Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
வடமதுரை அருகே மூதாட்டியை கொலை செய்து பணம், நகையை மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மூதாட்டி கொலை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். (வயது 54). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி எலிசபெத் ராணி (50). இவர் முள்ளிப்பாடியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு லியோ பிரான்சிஸ் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று எலிசபெத் ராணி வேலைக்கு சென்று விட்டார். மதியம் ஆரோக்கியதாஸ் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று இருந்தார். வீட்டில் ஆரோக்கியதாசின் தாயார் அந்தோணியம்மாள் (75) என்பவர் மட்டும் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் ஆரோக்கியதாசின் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு வீட்டில் இருந்த அந்தோணியம்மாளை அவர்கள் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நகை, பணம் கொள்ளை

பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பீரோவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சுமார் 6½ பவுன் தங்க நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றனர். பின்னர் வீடு திரும்பிய ஆரோக்கியதாஸ் வீட்டிற்குள் தாயார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவழகன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன், போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் ஆகியோர் விரைந்து வந்தனர்.

மோப்ப நாய் சோதனை

பின்னர் கைரேகை நிபுணர் வரவழைத்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மோப்ப நாய் லிண்டா வரவழைக்கப்பட்டு வீட்டில் உள்ள அறைகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் செட்டியப்பட்டி பிரிவு வரை மோப்ப நாய் ஓடி நின்றது. ஆனால் யாரையும் மோப்ப நாய் கவ்வி பிடிக்கவில்லை.

அந்தோணியம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதர் அந்தோணியம்மாளிடம் பேசிக்கொண்டு இருந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர் கூறிய அடையாளத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
வத்தலக்குண்டுவில் ஆசைக்கு இணங்க மறுத்த கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கருத்து வேறுபாடு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் மாலதி. இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்தினி என்ற மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர்.

மாலதி வத்தலக்குண்டுவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் பாண்டியன் வீட்டுக்கு அருகே பண்ணைக்காட்டை சேர்ந்த மணிகண்டபிரபு (வயது 38) என்பவர் வாடகை வீட்டில் குடியிருக்க வந்தார். இவரும் திருமணம் ஆகி மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டபிரபு வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

மீண்டும் திருமணம்

இந்த நிலையில் மாலதி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியனிடம், மணிகண்டபிரபு கேட்டுக் கொண்டார். இதையொட்டி மணிகண்டபிரபுவுக்கும், மாலதிக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் இரண்டுபேரும் பாண்டியன் வீடு அருகிலேயே குடியிருந்து வந்தனர். தற்போது மாலதி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். மாலதி ஆன்மீகத்தில¢ அதிக ஈடுபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது அவர் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் இருந்து வந்தார்.

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாலதியை ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டபிரபு வற்புறுத்தி உள்ளார். மாலதி கோவிலுக்கு விரதம் இருந்து வந்ததாலும், அருகில் 11 வயது மகள் நந்தினி தூங்கிக் கொண்டு இருந்ததாலும் அவர் கணவரின் அழைப்பை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டபிரபு வீட்டில் இருந்த போர்வையால் மாலதி முகத்தை மூடி மூச்சு த்திணற வைத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் பாண்டியன் தனது மகளை பார்ப்பதற்காக மாலதி வீட்டுக்கு சென்றார். ஆனால் அவரது வீடு பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டியன் பக்கத்து வீட்டுக் காரர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாலதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது மகள் நந்தினி அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

பரபரப்பு

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜி, சப்-இன்ஸ¢பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சென்று மாலதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டபிரபுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் 11–வது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததையடுத்து, அவருடைய 10 குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கிறார்கள். அவர்களை தாயில்லா குறை தெரியாமல் வளர்க்கப்போவதாக அவர்களுடைய தாத்தா கூறி உள்ளார்.

பிரசவத்தின்போது பெண் சாவு 


திண்டுக்கல் தோட்டனூத்து பகுதியை சேர்ந்தவர் சுப்பன் (வயது 66). இவர், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 60). இவர்களுக்கு மணிகண்டன் (40) என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர்.

