Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
சேமநல நிதி வட்டி தொகையை வழங்கக்கோரி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாக சேமநல நிதி வட்டித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோல், பணியின்போது இறந்த தொழிலாளர்களுக்கும் பண பலன்கள் வழங்கப்படவில்லை.

நிலுவையில் உள்ள சேமநல நிதி வட்டி தொகையை உடனடியாக வழங்கக்கோரி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்றும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

நிலுவையில் உள்ள சேமநலநிதி வட்டி தொகை மற்றும், இறந்தவர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையாளர் ராஜன் விரைந்துவந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர், போராட்டக்காரர்கள் ஆணையாளரின் அறை கதவை தட்டி கோஷங் கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் தலைமையிலான போலீசார் விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். நேற்று காலை 11 மணியளவில் தொடங்கிய அவர்களது போராட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது.

ரூ.1 கோடியே 17 லட்சம் நிலுவை

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜனிடம் கேட்டபோது, ‘சுமார் 1,600 துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேம நல நிதி வட்டி தொகை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்கான முழு நிதி இன்னும் வரவில்லை. 1990-2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் வழங்க வேண்டிய நிதி சுமார் சுமார் ரூ.1 கோடியே 17 லட்சம் வந்து உள்ளது. அந்த தொகையை அடுத்த மாதம் தொடக்கத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக பிரித்து வழங்க இருக்கிறோம். 2001-ம் ஆண்டில் இருந்து கொடுக்க வேண்டிய தொகைக்கான நிதி வந்ததும், பின்னர் கொடுக்கப்படும்’ என்றார். 
On Friday, September 19, 2014 by farook press in ,    
சித்தோடு ராயபாளையம் கூட்டுறவு காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர். அவருடைய மனைவி பெரியம்மா (வயது 65). இவரை கடந்த 27–8–2003–ம் அன்று திருவாரூரை சேர்ந்த ஆதி என்கிற அருண்குமார் உள்பட 3 பேர் கொலை செய்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2004–ம் ஆண்டு ஜாமீனில் அருண்குமார் வெளியே வந்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையில் கோர்ட்டில் ஆஜராகமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அருண்குமாரை சித்தோடு போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் தேனி மாவட்டம் தாமரைக்குளம் அருகே உள்ள பெரியகுளம் காலனியில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அருண்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருண்குமார் ஈரோடு 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அருண்குமார் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
ஈரோடு அருகே அனுமதியின்றி இயங்கிய தனியார் ‘சிப்ஸ்’
ஆலைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சீல் வைப்பு
ஈரோடு அருகே முள்ளாம்பரப்பை அடுத்த அசோகபுரம் பகுதியில் கோவையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ‘சிப்ஸ்’
தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை முறையாக அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் ஈரோடு மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் அந்த ஆலைக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த ஆலை அனுமதியின்றி இயங்கியது தெரிய வந்தது. இதையொட்டி அந்த ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பறிமுதல்
மேலும் ஆலையில் இருந்த சிப்ஸ், முறுக்கு மற்றும் எண்ணை உள்பட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி கூறும்போது,`` இந்த ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் உணவுப்பொருட்களை கோவை உணவு பகுப்பு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இன்னும் 15 நாட்களில் உணவுப்பொருட்களின் பரிசோதனை முடிவுதெரியவரும். தரமற்ற உணவுப்பொருட்களை தயாரித்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்`` என்றார்.
On Friday, September 19, 2014 by farook press in ,    
கோபி மொடச்சூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் பவானி புதிய பஸ்நிலையத்தில் இருந்து மைலம்பாடி வழியாக செல்லும் பஸ்சில்ஏறி அமர்ந்து இருந்தார். அப்போது இவர் அமர்ந்து இருந்த இருக்கைக்கு முன்பு பஸ் டிரைவர் போன்று காக்கிச்சட்டை அணிந்த ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்போது ஆறுமுகத்துக்கும், அந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மறைத்து வைத்து இருந்த பிளேடால் ஆறுமுகத்தை கழுத்து, மார்பு மற்றும் கைகளில் அறுத்துவிட்டு தப்பி ஓடினார். அந்த மர்மநபரை பிடிக்க ஆறுமுகம் ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். ஆனால் அந்த நபரை பிடிக்க முடியவில்லை. இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமுகத்தை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தை பிளேடல் கீறிவிட்டு தப்பிஓடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
On Friday, September 19, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங் களில் காட்டு யானைகள் மிதித்து அப்பாவி கிராம மக்கள் பலியாவது தொடர்கதையாகி வரு கிறது. வனத்துறை ஒத் துழைப்பு இல்லாத நிலை யில் கிராம மக்களே யானைகளை விரட்ட முயற்சிக்கும் போது இது போன்ற அசம்பா விதங் கள் நிகழ்வதாக குற்றம் சாட்டப்படுகிறது

