Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை ரெயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணியை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.
இந்தியாவை சுத்தப்படுத்தும் வகையில் தலைநகர் டெல்லியில் ‘தூய்மையான இந்தியா–2014’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க.வினர் இந்தியா முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் முக்கிய ரெயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களில் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சென்னையில் ரெயில் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களிலும் ‘தூய்மையான இந்தியா’ திட்டம் ஒரேநேரத்தில் செயல்படுத்தப்பட்டது. ரெயில்வே அலுவலக சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. கழிப்பறைகள் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. ரெயில்வே தண்டவாளங்கள், காலனிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மேலும், பணி செய்யும் அலுவலக வளாகங்கள் அடிக்கடி தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோட்ட அதிகாரிகளிடம் எடுத்து கூறப்பட்டது.
இந்தநிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சென்னை கோட்டை ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மின்சார ரெயிலில் ஏறி கோட்டை–தாம்பரம் மற்றும் தாம்பரம்–சென்னை எழும்பூர் மார்க்கம் வரை ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். மின்சார ரெயிலில் வந்த பயணிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் பயணிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களிடம் ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்த முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் ராகேஷ் மிஸ்ரா தூய்மைப்படுத்தும் முகாமை ஏற்படுத்தி, அவரே ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.
அதேபோல் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே மகளிர் நல மேம்பாட்டு ஆணைய தலைவர் மஞ்சுளா மிஷ்ரா தலைமையில் நடந்த தூய்மை முகாமிலும் அவர் கலந்துகொண்டார்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், மூர்மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மண்டல மேலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தில் ஈடுபட்டனர். மனித சங்கிலி, பேரணி, கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும் பொதுமக்கள்–பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
‘தூய்மையான இந்தியா’ திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ரெயில் நிலையத்துக்கு வரும் குழந்தைகளை கவர்வதற்காகவும், ரெயில்வே ஊழியர்கள் புகழ்பெற்ற ‘கார்ட்டூன்’ கதாபாத்திரங்களைப் போல உடையணிந்து இருந்தனர். தெற்கு ரெயில்வே முழுவதும் நடந்த சுத்தப்படுத்தும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி–கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தாம்பரத்தில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் நடந்த தூய்மையான இந்தியா விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் மண்டல முதன்மை ஆணையாளர் மதியழகன் தொடங்கி வைத்தார்.
இதில் தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஏந்திய பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சென்றனர். இதில், ஆணையாளர்கள் முருகவேல், விஸ்வநாதன், பாலசுப்பிரமணியன், பிஜயந்த் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை மெரினாவில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). கார் டிரைவரான இவர் கடந்த புதன்கிழமை அன்று காலையில், மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரில் கடற்கரை மணலில் பிணமாக கிடந்தார். கத்தியால் குத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
கார்த்திக்கின் உடலை போலீசார் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்
இந்த நிலையில் டிரைவர் கார்த்திக் எப்படி கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்று துப்புதுலங்கி விட்டதாக நேற்று இரவு பரபரப்பு தகவல்கள் வெளியானது. ஆனால் விசாரணை முடிவடையாததால், போலீசார் தகவல்களை வெளியிட மறுத்தனர்.
கொலை செய்யப்பட்ட டிரைவர் கார்த்திக்கின் மனைவி மற்றும் 4 பேரை போலீசார் நேற்று இரவு பிடித்து வந்தனர். மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கார்த்திக் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு போனார். அண்மையில் தான் விடுதலையாகி வந்தார். விடுதலையாகி வந்தவுடன் அவரை தீர்த்துக்கட்டி விட்டனர். அவரது மனைவியுடன் நல்லபடியான இல்லற வாழ்க்கையில் அவர் ஈடுபடவில்லை என்று தெரிகிறது.
அவர்கள் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இல்லற வாழ்க்கையில் வீசிய புயல்தான், கார்த்திக் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு தொழில் பின்னணியில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற இன்னொரு கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக சென்னையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாக்கள் களையிழந்தன. இதனால் கோயம்பேட்டில் பொரி மற்றும் பூசணிக்காய் போன்ற பொருட்கள் தேக்கம் அடைந்தன.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர், பெங்களூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக அரசு அலுவலகங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுதபூஜை விழா, இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறவில்லை. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் ஆயுத பூஜை களை இழந்தத
இதேபோன்று, ஆயுதபூஜை விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடும் ஆட்டோ நிறுத்த சங்கங்களும் ஆயுதபூஜையை புறக்கணித்தன.
இதனால், பூஜை பொருட்களான அவல், பொரி, கடலை மற்றும் திருஷ்டி பூசணிக்காய் போன்றவைகளின் விற்பனை மந்தமானது. கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த இதுபோன்ற பொருட்கள் தேக்கம் அடைந்தன.
பொரி-கடலை வியாபாரியான தினேஷ்குமார்-காளீஸ்வரி தம்பதியினர் கூறும்போது, “வழக்கமாக ஆண்டுதோறும் 350 முதல் 400 மூட்டை பொரி விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு 150 மூட்டை பொரி மட்டுமே விற்பனையாகி உள்ளது” என்றனர்.
பூசணிக்காய் வியாபாரி ஜெயந்தி கூறும்போது, “வழக்கமாக 1 டன் பூசணிக்காய் விற்பனை ஆகும். கடந்த ஆண்டு ஒரு பூசணிக்காய் 80 முதல் 120 ரூபாய் வரை விற்றபோதும் அனைத்து காய்களும் விற்றுத்தீர்ந்தன. ஆனால் இந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக போராட்டங்கள் நடைபெறுவதால் ஆயுதபூஜை சிறப்பாக இல்லை. இதனால் ஒரு பூசணிக்காய் 30 முதல் 50 ரூபாய் வரை என விலை குறைவாக இருந்தாலும் 50 சதவீதம் கூட விற்பனை ஆகவில்லை” என்றார்.
பழ வியாபாரி பேபி கூறும்போது, “கடந்த ஆண்டு அதிகமான விலை என்றாலும் அனைத்து பழங்களும் விற்றுவிட்டதால் நல்ல லாபம் கிடைத்தது. இந்த ஆண்டு, அதிக லாபமின்றி விற்றபோதும் பழங்கள் விற்பனையாகவில்லை. ஒரு கிலோ ஆப்பிள் 60 முதல் 100 ரூபாய்க்கும், சாத்துக்குடி 50 ரூபாய்க்கும், கொய்யாப்பழம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடவில்லை என்பதால் பழங்கள் விற்பனை மந்தமாக உள்ளது” என்றார்.