இதில் மணிகண்டனுக்கு சீலப்பாடியில் உள்ள உறவினர்கள் வழியில் சித்ரா (வயது 35) என்ற பெண்ணை கடந்த 1998–ம் ஆண்டு சுப்பன் திருமணம் செய்துவைத்தார். மணிகண்டனுக்கும், சித்ராவிற்கும் 10 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த நிலையில், 11–வது முறையாக கர்ப்பமான சித்ரா, பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது பரிதாபமாக இறந்தார்.

10 குழந்தைகளை பெற்றெடுத்த சித்ராவின் இறப்பு பற்றி அவருடைய மாமனார் சுப்பன் கூறியதாவது:–

10 குழந்தைகள் 


மணிகண்டன், சித்ரா தம்பதிக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முத்தமிழ் முதல்வன் என்று பெயர் வைத்தோம். அவனுக்கு 15 வயது ஆகிறது. 10–ம் வகுப்பு அரசு தேர்வில் தோல்வியடைந்த அவன் மீண்டும் தேர்வு எழுத படித்துக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு அடுத்து மகாலட்சுமி (14) திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்.

அதற்கு அடுத்ததாக பிறந்த சத்தியாலட்சுமி (13) 9–ம் வகுப்பும், யோகேஸ்வரி (12) 7–ம் வகுப்பும், யோகேஸ்வரன் (10) 5–ம் வகுப்பும், பிரபாகரன் (9) 4–ம் வகுப்பும், கொடியரசி (7) 2–ம் வகுப்பும், சீதா (4) தோட்டனூத்தில் உள்ள பால்வாடியிலும் படித்து வருகின்றனர். சீதாவிற்கு அடுத்ததாக குபேரன் (2), மாரீஸ்வரி (வயது 1) என 10 குழந்தைகள் உள்ளனர்.

குளிர்பானம் 


இந்த நிலையில், சித்ரா 11–வது முறையாக கர்ப்பமானார். 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, திடீரென ஒரு நாள் சித்ராவிற்கு வயிற்று வலி வந்தது. கடையில் குளிர்பானம் வாங்கி கொடுங்கள் என்று கேட்டார். வாங்கி கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் வலி நின்று விட்டது என்றார். அதற்கு பின்பு 2 முறை வயிற்று வலி வந்து இருக்கிறது. அப்போதும் எனது மனைவி மூலம் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு சித்ரா சமாளித்து இருக்கிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்ட அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தோம். ஆஸ்பத்திரியில் அவருக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.

சித்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை 2 நாட்களுக்கு முன்பே இறந்து விட்டது. ஆனால் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்து கொள்ளாத காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது.

குழந்தைகள் தவிப்பு 


அவரை இழந்து 10 குழந்தைகளும் தவிக்கிறார்கள்.

சித்ரா தனது குழந்தைகளை அளவு கடந்த பாசத்துடன் வளர்த்தார். அதைப்போலவே நானும் அவரது குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுகிறேன். விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. நான் அரசு வேலை பார்த்து ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இப்போது வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறேன். எனது மகன் கூலி வேலைதான் செய்து வருகிறார். அவர் சம்பாதித்து கொடுக்கும் பணத்தை கொண்டும், எனது வருமானத்தை வைத்தும் 10 குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மாணவி கற்பழித்து கொலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியை அடுத்த தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாட்டுக்காரன் என்கிற பூசாரி. இவரது மகன் மாதப்பன். விவசாயி. மாதப்பனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு செவ்வந்தி (வயது 15) என்ற மகள் இருந்தார். செவ்வந்தி பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை தினமும் கோவிந்தசாமி  பள்ளிக்கு கூட்டி செல்வது வழக்கம். கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5–ந் தேதி கோவிந்தசாமி விவசாய வேலைக்காக வெளியே சென்று விட்டார். இதனால் சித்ரா மாணவியை மாதப்பனுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்போது மாதப்பன் தொட்லாம்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றிற்கு மாணவியை கடத்தி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை அதே கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டார்.