காட்டு யானை கூட்டம்

வனப்பகுதிகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்னி, மலைப்பாம்பு போன்ற காட்டு விலங்குகள் அதிகம் வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வரு வதால் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கை யான நிகழ்வாகி விட்டது.

குறிப்பாக, காட்டு யானை கள் கிராமப் பகுதிகளுக்குள் மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலு வலகம் வரை வந்து பொது மக்களை மிரட்டி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தது. இதனால் யானைகள் மிதித்து பலியாவோரின் எண்ணிக் கையும் ஆண்டுதோறும் அதி கரிக்க தொடங்கி உள்ளது.

விவசாய பயிர்கள் நாசம்

கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிக்குள் நுழைந்தது. இவை கள் 2 பிரிவுகளாக பிரிந்து கர் நாடகா மாநில எல்லை யோரம் உள்ள வனப்பகுதி களில் ஒரு குழுவும், ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள மகாராஜகடை, குருவிநாயனப் பள்ளி, காளிக்கோவில் போன்ற கிராமப் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியிலும் சுற்றி வருகிறது.

குறிப்பாக மகாராஜகடை பகுதியில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி வந்து விவசாய நிலங்களில் பொது மக்கள் பயிரிட்ட விவசாய பயிர்களையும், மாந்தோட்டங் களையும் அழித்து வந்தன. இரவு நேரங்களில் வரும் காட்டு யானை கூட்டத்தின் அட்டகாசத்தை பார்த்த இந்த பகுதி விவசாயிகள் மனம் நொந்து போய் உள்ளனர்.

யானை சாவு

இதுகுறித்து கிராம மக்கள் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், காட்டு யானைகளை விரட்ட வனத் துறை முழுமுயற்சி எடுக்க வில்லை. இந்த நிலையில் மகாராஜகடை பகுதியில் மாசு கலந்த தண்ணீரை குடித்த யானை ஒன்று பலியானது. அதற்கு பிறகும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த யானைகள் மகாராஜாகடை கிராமத்தை ஒட்டிய பகுதியில் இரவு நேரங் களில் வரத் தொடங் கியது.

எந்த நேரமும் ஊருக்குள் நுழையும் என்ற நிலையில் கிராம மக்களே யானைகளை காட்டுக்குள் விரட்டலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து தீப்பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் பார்த்துக் கொண் டனர்.

விவசாயி பலி- சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மகாராஜகடை முனியப்பன் கோவில் பகுதிக் குள் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வரவே, கிராம மக்கள் அவற்றை விரட்ட தீப்பந்தங்களுடன் கிளம்பினார்கள். அவர்களை யானைகள் திருப்பி விரட்ட தொடங்கியது. இதில் அனை வரும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் இதே கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன்(55) என்ற விவசாயி யானையிடம் சிக்கிக் கொண்டார்.

யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். இதைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் திரண்டனர். அவர்கள் பலியான சின்னப் பையனின் உடலை மகாராஜ கடையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப் போது வனத்துறை அலுவல கத்தை சிலர் உடைத்து சூறை யாடினார்கள்.