மழை இல்லாததால் பூக்கள் வரத்து வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்த பூக்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன என்று பூ வியாபாரிகள் சங்க தலைவர் எம்.டி.அருள் விசுவாசம் கூறினார்.

Friday, October 03, 2014

On Friday, October 03, 2014 by farook press in ,    
திருப்பூர், அக்.3-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக ஆதரவு தெரிவித்துஅக்.4 சனிக்கிழமை திருப்பூரில் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய சங்கங்களின் சார்பாக ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கும்பொது மக்களுக்கும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோரியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் கே.காமராஜ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சூழ்நிலையில்கடந்த நான்கைந்து நாட்களாக ஆளும்கட்சியினர் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பொது மக்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவினர்  அமைதியான முறையில் உண்ணாவிரதம்கறுப்புச் சட்டை அணிதல் போன்று செயல்படுவது அவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால்நீதிமன்றம் சட்டரீதியாக தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில்அதை ஆட்சேபிப்பதாக இருந்தால்சட்டப்படி மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜனநாயகரீதியாக கருத்து சொல்வதற்கு அனைத்து தரப்பினருக்கும் உரிமை இருக்கிறது. ஆகையால் தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த விசயத்தில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். ஆனால் திருப்பூர் போன்ற பல லட்சம் தொழிலாளர் உழைக்கும் நகரில்இதுபோன்ற காரணங்களுக்காக உற்பத்தி நிறுத்தம் செய்வது,தொழிலாளர்களுக்கு வேலை இழப்புவருவாய் இழப்பை ஏற்படுத்தும்பொது மக்களுக்கு மேலும் பலவித பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அத்துடன் எதிர்காலத்தில் இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது.
ஆகையால்பொது மக்கள் நலன் கருதி இந்த உற்பத்த நிறுத்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
On Friday, October 03, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுசெயலாளர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி வழிபாட்டு தலங்களில் சர்வ மத பிராத்தனை நடந்தது.
அண்ணா தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்கும்போது எல்லாம் திருப்பூர் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக ரெயில்வே மேம்பாலம், குமரன் மகளிர் கல்லுரி, புதிய பஸ் நிலையம், 103 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வாளகம், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, மாநகராட்சிக்கு 330 கோடியில் 60 வது வார்டுகளுக்கும் சம நிலையில் வளர்ச்சி பணிகள், தினசரி குடிநீர் வழங்க ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இது தவிர பள்ளிகூடங்களை தரம் உயர்த்துவது, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்பது உள்ளிட்ட வைகலும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக தனி நீதி மன்றம் அவருக்கு தவரான தீர்ப்பு வழங்கியுள்ளதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அவருக்கு எதிரான தீர்ப்பு என்று மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட அநீதி என்று அவர் மீண்டு வர வேண்டி தமிழகம் முழுவதும் மக்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அறவழியில் போராடி வருகின்றனர்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.தூய பவுல் தேவாலயம், எஸ்.ஏ.பி.தியேட்டர் அருகில் உள்ள இஸ்லாமியர்கள் மசூதி ஆகியவற்றில் மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில், மகளிர் அணி செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வசகு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலையில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த மூன்று நிகழ்சிகளிலும்  நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஸ்டீபன்ராஜ், அட்லஸ் லோகநாதன்,உஷா ரவிக்குமார், கலைமகள் கோபால்சாமி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம், யுவராஜ் சரவணன், கவுன்சிலர்கள் கணேஷ், சேகர்,ஈஸ்வரன், ஆகியோர்களும், சொர்க்கம் நீதிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சி.எஸ்.ஐ.தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரத்தனியில் பாதிரியார் விஜயன், செயலாளர் ஜெபரூபன் ஜான்சன்,  பொருளாளர் ஜான் சந்திரராஜ், கமிட்டி உறுப்பினர் ஜெயராஜ் உள்ளிட்ட ஏராளமான அண்ணா தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.மேலும் திருப்பூர் ஏற்றுமதி இரண்டாம் நிலை பனியன் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கம், பிரிண்டிங் மற்றும் கம்பக்டிங் சங்கம் ஆகியவை சார்பிலும் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டமும் நடந்தது.  
பின்னர் 'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா மீண்டு வருவார் அம்மா என்ற நோட்டீசை மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான்,ஆகியோர் தலைமையில் அண்ணா தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்

