Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை ரெயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணியை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.
இந்தியாவை சுத்தப்படுத்தும் வகையில் தலைநகர் டெல்லியில் ‘தூய்மையான இந்தியா–2014’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க.வினர் இந்தியா முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் முக்கிய ரெயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களில் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சென்னையில் ரெயில் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களிலும் ‘தூய்மையான இந்தியா’ திட்டம் ஒரேநேரத்தில் செயல்படுத்தப்பட்டது. ரெயில்வே அலுவலக சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. கழிப்பறைகள் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. ரெயில்வே தண்டவாளங்கள், காலனிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மேலும், பணி செய்யும் அலுவலக வளாகங்கள் அடிக்கடி தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோட்ட அதிகாரிகளிடம் எடுத்து கூறப்பட்டது.
இந்தநிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சென்னை கோட்டை ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மின்சார ரெயிலில் ஏறி கோட்டை–தாம்பரம் மற்றும் தாம்பரம்–சென்னை எழும்பூர் மார்க்கம் வரை ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். மின்சார ரெயிலில் வந்த பயணிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் பயணிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களிடம் ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்த முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் ராகேஷ் மிஸ்ரா தூய்மைப்படுத்தும் முகாமை ஏற்படுத்தி, அவரே ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.
அதேபோல் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே மகளிர் நல மேம்பாட்டு ஆணைய தலைவர் மஞ்சுளா மிஷ்ரா தலைமையில் நடந்த தூய்மை முகாமிலும் அவர் கலந்துகொண்டார்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், மூர்மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மண்டல மேலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தில் ஈடுபட்டனர். மனித சங்கிலி, பேரணி, கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும் பொதுமக்கள்–பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
‘தூய்மையான இந்தியா’ திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ரெயில் நிலையத்துக்கு வரும் குழந்தைகளை கவர்வதற்காகவும், ரெயில்வே ஊழியர்கள் புகழ்பெற்ற ‘கார்ட்டூன்’ கதாபாத்திரங்களைப் போல உடையணிந்து இருந்தனர். தெற்கு ரெயில்வே முழுவதும் நடந்த சுத்தப்படுத்தும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி–கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தாம்பரத்தில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் நடந்த தூய்மையான இந்தியா விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் மண்டல முதன்மை ஆணையாளர் மதியழகன் தொடங்கி வைத்தார்.
இதில் தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஏந்திய பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சென்றனர். இதில், ஆணையாளர்கள் முருகவேல், விஸ்வநாதன், பாலசுப்பிரமணியன், பிஜயந்த் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை மெரினாவில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). கார் டிரைவரான இவர் கடந்த புதன்கிழமை அன்று காலையில், மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரில் கடற்கரை மணலில் பிணமாக கிடந்தார். கத்தியால் குத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
கார்த்திக்கின் உடலை போலீசார் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்
இந்த நிலையில் டிரைவர் கார்த்திக் எப்படி கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்று துப்புதுலங்கி விட்டதாக நேற்று இரவு பரபரப்பு தகவல்கள் வெளியானது. ஆனால் விசாரணை முடிவடையாததால், போலீசார் தகவல்களை வெளியிட மறுத்தனர்.
கொலை செய்யப்பட்ட டிரைவர் கார்த்திக்கின் மனைவி மற்றும் 4 பேரை போலீசார் நேற்று இரவு பிடித்து வந்தனர். மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கார்த்திக் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு போனார். அண்மையில் தான் விடுதலையாகி வந்தார். விடுதலையாகி வந்தவுடன் அவரை தீர்த்துக்கட்டி விட்டனர். அவரது மனைவியுடன் நல்லபடியான இல்லற வாழ்க்கையில் அவர் ஈடுபடவில்லை என்று தெரிகிறது.
அவர்கள் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இல்லற வாழ்க்கையில் வீசிய புயல்தான், கார்த்திக் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு தொழில் பின்னணியில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற இன்னொரு கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக சென்னையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாக்கள் களையிழந்தன. இதனால் கோயம்பேட்டில் பொரி மற்றும் பூசணிக்காய் போன்ற பொருட்கள் தேக்கம் அடைந்தன.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர், பெங்களூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக அரசு அலுவலகங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுதபூஜை விழா, இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறவில்லை. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் ஆயுத பூஜை களை இழந்தத
இதேபோன்று, ஆயுதபூஜை விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடும் ஆட்டோ நிறுத்த சங்கங்களும் ஆயுதபூஜையை புறக்கணித்தன.
