Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
பல்லாவரம் அருகே கவுல்பஜாரில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.

நகை கொள்ளை

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள கவுல்பஜார், கலைஞர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லியோ ராஜராஜன்(வயது 36). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் லியோ ராஜராஜன் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை விரைந்து பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

3 பேர் கைது

இதையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் பல்லாவரம் உதவி கமிஷனர் கவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஆலந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த நாகராஜ்(30), வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற அடையார் கார்த்திக்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சீபுரம் தெற்குபட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த்பாபு(30)என்பவரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.

உரிமையாளரிடம் ஒப்படைப்பு

கொள்ளையர்கள் 3 பேரும், திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை அதன் உரிமையாளரான லியோ ராஜராஜனிடம் தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம் ஒப்படைத்தார்.

புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை திறமையாக பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
பி.எஸ்.என்.எல். புதிய சிம்கார்டு வாங்கினால் உடனடியாக பேசும் வசதியை சென்னை டெலிபோன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய வசதி
பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் நேற்று பி.எஸ்.என்.எல். புதிய சிம் கார்டு வாங்கினால் அதை உடனடியாக செயல்படுத்தும் வசதியை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை நகரில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். சிம்கார்டு பயன்படுத்துகிறார்கள். 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். இணைய தளவசதி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல்.லேண்ட் லைன் போன் வைத்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல். சிம்கார்டை ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் சிம் கார்டு வாங்கினால் உடடினயாக அந்த சிம்கார்டு செயல்பட (ஆக்டிவேசன்) தொடங்கும் வசதியை சென்னை டெலிபோன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
முதலில் www.cymn.bsnl.co.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான புதிய எண் கொண்ட பி.எஸ்.என்.எல் சிம்கார்டை தேர்ந்து எடுங்கள்.
சேவை மையம்
பின்னர் அதே ஆன்லைனில் உங்கள் முகவரி, அடையாள அட்டை போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவியுங்கள். இவ்வாறு அதில் உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்துவிட்டு அது கொடுக்கும் எண்ணை கொண்டு அருகில் உள்ள தொலைபேசி சேவை மையத்திற்கு செல்லுங்கள். சென்னையில் 50 சேவை மையங்கள் உள்ளன.
சேவை மையத்திற்கு சென்று, நீங்கள் ஆன்லைனில் சிம்கார்டை தேர்ந்து எடுத்ததற்கான பதிவு எண்ணை தெரிவியுங்கள். மேலும் சேவை மையத்தில் நீங்கள் இணைய தளத்தில் விண்ணப்பித்த அனைத்து அசல் சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் அனைத்து ஆவணங்களும் உண்மை என்ற பட்சத்தில் உடனடியாக உங்கள் சிம் கார்டு செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது முதன்மை பொதுமேலாளர்கள் கே.கே.வேலு, என்.பூங்குழலி, பொது மேலாளர் பி.ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
100 வருடம் தொலைபேசி
பின்னர் சென்னையில் 100 வருடமாக தொலைபேசி வைத்து பயன்படுத்தி வரும் ரமேஷ் சி.குமார் என்பவருக்கு பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன்ஸ் சார்பில் தலைமை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்து பரிசளித்து கவுரவப்படுத்தினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஈரோட்டில் வியாபாரியை மிரட்டி ரூ.1¼ லட்சம் பறித்த போலி நிருபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பர்னஸ் ஆயில் மோசடி

கோவை மற்றும் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக பர்னஸ் ஆயில் பெங்களூரில் இருந்து டேங்கர் லாரிகளில் ஈரோடு மாவட்டம் நசியனூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது இந்த ஆயிலை டிரைவர்கள் சிலர் தங்கள் லாரிகளில் இருந்து திருடி குறைந்த விலைக்கு நசியனூர் மற்றும் பல பகுதிகளில் விற்பதாக கூறப்படுகிறது. லாரியில் இருந்து எடுக்கப்பட்ட பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக அதே அளவில் ஏதாவது பழைய ஆயிலை லாரியில் ஏற்கனவே உள்ள பர்னஸ் ஆயிலுடன் டிரைவர்கள் கலந்து விடுவார்கள்.