On Friday, October 03, 2014 by Unknown in , ,    
 ‘கிரிக்கெட்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உற்சாகமடையாத ஒருவர் இருக்க முடியுமா என்ன? அதையே தனது கனவாக, தன் லட்சியமாக நினைத்து அதற்காக உழைக்கும் ஒரு இளைஞனின் போராட்டமே ‘ஜீவா’ என்கிற திரைப்படம். சுகங்களும் வலிகளும் நிறைந்ததே வாழ்க்கை. தான் நினைத்த லட்சியத்தை அடைய தன் வாழ்வின் அத்தனை சுகங்களையும் தூக்கி எறிந்துவிட்டு கிரிக்கெட்டை தன் மூச்சாக நினைத்து பயணிக்கிறான் ஜீவா. அவன் கனவில் கல்வீசியவர்கள் யார்? அவனுக்கு நம்பிக்கையின் வாசல் திறக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘ஜீவா’ என்கிற திரைப்படம். 



சிறு வயதிலேயே தாயை இழந்ததால், தந்தை இருந்தும், பக்கத்து வீட்டில் பிள்ளையாய் வளர்கிறான் ஜீவா. சிறு வயதிலிருந்தே அவனுக்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம். நன்றாக படித்து வந்தவன் கிரிக்கெட் மேல் உள்ள கவனத்தால் படிப்பில் பிலோ அவரேஜ் ஸ்டுடெண்டாக மாறுகிறான். ‘கிரிக்கெட்டெல்லாம்... வேண்டாம்’ என்று தந்தை சத்தம் போட, ’கிரிக்கெட்டில் ஜீவா பெரிய ஆளா வருவான்’ என பாராட்டுகிறார் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர். 

இதற்கிடையில் ஜீவா (விஷ்ணு) - ஜெனி (ஸ்ரீதிவ்யா) காதல் இரண்டு வீட்டாருக்கும் தெரியவர. பிரச்சனை வெடிக்கிறது. ஜீவா மதுவுக்கு அடிமையாகிறான். வாழ்க்கையே கேள்விக்குள்ளாகிறது. இதிலிருந்து திசைத் திருப்ப ஒரே வழி அவனுக்கு பிடித்த கிரிக்கெட் தான் என்று முடிவு செய்கிறார்கள் சுற்றியிருப்பவர்கள். 

ஒருவரின் சிபாரிசு மூலமாக சென்னை கிரிக்கெட் கிளப்பில் விளையாட வாய்ப்பும் கிடைக்கிறது. தொடக்கத்தில் மோதிக் கொண்டாலும், உயிருக்கு உயிராக பழகும் ரஞ்சித் (லக்‌ஷ்மண்) நண்பனாக கிடைக்கிறான். இருவரும் கிரிக்கெட் விளையாட்டில் வல்லவர்களாக திகழ்கிறார்கள். 