விவசாயிக்கு ஆயுள் தண்டனை 

அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் மாணவி உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக  மாதப்பனை போலீசார் கைது  வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி குற்றம்சாட்டப்பட்ட  விவசாயி மாதப்பனுக்கு  ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை நிவாரண உதவியாக அந்த மாணவியின் குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஓசூர் நகராட்சி 16–வது வார்டில் என்.டி.ஆர். நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து என்.டி.ஆர்.நகர் பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஓசூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் நகராட்சி கமிஷனர் டாக்டர் இளங்கோவனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கூறியுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் டாக்டர் இளங்கோவன், சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான ரோலர்ஸ் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி ரிம் பள்ளியில் நடந்தது. இதில் 250–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டார் கள். தமிழ்நாடு ரோலர்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் நடுவராக சென்னையை சேர்ந்த கார்த்திக், 2–ம் நிலை நடுவராக கிருஷ்ணகிரி ரோலர்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் செயலாளர் ராஜ்குமார், மூன்றாம் நிலை நடுவராக பாரத் ஸ்கேட்ஸ் ஸ்கில் ரோலர்ஸ் கேட்டிங் சிறப்பு பயிற்சியாளர் ரகமத் ஆகியோர் செயல்பட்டார்கள்.  ரோலர் அட்சஸ்டபிள் ஸ்கேட்டிங், ஸ்கோட் ஸ்கேட்டிங், இன்லைன் ஸ்கேட்டிங் ஆகிய பிரிவுகளில் வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி பாரத் ஸ்கேட்ஸ் ஸ்கில் மாணவ–மாணவிகள் 52 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார்கள்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் தியாகு விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்பட சில பொருட்கள் திருட்டு போயின. இது குறித்து தியாகு ஆனைமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் உள்பட பொருட்களை திருடிய நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் செல்போனில் உள்ள ரகசிய குறியீட்டு எண் மூலம் அதனை திருடிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார் கள். விசாரணையில் அந்த அவர் திருப்பூர் மாவட்டம் வேலாம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் செல்போன் திருடியதாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அய்யா வைகுண்ட சிவபதி

கோவை சரவணம்பட்டியை அடுத்த வரதய்யங்கார்பாளையம் லட்சுமி கார்டனில் அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பணிவிடை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

அது போல் இந்த ஆண்டுக்கான புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பதி நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு நாதஸ்வர வாத்தியம், செண்டை வாத்தியம் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 5.30 மணிக்கு உகபடிப்பு, அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளல், காலை 8 மணிக்கு அன்னதானம், மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு பணிவிடை, அன்னதானமும், இரவு 7.30 மணிக்கு அகில திரட்டு சிறப்பு சொற்பொழிவும், தொட்டில் வாகனத்தில் அய்யா திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

திருவீதி உலா

திருவிழாவையொட்டி 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை, மாலை உகபடிப்பும், மதியம் உச்சிப்படிப்பும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. தினமும் 6 மணிக்கு சொற்பொழிவும், இரவு 8.30 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

20-ந்தேதி மயில் வாகனத்திலும், 21-ந்தேதி அன்ன வாகனத்திலும், 22-ந்தேதி தொட்டில் வாகனத்திலும், 23-ந்தேதி பூஞ்சப்பர வாகனத்திலும், 24-ந்தேதி சர்ப்ப வாகனத்திலும், 25-ந்தேதி கருட வாகனத்திலும், 26-ந்தேதி குதிரை வாகனத்திலும், 27-ந்தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். 27-ந்தேதி இரவு 9 மணிக்கு செந்தில்குமாரின் அய்யா நாமகீத இன்னிசை கச்சேரி நடைபெறும்.