இதனால், பூஜை பொருட்களான அவல், பொரி, கடலை மற்றும் திருஷ்டி பூசணிக்காய் போன்றவைகளின் விற்பனை மந்தமானது. கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த இதுபோன்ற பொருட்கள் தேக்கம் அடைந்தன.
பொரி-கடலை வியாபாரியான தினேஷ்குமார்-காளீஸ்வரி தம்பதியினர் கூறும்போது, “வழக்கமாக ஆண்டுதோறும் 350 முதல் 400 மூட்டை பொரி விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு 150 மூட்டை பொரி மட்டுமே விற்பனையாகி உள்ளது” என்றனர்.
பூசணிக்காய் வியாபாரி ஜெயந்தி கூறும்போது, “வழக்கமாக 1 டன் பூசணிக்காய் விற்பனை ஆகும். கடந்த ஆண்டு ஒரு பூசணிக்காய் 80 முதல் 120 ரூபாய் வரை விற்றபோதும் அனைத்து காய்களும் விற்றுத்தீர்ந்தன. ஆனால் இந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக போராட்டங்கள் நடைபெறுவதால் ஆயுதபூஜை சிறப்பாக இல்லை. இதனால் ஒரு பூசணிக்காய் 30 முதல் 50 ரூபாய் வரை என விலை குறைவாக இருந்தாலும் 50 சதவீதம் கூட விற்பனை ஆகவில்லை” என்றார்.
பழ வியாபாரி பேபி கூறும்போது, “கடந்த ஆண்டு அதிகமான விலை என்றாலும் அனைத்து பழங்களும் விற்றுவிட்டதால் நல்ல லாபம் கிடைத்தது. இந்த ஆண்டு, அதிக லாபமின்றி விற்றபோதும் பழங்கள் விற்பனையாகவில்லை. ஒரு கிலோ ஆப்பிள் 60 முதல் 100 ரூபாய்க்கும், சாத்துக்குடி 50 ரூபாய்க்கும், கொய்யாப்பழம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடவில்லை என்பதால் பழங்கள் விற்பனை மந்தமாக உள்ளது” என்றார்.

மழை இல்லாததால் பூக்கள் வரத்து வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்த பூக்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன என்று பூ வியாபாரிகள் சங்க தலைவர் எம்.டி.அருள் விசுவாசம் கூறினார்.

Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
பெங்களூரு: கர்நாடகா ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரத்னமாலா, மனுவிற்கு பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இந்த மனு மீதான விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையின் பட்டியலை கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் அனைத்தும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
31 அமைச்சர்கள்
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் பதவியை இழந்ததும், பழைய அமைச்சரவை கலைந்தது. தற்போது புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுள்ளார். அவர் கடந்த அமைச்சரவையில் இருந்த போது நிதி உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தார்.
அவற்றோடு, ஜெயலலிதா கவனித்து வந்த துறைகளும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது முதல்-அமைச்சரோடு சேர்த்து 31 அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். புதிய அமைச்சரவைப் பட்டியலையும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளையும் கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஓ.பன்னீர் செல்வம்
1) ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் - பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை. நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவு சீட்டுகள், பொதுப்பணிகள், சிறு பாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள்.
2) நத்தம் ஆர் .விஸ்வநாதன் மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு(மொலாசஸ்).
3) ஆர்.வைத்திலிங்கம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் - வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்.
எடப்பாடி பழனிச்சாமி
4) எடப்பாடி கே.பழனிச்சாமி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்.
5) பி.மோகன் ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சு காகித கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.
6) பி.வளர்மதி சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், சத்துணவு அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இரவலர் காப்பு இல்லம், மாற்றுத் திறனாளிகள் நலன் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவு.
7) பி.பழனியப்பன் உயர் கல்வித் துறை அமைச்சர் - தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில் நுட்பவியல்.
8) செல்லூர் கே.ராஜு கூட்டுறவுத் துறை அமைச்சர் - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்
செந்தில் பாலாஜி
9) ஆர்.காமராஜ் உணவுத் துறை அமைச்சர் - உணவு நுகர்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுப்பாடு
10) பி.தங்கமணி தொழில் துறை அமைச்சர் - தொழில்கள், ஸ்டீல் கட்டுப்பாடு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள், சிறப்பு முயற்சிகள்.