பொதுமக்கள் விரக்தி

இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் நடராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பிணத்துடன் மறியலில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். அப்போது ஆவேசத்துடன் பேசிய அந்த பகுதி பொது மக்கள், கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சுற்றித் திரியும் காட்டு யானைகளை விரட்ட வேண் டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் அவர்கள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் எங்கள் கிராமத் தையும், பொதுமக்களையும் யானைகளிடம் இருந்து பாதுகாக்க இரவு நேரங்களில் தீப்பந்தம் மற்றும் பட்டாசு களுடன் கிளம்பினோம். இதில் சின்னப்பையன் பரி தாபமாக இறந்து விட்டார். வனத்துறையின் அலட்சியமே இவரின் உயிரிழப்புக்கு காரண மாகும் என தெரிவித்தனர். நள்ளிரவு 2 மணி வரை நீடித்த பொதுமக்களின் போராட்டம், அதிகாலையில் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மகராஜாகடை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
திருச்சியில் 13–வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகள் நேற்று கண்களை கறுப்பு துணியால் கட்டி கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், கைகளில் கம்பு, சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதன போராட்டம்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நதிகளை இணைத்து தேசிய நதிவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகள் திருச்சி அண்ணாசிலை அருகில் கடந்த 5–ந்ம் தேதி முதல் மாநில துணை தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஒவ்வெரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 13–வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. அப்போது விவசாயிகள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், ஒரு கையில் கம்புடனும், மற்றொரு கையில் சட்டி ஏந்தியும் போராட்டம் செய்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
சமயபுரத்தில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பூனாட்சி வழங்கினார்.

விலையில்லா சைக்கிள்கள்

சமயபுரம் மாரியம்மன் கோவில் மேல்நிலைப்பள்ளியில் 103 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் பூனாட்சி கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:–

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் ஒதுக்கீடு செய்யாத நிதியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளி கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்து வருகிறார். மேலும் கல்வி கற்கும் மாணவ–மாணவிகள் எந்த சிரமமும் இல்லாமல் படிக்கும் வகையில் 14 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது.

நிம்மதியாக வாழலாம்

மாணவ–மாணவிகளின் கல்வி தரம் உயர்வதால் அந்த மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ளவர்கள் மாநிலமாக தமிழகம் விரைவில் திகழும். மாணவ–மாணவிகள் 20 வயது வரை கஷ்டப்பட்டு படித்தால் நிம்மதியாக வாழலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட கவுன்சிலர் அரிசி மூக்கன், குணசீலம் ஊராட்சி தலைவர் சத்யநாராயணன், சிறுகாம்பூர் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், ச.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி, ஒன்றிய குழு துணை தலைவர் வெற்றிசெல்வி தர்மலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் முருகேசன், பாசறை ஒன்றிய தலைவர் சமயபுரம் கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

On Friday, September 19, 2014 by farook press in ,    
திருச்சி மாநகரில் பெண்களிடம் சங்கிலி பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9½ பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்களிடம் சங்கிலி பறிப்பு 

திருச்சி மாநகரில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனால் சங்கிலி பறிக்கும் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். இதையடுத்து உதவி கமிஷனர் அருள்அமரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் குட்ஷெட் மேம்பாலம் அருகே நேற்று காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

3 வாலிபர்கள் கைது 

அங்கு நடத்திய விசாரணையில் அவர்கள், பாலக்கரை காஜாப்பேட்டையை சேர்ந்த பிரின்ஸ் (வயது 26), சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த ரெமி (26), வடிவேல் (30) என்பதும், இவர்கள் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் இருந்து தங்க சங்கிலிகளை பறித்து சென்றதும் தெரியவந்தது.

மேலும், தங்க சங்கிலிகளை பறித்து சென்று அதனை விற்ற பணத்தில் 3 பேரும் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். இதையடுத்து இவர்களிடம் இருந்து 9½ பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர்.
On Friday, September 19, 2014 by farook press in ,    
சென்னை கடற்கரை பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 7.45 மணிக்கு கடற்கரையை தூய்மைப்படுத்தும் தினம் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக கடலோர காவல் படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

உலகம் முழுவதும் மனிதர்களால் கழிவு பொருட்கள் கொட்டும் இடமாக கடல் பகுதிகள் கருதப்படுகிறது. கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட குப்பைகளில் 59 சதவீத கழிவுகள் பூமியில் இருந்து மனிதர்கள் வீசும் மக்கும் தன்மையற்ற கழிவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய குப்பைகளால் கடல்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே கடல் பகுதிகளை குப்பை–மேடுகளாக்குவதை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் 1986–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3–வது வாரத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நாளை காலை 7.45 மணி முதல் காலை 10 மணி வரை கடற்கரை பகுதிகளில் இந்த தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் கடலோர காவல்படை, பள்ளிகள்–கல்லூரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொள்கிறார்.

மெரினா கடற்கரையில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார். நமது கடற்கரைகளை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.