இந்த பர்னஸ் ஆயிலை பெறும் தொழிற்சாலை நிறுவனங்கள் அவ்வளவு எளிதில் இதை கண்டுபிடிக்க முடியாது. இதுபோன்ற மோசடி கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

பழைய இரும்பு வியாபாரி

ஈரோடு அருகே உள்ள நசியனூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 46). பழைய இரும்பு வியாபாரி. அந்த பகுதியில் கடை வைத்து உள்ளார்.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஜெகதீசன் என்ற டிரைவர் பெங்களூரில் இருந்து லாரியில் பர்னஸ் ஆயிலுடன் நேற்று முன்தினம் நசியனூர் வந்தார். பின்னர் ராமசாமியின் கடை முன்பு லாரியை நிறுத்தினார். பின்னர் அவர்கள் 2 பேரும் கடை முன்பு பேசிக்கொண்டிருந்தனர்.

மிரட்டல்

அப்போது 4 பேர் 2 மோட்டார்சைக்கிளில் ராமசாமியின் கடை முன்பு வந்து நின்றனர். பின்னர் அவர்கள், ‘தாங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு மாத இதழ் பத்திரிகையில் வேலை செய்கிறோம். சென்னையை சேர்ந்த வேலு பிரபாகரன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர். கோபால் திருச்செங்கோடு தாலுகா போட்டோ கிராபர். சிவக்குமார் (42) ஈரோடு தாலுகா நிருபர் மற்றும் போட்டோ கிராபர். பிரகாஷ் பத்திரிகையின் ஈரோடு பகுதி முகவர்‘ என்று ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ராமசாமியை பார்த்து ‘நீங்கள் பெங்களூரில் இருந்து வரும் லாரிகளில் பர்னஸ் ஆயிலை திருடி விற்பனை செய்து வருகிறீர்கள். இது சட்டப்படி குற்றம். நீங்கள் பர்னஸ் ஆயில் திருடுவது போன்ற படம் எடுத்து உள்ளோம். எனவே இந்த செய்தியை எங்கள் பத்திரிகையில் படத்துடன் வெளியிட்டுவிடுவோம். அப்படி செய்தி வெளிவந்தால் உங்கள் மானம், மரியாதை ஆகியவை போய்விடும். மேலும் போலீஸ், வழக்கு என்று அலையவேண்டி வரும்‘ என்றும் மிரட்டினர்.

ரூ.1¼ லட்சம் பறிப்பு

அவர்களின் மிரட்டலை கண்டு பயந்த ராமசாமி நான் லாரியில் இருந்து பர்னஸ் ஆயிலை திருடும் எந்த தவறுகளையும் செய்யவில்லை என்று கூறிப்பார்த்தார். ஆனால் அவர்கள் ராமசாமியை தொடர்ந்து மிரட்டினர். அதுமட்டுமின்றி இந்த செய்தி எங்கள் பத்திரிகையில் வராமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ஆள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

அவர்களின் மிரட்டலில் பயந்து போன ராமசாமி தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தை வாங்கி அந்த 4 பேரிடம் கொடுத்தார்.

லாரி உரிமையாளரிடம்...

இந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் சட்டென்று அங்கு நின்று கொண்டிருந்த லாரியில் ஏறி பர்னஸ் ஆயில் கொண்டு வருவதற்கான அனுமதி கடிதம் மற்றும் லாரியின் உரிமையாளரான கோவையை சேர்ந்த செந்தில் என்பவரின் செல்போன் எண்ணையும் எடுத்தனர்.