11) வி.செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சர் - போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து, இயக்கூர்திச் சட்டம்.
12) எம்.சி.சம்பத் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் - வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம்.
13) அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வேளாண்மைத் துறை அமைச்சர் - வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.
கோகுல இந்திரா
14) எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு.
15) டி.கே.எம். சின்னய்யா கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் - கால்நடை பராமரிப்பு.
 எஸ்.கோகுல இந்திரா கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் - கைத்தறி மற்றும் துணிநூல்.
17) எஸ்.சுந்தரராஜ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் - விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன்.
18) பி.செந்தூர் பாண்டியன் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்.
சண்முகநாதன்
19) எஸ்.பி.சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சர் - சுற்றுலா, சுற்றுலா வளர்ச்சிக்கழகம்.
20) என்.சுப்ரமணியன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் - ஆதி திராவிடர் நலன், மலை வாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்.
21) கே.ஏ.ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சர் மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம்.
22) முக்கூர் என்.சுப்ரமணியன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - தகவல் தொழில் நுட்பம்
23) ஆர்.பி உதயகுமார் வருவாய்த் துறை அமைச்சர் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியாளர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம், உள்ளிட்ட கடன் நிவாரணம் மற்றும் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
ராஜேந்திர பாலாஜி
24) கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம், சிறப்புப் பணிகள் செயலாக்கம், தேர்தல் அறிக்கை அமலாக்கம்.
25) பி.வி.ரமணா பால்வளத் துறை அமைச்சர் - பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி
26) கே.சி.வீரமணி பள்ளிக் கல்வி துறை அமைச்சர் - பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு.
27) எம்.எஸ்.எம்.ஆனந்தன் வனத்துறை அமைச்சர் - வனம்.
28) தோப்பு என்.டி.வெங்கடாசலம் சுற்றுச்சுழல் துறை அமைச்சர் - சுற்றுச் சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு.
29) டி.பி.பூனாச்சி கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் - கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்.
30) எஸ்.அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றபட்டவர்கள் மற்றும் வக்ப் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன்

31) டாக்டர்.சி.விஜய பாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர்  சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து  குவிப்பு வழக்கில் கோர்ட்டு 4 வருட ஜெயில் தண்டனை விதித்தது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போராட்டங்களும், ஆர்ப் பாட்டங்களும் நடந்து வரு கின்றன.
தமிழ்  திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்   வகையில் இன்று ஒரு நாள் மவுன உண்ணாவிரத போராட்டம் நடத்த்போவதாக அறிவித்தனர்.அதன் படி இன்று  சென்னை சேப்பாக்கம்  விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரதம் தொடங்கியது.
அங்கு திரையுலக முக்கிய பிரமுகர்கள் அமர மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தர்ம தேவ தைக்கு அநீதியா? என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட் டப்பட்டு இருந்தது. எதிரில் பெரிய உண்ணாவிரத பந்தலும் போடப்பட்டு இருந் தது.
உண்ணாவிரதத்துக்கு காலை 8 மணிக்கே திரை யுலகினர் வரத் தொடங்கி னார்கள். தமிழ் திரைப்பட தயா ரிப்பாளர் சங்க செயலா ளர் டி.சிவா பே, ஜெயலலிதாவுக்கு வழங்கப் பட்ட தீர்ப்பு குறித்து எங்கள்  உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம். ஜெய லலிதா எல்லா சோதனை களையும் வென்று வெளியே வருவார். தர்மம் வெற்றி பெறும். மீண்டும் அம்மா அரியணை ஏறுவார். இது ஒட்ட மொத்த தமிழ் திரையுலகினரின் பிரார்த்தனை. அது விரைவில் நிறைவேறும் என்றார். பின்னர் உண்ணாவிரதம் துவங்கியது.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செய லாளர் ராதாரவி, நடிகர் கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த், ராமராஜன், சக்தி, எம்.எஸ். பாஸ்கர், செந்தில், டெல்லி கணேஷ், மன்சூர்அலிகான், சரவணன், குண்டு கல்யா ணம், மனோபாலா, நடிகை கள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, குயிலி, பாத்திமா பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, மனோஜ்குமார், ஆர். கே.செல்வமணி, ஆதி ராம், தயாரிப்பாளர் கள் கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், காஜாமைதீன், இப் ராகிம்ராவுத்தர், ராதாகிருஷ் ணன், கில்டு ஜாகுவார் தங் கம், சவுந்தர், சுப்பை, விநியோகஸ்தர் சங்கம் அருள்பதி, தென்னிந்திய திரைப் பட தொழிலாளர் சம்மே ளனம் (ªபப்சி) செய லாளர் சிவா, விநியோ கஸ்தர் நாகராஜன் ராஜா உள்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் திரைப்பட துறை யின் பல்வேறு  சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெகளும் உண்ணாவிரதத்தில் பங் கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது.