ஆனால், அடுத்தடுத்த கட்டத்திற்கு மேலே செல்லும் போதுதான், எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்படுகிறது. ‘நாமம்’ போட்டவர்கள் நடத்தும் அர்ப்ப அரசியலில், லீக் மேட்சில் விளையாடும் வாய்ப்பு பரிபோகிறது. இவர்களின் எதிர்காலம் என்ன ஆனது? தன் சமூகத்தை சேர்ந்தவர்களே தேர்வு செய்யும் ‘பார்த்தசாரதி’யை எதிர்த்து கேள்வி கேட்க முடிந்ததா என்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது அடுத்தடுத்த காட்சிகள். க்ளைமாக்ஸ் காட்சியின் சுவாரஸ்யம், இதுவரை எந்த படத்திலும் கிடைக்காத புதிய அனுபவம்.

கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யம் ஒரு பக்கம் இருந்தாலும், நண்பனை இழந்த கோகம், லட்சியத்திற்காக காதலை தூக்கி எறியும் தருணம், மகன் மீது வைத்திருக்கும் தந்தையின் பாசம் என உணர்வுகளை கோர்த்து நம் இதயங்களை நனைத்து வெளியே அனுப்புகிறார் இயக்குனர் சுசீந்திரன். அதிகார வர்க்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரு துணிச்சலான முயற்சியை எடுத்து வெற்றிப் பூமாலைகளோடு வலம் வருகிறார் இயக்குனர்.


‘ஏன்னா, அவங்க உங்க ஆளுங்க!’,‘இத்தனை வருஷமா எங்க ஆட்கள்ல ஒருத்தன் கூடவா திறமைசாலி இல்லை’என்று ‘அவாள்’ அரசியலை எதிர்த்து குரல் எழுப்பும் வசனங்களையும், தட்டிக்கொடுக்கும் சாக்கில் பூணூல் இருக்கிறதா என்று தடவிப்பார்க்கிறேரே அந்த பெரியவாள்... அந்தக் காட்சியையும் படத்தில் வைக்கவும் ஒரு தில் வேண்டுமே! அது சுசீந்திரனிடம் நிறையவே இருக்கிறது. 

விஷ்ணு உண்மையாகவே கிரிக்கெட் வீரர் என்பதால், நடிப்பாக இல்லாமல், காட்சிக்கு காட்சி வேகத்தோடும் உற்சாகத்தோடும் சக்கைப்போடு போடுகிறார். நண்பனை இழந்து கண்ணீர் விடும் காட்சியிலும், ஸ்ரீதிவ்யாவிடம் கிரிக்கெட் தான் முக்கியம் என்று சொல்லி கண்கலங்கும் காட்சியிலும் தான் இயக்குனர்களின் நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். விஷ்ணுவுக்கு அடுத்து, ஏன்? சில காட்சிகளில் விஷ்ணுவை மிஞ்சுகிற அளவிற்கு அதிரடி நடிப்பைக் கொடுத்திருக்கிறார், ‘அன்னக்கொடி’ படத்தில் அறிமுகி, இதில் விஷ்ணுவின் நண்பனாக வரும் லக்‌ஷ்மண்.  

ஸ்ரீதிவ்யா, பள்ளி சிறுமியாகவும், கல்லூரி மாணவியாகவும் இருவேறு வித்தியாசமான தோற்றத்தில் நம்மைக் கொள்ளையடிக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவான நடிப்பைக் கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்கிறார் என்றே சொல்லலாம். சூரி, வழக்கம்போலவே சிரிக்க வைக்கிறார். சீனியர் கிரிக்கெட் வீரராக வரும் அவர், பந்தை தேடிக்கொண்டிருப்பதும், விஷ்ணுவுக்கு ஈடுகொடுத்து ரன்கள் எடுக்க ஓடிவருவதும் ரசிக்கவைக்கிறது. 


டி.இமான் வித்தியாசமான பாடல்களை கொடுத்து அசத்துகிறார். ‘ஒவ்வொன்றாய் திருடுகிறாய்...’ பாடல் காதலர்களின் இதயத்தை திருடிவிட்டது என்பது நிச்சயம். எஸ்.பி.பி குரலில் ‘மீண்டு வா தோழா...’ பாடல் கண்களை ஈரமாக்குகிறது. ஒளிப்பதிவாளர் மதி, நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் அழகாய் பதிவு செய்திருக்கிறார்.  ‘ஒரு ரோசா...’ டாஸ்மாக் பாடலைத் தவிர்த்திருக்கலாம். 