நீங்கள் (ராமசாமி) பணம் தராவிட்டால் என்ன. நீங்கள் கொடுக்க வேண்டிய மீதி பணத்தை லாரி உரிமையாளரிடம் (அதாவது செந்திலிடம்) நாங்கள் வாங்கி விடுவோம் என்றனர். அப்படியும் லாரி உரிமையாளர் கொடுக்காவிட்டால் இந்த செய்தியை பத்திரிகையில் வெளியிடுவோம். இதனால் அவருடைய பர்னஸ் ஆயில் ஒப்பந்தம் ரத்தாவதுடன், லாரியையே பறிமுதல் செய்யும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறிவிட்டு அவர்கள் அனைவரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து ராமசாமி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் தேடி வந்தார்.

இந்தநிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நிருபரும், போட்டோ கிராபருமான சிவக்குமார் நிற்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலி நிருபர் கைது

தகவல் அறிந்ததும் போலீசார் வீரப்பன்சத்திரம் விரைந்து சென்று அங்கு மாரியம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த சிவக்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம், மோட்டார்சைக்கிள், பத்திரிகை அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வேலு பிரபாகரன், கோபால், பிரகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி நிருபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு போலி நிருபர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பெரியார் பிறந்தநாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.

பகுத்தறிவு கொள்கைகளை பரப்பிய ஈ.வெ.ரா.பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகர்கோவிலில் பெரியார் சிலை ஒழுகினசேரி சந்திப்பில் உள்ளது.

இந்த சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

நிர்வாகிகள்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் சதாசிவம், பொருளாளர் வக்கீல் ஞானசேகர், ஜஸ்டின்செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், என்ஜினீயர் லட்சுமணன், சிவசெல்வராஜன், அணி செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், டி.மனோகரன், டாரதி சாம்சன், முட்டம் லாரன்ஸ், சேவியர்மனோகரன், வக்கீல் பாலஜனாதிபதி, நகர செயலாளர் சந்திரன், கிருஷ்ணகுமார், கே.சி.யு.மணி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாரதாமணி, தலைமைக்கழக பேச்சாளர் நீலகண்டன், வக்கீல் சுந்தரம், இரணியல் லட்சுமணன், கோட்டார் கிருஷ்ணன், கே.பி.எஸ்.பிரான்சிஸ், வி.கே.மகாதேவன், பொன்.சுந்தர்நாத், பூங்காகண்ணன், திருமலைஅறிவழகன், வேலாயுதம், இ.என்.சங்கர், லதாராமச்சந்திரன், ஆக்கோ ஆறுமுகம், கவுன்சிலர்கள் ஸ்ரீமணிகண்டன், ஜே.ஜே.சந்திரன், விக்ரமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.-தி.க.

தி.மு.க. சார்பில் தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முருகபதி தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசன், துணைச்செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தயாளன், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கரநாராயணன், மகளிரணி மண்டல அமைப்பாளர் மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவனந்தபுரத்திற்கு வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கன்னியாகுமரியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
தவறாக நடக்க முயற்சி
தோகாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் திருவனந்தபுரம் நோக்கி நேற்று காலையில் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த சில்வா மைக்கிள்(வயது 40) என்பவர் பயணம் செய்தார். இந்த நிலையில் அந்த ஆசாமி விமான பயணத்தின் போது பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதோடு, ஆபாச வார்த்தைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் வந்து இறங்கியதும், அந்த பணிப்பெண் நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். விமான பணிப்பெண்ணின் புகாரை தொடர்ந்து சில்வா மைக்கிளிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
அதனைத் தொடர்ந்து சில்வா மைக்கிளை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
On Thursday, September 18, 2014 by farook press in    
திருவட்டார் அருகே மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

தெருவிளக்கு எரியவில்லை

திருவட்டாரை அடுத்துள்ள வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18-வது வார்டுகளில் கல்லறவிளை, செக்காளவிளை, கொட்டாரவிளை, கொச்சன்குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சுமார் 3 மாதங்களாக எரியவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளை உடனே சரிசெய்யக்கோரி பேரூராட்சி நிர்வாகம், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

நூதன போராட்டம்

இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு தெருவில் திரண்ட அந்த பகுதி மக்கள் அங்குள்ள மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைத்தனர். மேலும், தங்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி கோரிக்கையை வற்புறுத்தி கோஷம் எழுப்பினர்.