உண்ணாவிரதம் நடந்த பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. ண்ணாவிரதத்தை தொடர்ந்து சென்னையிலும் சென்னை புறநகர் பகுதியி லும் சினிமா படப்பிடிப்பு கள் இன்று ரத்து செய்யப் பட்டன.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று காலை தியேட்டர் அதி பர்கள் உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கினார்கள்.. தியேட்டர் உரிமையாளர்கள் ஹரி கோவிந்த், லேனாசுப்பு, கஜேந்திரன், மனோகரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழு வதும் இன்று சினிமா காட்சி கள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தது.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
சென்னை, 
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோனாஷா டி சன்னா (வயது 19) சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்து மிகுந்த வேதனை அடைந்து, தனது வீட்டு சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்போல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நாகலட்சுமி (17) தனது உடலில் தானே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஜெயலலிதா மீதான தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பியதுடன், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தின் மாணவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே வகுப்புகளுக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் ஆய்வு மையத்தின் வெளியே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது ஆராய்ச்சி மையத்தின் தரத்தை உயர்த்தியதில் முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் கைது செய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’, என்றனர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக நேற்று மதியம் 12 மணி அளவில் கல்லூரி நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகள் திரண்டனர். அங்கு ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.
கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி, கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, பாடப்புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கிய ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 1,800 பேரும், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் 3,925 பேரும், அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 1,490 பேரும் வகுப்புகளை புறக்கணித்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை அடுத்த மேலூரில் உள்ள அரசினர் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் முழு உருவ வெண்கல சிலையும், மறைந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மார்பளவு வெண்கல சிலையும் திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி, விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது, அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தீர்ப்பாக தான் பார்க்க வேண்டும். அதில் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட வேண்டியது காவல்துறையினர், அரசு அதிகாரிகளின் முக்கிய கடமையாகும்.

வன்முறையில் ஈடுபடும் வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி சாதாரண மக்கள் எந்தவித அச்சமின்றி இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:–
வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்திருக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கையும், அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசு – தனியார் சொத்துக்கள் பெர்ருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பூந்தமல்லியிலிருந்து வந்த அரசுப் பேரூந்தை காஞ்சிபுரத்தில் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க.வினர் அப்பேரூந்தை தீயிட்டு எரித்தனர். இதே நிகழ்வில் ஒரு பேரூந்தும், சில இரு சக்கர ஊர்திகளும் எரிக்கப்பட்டன. விளாத்திக்குளத்தில் மற்றொரு பேரூந்து தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறையில் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் நேற்று இன்னொரு பேரூந்து தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர 50க்கும் மேற்பட்ட அரசு பேரூந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடைகள் மீது அ.தி.மு.க.வினர் கல்வீசித் தாக்கியதில் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க.வின் காட்டு மிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களும், அலுவலகங்களும் தப்பவில்லை. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகி விட்ட நிலையில் இன்னும் வன்முறை தொடர்கிறது. அ.தி. மு.க.வினரின் வன்முறையை காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆளுனரும், மத்திய அரசும் தலையிட்டு தமிழகத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
பொதுச் சொத்துக்களுக்கு அரசியல் கட்சிகள் சேதம் ஏற்படுத்தினால் அதை எவ்வாறு வசூலிப்பது என்பதற்கான வழிகாட்டுதல்கள் 1992ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டத்தில் தெளிவாக உள்ளன. இதற்காக கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான அமைப்பும் இப்போது செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இழப்பீட்டை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் தொடங்க வேண்டும்.