குறைகள் எதையும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, தன் பணியை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
On Friday, October 03, 2014 by Unknown in , ,    

மரணம் நோக்கி ஒரு பயணம்-
உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி
மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.
ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம். எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.
ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்,தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.
,‘இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை’ என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை.
காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரம் எந்நேரமும் பக்தர்கள் கோவில் களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எந்நேரமும் வெளிச்சம்! (காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம்)
இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக்கிடக்கிறது. இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம்.
காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். அஸி கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்!
அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.
ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி!
அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.
இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று ‘கங்கா லாப் பவன்’! இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது.
அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள்.
இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்’ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன்தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டட த்தை விலைக்கு வாங்கினார். முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார்.
ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழி யனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு.
இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலிவாங்கியிருக்கிறது. அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயே அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது, உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கியது, ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா...’ என்று விட்டுவிட்டது.
இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு விட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.
இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் அந்தப் பபணத்தை பபயன்படுத்துகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள் வார் என்ற நம்பிக்கைத்தான் அவர்களுக்கு!
காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக ‘அணையாத தீபம்’ எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள். தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப்படுகின்றனவாம். இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை. யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு சொல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.
விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு. தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.
அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்.
கங்கை நதி தனது கரைக் கரங்களால் காசி நகரை கிழக்கு- மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் ‘மணிகர்ணிகா கட்’ உள்ளது. இது தான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பதும் ஐதீகம். வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.
இயந்திரமயமான உலகில் அங்கேயும், அதிலும் சுறுசுறுப்பு, உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள். அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடு த்துச் செல்லப்படுகிறது.
அணையா தீப மாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல். அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி.
அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன் லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள். அரிச்சந்திரன் அங்கே வெட்டியான்.
அவன் தன் மனைவியையும், மகனையும் அடை யாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான். மரணத் தில் கூட மனசாட்சிக்கு பயப்படாமல் உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது.
இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த ‘அரிச்சந்திர கட்’ கங்கை ஓரத்தில் உடல்களுக்காக காத்திருக்கிறது. இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.
ஆனால் இறப்பு என்பது உண்மை’ என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள். ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி யுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்’ என்பது நம்பிக்கையாக்கப்பட்டிருக்கி றது.
காசியில் எல்லாமுமே நம்பிக்கைதான்! நம்பிக்கையின்றி வேறு எதுவும் இல்லை
On Friday, October 03, 2014 by Unknown in , ,    
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் வீரணன். இவரது மனைவி தேனம்மாள். இவர்களது மகள் விமலாதேவி (வயது21). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவருக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விமலாதேவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன்னை யாரும் கடத்த வில்லை என விமலாதேவி போலீசில் தெரிவித்தார்.
அதன்பின்னர் பெற்றோருடன் விமலாதேவி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் விமலாதேவி நேற்று முன்தினம் திடீரென இறந்தார். அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த பெற்றோர் உறவினர்கள் உதவியோடு உடலை எரித்துவிட்டனர்.
இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வம் போலீசில் புகார் செய்தார்.
தாசில்தார் கஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால்சாமி, துணை கண்காணிப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் விமலாதேவி உடல் எரிக்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினர். அவர் தூக்குப்போட்டுதான் தற்கொலை செய்தாரா? அல்லது கவுரவக்கொலை நடந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து விமலா தேவியின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முதல் கட்டமாக விமலாதேவியின் தந்தை வீரணன், தாய் தேனம்மாள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடை பெற்று வருகிறது.
On Friday, October 03, 2014 by Unknown in ,    
திருப்பரங்குன்றம், அக்.1:  அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலைபெற ஜெயலலிதா பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடும், அங்கப்பிரதட்சணமும் நடைபெற்றன.
பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.முனியாண்டி தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.தர்மராஜ், நகரச் செயலர்கள் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஹமிதாஅக்பர்அலி, நாகலெட்சுமி பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர்கள் இரா.சுப்பிரமணி, கீழக்குயில்குடி பாண்டி, வீரமணி, பசுமலை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், பேரவை முன்னாள் மாவட்டச் செயலர்கள் எஸ்.எஸ்.டி.மனோகரன், கோ.பாரி, தொழிற்சங்க செயலர்கள் பி.எம்.முருகன், குமரவேல், கருத்தப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் சுமதிமதி, ஊராட்சித்  தலைவர்கள் கருத்தக்கண்ணன், சிவகாமி முத்துராமன், கிளைச்செயலர் கே.மாயி, மின்வாரிய கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநகரில் உருவபொம்மை எரிப்பு: ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த திமுக பொதுச் செயலர் அன்பழகன், தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் உருவபொம்மை எரிப்பு திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் பகுதியில் நகர் செயலர் என்.எஸ்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் பாலமுருகன், பேரவைச் செயலர் சீனிவாசன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணி, மாணவரணி செயலர் சசிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.