இது பற்றி அந்த பகுதி மக்கள் கூறும்போது,“ தெரு விளக்குகள் எரியாததால் இரவில் பெண்கள் நடமாட அஞ்சும் நிலை உள்ளது. மேலும், நகை பறிப்பு உள்பட குற்றச்செயல்களும் நடைபெறுவதால் உடனடியாக தெருவிளக்குகளை எரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும்“ என்று தெரிவித்தனர். 
On Thursday, September 18, 2014 by farook press in ,    
உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. குமரி மாவட்டத்தில் ஓட்டு போட வேண்டிய வாக்காளர்கள் எந்த எந்த இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் 33 உள்ளாட்சி பதவிகளுக்கு 107 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் மற்றும் ஓட்டு போடவேண்டிய இடங்கள் வருமாறு:–
நகரசபை
நாகர்கோவில் நகரசபை 37–வது வார்டு–பறக்கை ரோடு சந்திப்பில் உள்ள அரசு தொடக்கப்பளி, பத்மநாபபுரம் 11–வது வார்டு–தக்கலை அரசுமேல்நிலைப்பள்ளி, குழித்துறை 10–வது வார்டு–விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, 20–வது வார்டு–மார்த்தாண்டம் மாதவவிலாசம் நடுநிலைப்பள்ளி.
பேரூராட்சி
திற்பரப்பு 4–வது வார்டு–சேக்கல் புனித பீட்டர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, ஏழுதேசம் 11–வது வார்டு–ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்றூர் 1–வது வார்டு–தோட்டவாரம் அரசு நடுநிலைப்பள்ளி, கொட்டாரம் 4–வது வார்டு–பெருமாள்புரம் யூனியன் அலுவலகம், கணபதிபுரம் 1–வது வார்டு–சூரப்பள்ளம் அரசு தொடக்கப்பள்ளி, கொல்லங்கோடு 8–வது வார்டு–கொல்லங்கோடு ஸ்ரீதேவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாகோடு 12–வது வார்டு–பேரை அரசு நடுநிலைப்பள்ளி, திங்கள்நகர் 11–வது வார்டு–மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, பளுகல் 5–வது வார்டு–பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி, இரணியல் 13–வது வார்டு–இரணியல் அரசு நடுநிலைப்பள்ளி, ரீத்தாபுரம் 2–வது வார்டு–சரல்விளை அரசு நடுநிலைப்பள்ளி.
ஊராட்சி ஒன்றியம்–மாவட்ட பஞ்சாயத்து
மேல்புறம் ஊராட்சி ஒன்றிய 5–வது வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து 1–வது வார்டு (மேல்புறம்) வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய இடங்கள்:
மஞ்சாலுமூடு ஊராட்சிக்கு உட்பட்ட முக்கூட்டுக்கல் திருக்குடும்ப தொடக்கப்பள்ளி, மஞ்சாலுமூடு அரசு தொடக்கப்பள்ளி, முழுக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பந்தல்விளை காமராஜர் நினைவு உயர்நிலைப்பள்ளி.
ஊராட்சி வார்டுகள்
தேரேகால்புதூர் 9–வது வார்டு–கோதைகிராமம் அரசு தொடக்கப்பள்ளி, தோவாளை 4–வது வார்டு–தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி, தர்மபுரம் 6–வது வார்டு–காற்றாடித்தட்டு அரசு நடுநிலைப்பள்ளி, வெள்ளிச்சந்தை 4–வது வார்டு–சரல் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, 10–வது வார்டு–வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலைப்பள்ளி, குருந்தன்கோடு 4–வது வார்டு–கொடுப்பைக்குழி அரசு தொடக்கப்பள்ளி, ஆத்திவிளை 4–வது வார்டு–ஆலங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, பேச்சிப்பாறை 2–வது வார்டு–குற்றியார் அரசு ரப்பர்கழக நடுநிலைப்பள்ளி, செறுகோல் 3–வது வார்டு–செறுகோல் அரசு தொடக்கப்பள்ளி, மத்திக்கோடு 10–வது வார்டு–மாத்திரவிளை புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி.
மிடாலம் 5–வது வார்டு–உதயமார்த்தாண்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, நட்டாலம் 6–வது வார்டு–வாழைத்தோட்டம் அரசு தொடக்கப்பள்ளி, விளாத்துறை 15–வது வார்டு–தும்பாலி தூய இருதய அன்னை தொடக்கப்பள்ளி, குளப்புறம் 1–வது வார்டு–பிராகோடு கிறிஸ்து அரசர் உயர்நிலைப்பள்ளி, மெதுகும்மல் 9–வது வார்டு–வாறுதட்டு எம்.எம்.கே.எம்.உயர்நிலைப்பள்ளி, மலையடி 7–வது வார்டு–மேல்பாலை அரசு தொடக்கப்பள்ளி.
காலை 7 மணிமுதல்...
மேற்கண்ட வாக்குச்சாவடிகளில் நகரசபை மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பிற வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுச்சீட்டுகளும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது.
இதை முன்னிட்டு அந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணியில் மொத்தம் 700 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பில் காலியாக உள்ள பதவிகளுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு உள்பட மொத்தம் 35 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