தேரோட்டம்

திருவிழாவின் 10-ம் நாள்(28-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு உகபடிப்பு, பணிவிடை, அன்னதானமும், பகல் 11.30 மணிக்கு பல்லக்கு வாகனம் மூலம் அய்யா வைகுண்டர் திருத்தேருக்கு எழுந்தருளல், பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு இளைபெருமாளின் இசை நிகழ்ச்சி நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா வைகுண்டர் அம்மையப்பராக எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். அதிகாலை 3 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
கோவை அருகே வீடு புகுந்து முதியவர்களை தாக்கி நகைகளை கொள்ளை கும்பல் பறித்து சென்றது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் டி.ஐ.ஜி.யும், போலீஸ் சூப்பிரண்டும் நேரில் விசாரணை நடத்தினர்.

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்

கோவை சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயகுமாருடன் அவரது தந்தை மீனாட்சிசுந்தரம் (67), தாய் சியாமளா (61), மனைவி முத்துமாரி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

விஜயகுமார் நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் முத்துமாரி, மீனாட்சி சுந்தரம், சியாமளா ஆகியோர் இருந்தனர். இரவு சாப்பிட்டு விட்டு அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று தூங்கி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விஜயகுமாரின் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டு பிரதான கதவில் ஓட்டி இருந்த நிலைக்கண்ணாடியை கழற்றினார்கள். அதன் பிறகு கண்ணாடி இருந்த இடத்தின் வழியே கையை உள்ளே நுழைத்து உட்புறமாக பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளனர். மர்ம நபரில் ஒருவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு ஆட்கள் யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டான்.

முதியவர்கள் மீது சரமாரி தாக்குதல்

கதவு திறக்கப்பட்ட சத்தத்தை கேட்டு மீனாட்சி சுந்தரம் யாரது? என்று சத்தம் போட்டு கொண்டே தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டிற்குள் நின்றிருந்த மர்ம நபர், மீனாட்சி சுந்தரத்தின் தலையில் பலமாக தாக்கினார். இதில் அம்மா என்று அலறியபடி அவர் கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த சியாமளாவையும் அந்த மர்ம நபர் தலையில் பலமாக தாக்கினார். அவரும் அலறியபடியே கீழே விழுந்தார்.

மாமனார், மாமியாரின் அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து அறையில் இருந்து முத்துமாரி சத்தம் போட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களும் திடீரென்று தங்களது வீட்டில் விளக்கை எரியவிட்டு கதவை திறந்தனர். இதை பார்த்த வெளியே நின்றிருந்த ஆசாமி வீட்டிற்குள் இருக்கும் கொள்ளையனுக்கு சைகை காண்பித்தான். உடனே வீட்டிற்குள் நின்றிருந்த அந்த ஆசாமி, சியாமளா அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். வெளியே நின்றிருந்த ஆசாமியும் தப்பி ஓடி விட்டான்.

தீவிர சிகிச்சை

இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மீனாட்சிசுந்தரமும், சியாமளாவும் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். உடனே முத்துமாரி 108 ஆம்புலன்சுக்கும், தனது கணவருக்கும் தகவலை தெரிவித்தார். இதற்கிடையே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடி வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மற்றொரு வீட்டில் திருட்டு

இதே போல் விஜயகுமாரின் வீட்டில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனசேகரன் (33) என்பவரது வீட்டிலும் அந்த கொள்ளை கும்பல் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நேற்று தனசேகரன் தனது மனைவி மதுமதி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். வீட்டின் கதவிலிருந்த கண்ணாடியை கழற்றி உட்புறமாக பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளே புகுந்த ஆசாமி குழந்தை இடுப்பில் கட்டி இருந்த வெள்ளி அரைஞாண் கொடியை அறுத்தான். சத்தம் கேட்டு எழுந்த மதுமதி தனது கணவரை எழுப்ப முயன்று இருக்கிறார். அப்போது கொள்ளையன் மதுமதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு வெள்ளி அரைஞாண் கொடியையும், வீட்டில் இருந்த கவரிங் நகையையும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டான்.

போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை

இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் டி.ஐ.ஜி. மணீஸ் திவாரி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மோப்ப நாய் ஹேரி வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி இருக்கிறதா? என்று ஆய்வு நடத்தினர்.