகுதியை சேர்ந்த  அழகம்மாள் என்கின்ற 75 வயது  மூதாட்டி.
 
              கணவர் சேர்த்து வைத்த சொத்தில் கம்பீரமாக  வாழ வேண்டிய இவர் ,தனது பேரன்கள் என்ற பெயரில் உள்ள கயவர்களால் தினம் தினம் சித்திரவதை செய்யப்படுவதோடு,  அந்த கொடூரர்களின் வெறியால் அந்த மூதாட்டியின் காதினை அறுத்து நகைகளை பறித்து கொண்டதோடு சித்திரவதையின் உச்சகட்டமாக அந்த மூதாட்டியை நிர்வாணப்படுத்தி தங்களது  சொத்து  வெறியின் உச்சத்தை அரங்கேற்றி  வருகின்றனர். 

                        பரிதாபத்திற்குரிய அழகம்மாளின் கணவர் பெயர் சுப்பிரமணியன் .கணவரின் மரணத்திற்கு பிறகு அவரது சம்பாத்தியத்தில் உருவாக்கிய சொந்த வீட்டில் சித்தையன் கோட்டை நாகப்பன் தெரு பகுதியில் வசித்து வருகிறார். அவர்களுக்கு  
மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் என மொத்தம் 5 பேர் இதில் மூத்த மகன் பழனிச்சாமி என்பவர் இறந்துவிட்டார்  அவரது மகன்கள் அழகர் சாமி, முருகவேல், சுப்பையா மற்றும்  மகள்கள் பொம்மி, குட்டியம்மாள்.ஆகிய 5 நபர்களும் சேர்ந்து கொண்டு அழகம்மாள் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியோடு அவருக்குரிய வீட்டிலேயே  வசித்துக் கொண்டும் அவர்களுக்குரிய நில புலன்களை அனுபவித்து கொண்டும்.ஊதாரித்தனமாக வாழ்க்கையை நடத்தி  வருகின்றனர். 

              இந்த வயதிலும் சுயமாக சமைத்து சாப்பிடும் இந்த மூதாட்டியிடம் இருந்து  சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு அவரை அடித்து தினமும் கொடுமைப் படுத்துவதோடு  அந்நிய வீட்டாரோடு  பேசக்கூட முடியாதபடி வாய்ப்பூட்டு சட்டம்  போடுவதோடு  குடித்துவிட்டு வந்து  அந்த பாட்டி  வசிக்கும் வீட்டில் அத்து  மீறி நுழைந்து கண்மூடிதனமாக தாக்குகின்றனர் 

இதனால் மனம் உடைந்த அழகம்மாள் தனது இளைய மகன் அறிவகம்  மூலமாக செம்பட்டி காவல்  நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் பாலகுமார் விசாரித்து சம்பந்தப்பட்ட  நபர்கள் மீது 147,148,447,314,427,506(1)     ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த  கையோடு எப் ஐ ஆர் ன் மீது  மேல் நடவடிக்கை எதுவும் எடுத்திடாமல் கிடப்பில் போட்டுள்ளனர் 

இதுகுறித்து கேட்க சென்றால் நான் அவர்களை கூப்பிட்டு கண்டித்து விட்டேன் ,உங்களது பேரன் தானே ,வெளியில் பேசி தீர்த்து  கொள்ளலாம் என கட்ட பஞ்சாயத்து கார தொனியில் காவல்துறை அதிகாரிகளே பேசி வருகின்றனர் .இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு முறை கூட கைது செய்யப்படாதது ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது 

இந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்தையும்,காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரை தள்ளாத வயதிலும் நேரில் சென்று மனு அளித்து விட்ட போதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மது அருந்தி விட்டு எப்போதும் போல் வெளியில் திரிவது சட்டத்தை கேலிக் கூத்தாக்குகிறது.உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையாவது காவல்துறையினர் செய்ய வேண்டாமா ?குடும்ப பிரச்னை என ஒதுங்கினால் நாளை மூதாட்டி உயிர் போன பிறகு கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பார்களா இவர்கள் ?

                        பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தமிழகத்தில் தான் குறைந்துள்ளது என்கிற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கூற்றுக்கே சவால் விடக்கூடிய வகையில் செயல்படும் முதியோர் வதை செய்யும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே அழகம்மாள் மூதாட்டியின் கடைசி மூச்சாக உள்ளது