7 உள்ளாட்சி பதவிகள்

பின்னர் கடந்த 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலின்படி ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு, பவானி நகராட்சி 7-வது வார்டு, சத்தியமங்கலம் ஒன்றியம் 15-வது வார்டு மற்றும் கோபி ஒன்றியம் 8-வது வார்டு ஆகிய 6 வார்டு கவுன்சிலர் பதவி மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜன் நகர் ஊராட்சி தலைவர் பதவி என மொத்தம் 7 உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. பிற பதவிகளுக்கும் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

24 பேர் போட்டி

ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 8 பேர் போட்டியில் உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1.டி.பாலசுப்பிரமணியம் (அ.தி.மு.க.)

2.பி.பிரபு (காங்கிரஸ்)

3.கே.மணி (பா.ஜனதா),

4.பி.ராஜா (மா.கம்யூனிஸ்டு)

5.கே.சுரேஷ் (சுயே.)

6.செந்தில்குமார் (சுயே.)

7.மெய்வேல்(சுயே.)

8.மோகனசுந்தரம் (சுயே.)

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 24 பேர் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்குகிறது

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், கை விரலில் வைக்கப்படும் மை மற்றும் தேர்தலுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு அந்தந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கதிரம்பட்டி மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அடிப்படை வசதிகள்

கதிரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளப்பாறை, மணல்மேடு ஆகிய பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் வடிகால் வசதி, மின்சார வசதி, ரோடு வசதி உள்பட பல அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

இங்குள்ளவர்கள் வீட்டு வரி, நில வரி, தண்ணீர் வரி ஆகியவையும் அரசுக்கு செலுத்தி வருகின்றனர். மேலும் அரசின் சார்பில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவையும் இங்குள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏ. தலைமையில் மனு

இதேப்பகுதியில் மின்வாரியத்தின் துணை மின்நிலையமும், மின்வாரிய குடியிருப்புகளும் உள்ளது. அதுமட்டுமின்றி சிறந்த கிராமம் என்ற ஜனாதிபதி விருதையும் இந்த கிராமம் பெற்று உள்ளது. எனவே இங்குள்ளவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் வெள்ளப்பாறை, மணல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வீடுகளை அகற்ற...

கதிரம்பட்டி ஊராட்சியில் மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு வேறு வீடுகள் எதுவும் இல்லை.

இந்தநிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் வீடுகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே இங்குள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதில், மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஈரோடு ஒன்றியக்குழு தலைவர் கண்ணம்மாள் முத்துசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.