அ.தி.மு.க.வினரால் எரிக்கப்பட்ட எரிக்கப்பட்ட பேரூந்துகள், சேதப்படுத்தப்பட்ட பேரூந்துகள் ஆகியவற்றுக்கான இழப்பீடு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது. வன்முறையால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மதுக்கடைகள், திரையரங்குகள் ஆகியவை செயல்படவில்லை. தனியார் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஒரு நாளில் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தவிர, தனியார் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் அ.தி. மு.க.வினரின் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இன்று புதிதாக பதவியேற்கவிருக்கும் அரசுக்கு தமிழக ஆளுனர் ஆணையிட வேண்டும்.
1) அ.தி.மு.க.வினரின் வன்முறையால் அரசு மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டிருப்பதால் குறைந்தது ரூ.210 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டையும் துல்லியமாக கணக்கிட்டு அ.தி.மு.க. தலைமையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளையும், வணிகம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டையும் கணக்கிட்டு, அதற்குக் காரணமான அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் மீது வழக்குத் தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.
3) பேரூந்து எரிப்பு, உடைப்பு, கடைகள் சூறை உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
4) கடந்த ஆண்டில் ஜெயலலிதாவே கூறியவாறு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்ட அ.தி.மு.க.வை தடை செய்யவும் அரசு தயங்கக்கூடாது.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பது அ.தி.மு. க.வினரை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் இன்று கருப்பு சட்டை அணிந்தனர். 

நேற்று ஏராளமான பெண்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இன்று தென்சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., ஆயிரம்விளக்கு தொகுதி செயலாளர் டி.சிவராஜ், பகுதி செயலாளர்கள் ஏ.இ.வெங்கடேசன், பாபு, ஏழுமலை, மாவட்ட இளைஞ ரணி துணை தலைவர் என்.தயாளன், கவுன்சிலர்கள் நுங்கை மாறன், சின்னையன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். அதன்மூலம் மறுதீர்ப்பு பெற வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த தீர்ப்பு குறித்து புதிய கருத்து கூற விரும்பவில்லை. இந்த தண்டனை மூலம் அவர் அரசியலில் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தண்டனை மூலம் கர்நாடகா, தமிழக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது. ஜெயலலிதா மீது வழக்கு போட்டது கர்நாடக அரசோ, கர்நாடக மக்களோ அல்ல. சுப்பிரமணியசாமி.
தீர்ப்பு கூறியதுதான் கர்நாடக நீதிபதி. அ.தி.மு.க.வினர் தலைமை மீது கொண்ட ஈடுபாட்டால் தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். ஆனால் நீதிபதி தீர்ப்பை விமர்சிக்க கூடாது. புதியதாக பொறுப்பு ஏற்கும் முதல்–அமைச்சர் தமிழகத்தில் உள்ள வறட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் மார்ச் மாதம் 25 முதல் 29–ந்தேதி வரை நடக்கிறது.
வருகிற 6–ந்தேதி விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற இருந்த மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 16–ந்தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தூத்துக்குடியில் தீயனைப்பு நிலையம் அருகில் உள்ள காமராஜரின் மார்பளவு சிலையை நேற்று இரவு வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி காமராஜருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனை எங்களது பெருந்தலைவர் மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
காவல் துறையினர் இந்த கும்பலை உடனடியாக கண்டு பிடித்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்டுள்ள காமராஜரின் சிலையை அகற்றி விட்டு அதே இடத்தில் முழு அளவு வெண்கல சிலையை அரசு வைத்து தர வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் படி தலா 4 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டு, நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாலும், இப்படி தண்டனை பெற்றதால் அவர்கள் வகிக்கும் பதவிகள் உடனடியாக இழப்புக்கு உள்ளாகும். இது தண்டனைக் காலத்திற்கு பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்று உச்சநீதிமன்றம் 2013ல் வழங்கிய தீர்ப்பின் காரணமாக ஏற்பட்ட சட்டப்படியான விளைவு ஆகும்.
இதற்கு முன் நாடாளு மன்றத்தில் பதவிகளில் இருந்த நான்கு பேர்கள் லாலுபிரசாத் உட்பட இத்தீர்ப்பின் அடிப்படையில் பதவி இழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு முன்பு 2013க்கு முன்பு இருந்த நிலை வேறு. முதல் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி தண்டனை பெற்று உடனடி பதவி இழப்புக்கு ஆளாவது இதுவே இச்சட்டத்தின் கீழ் முதல் நிகழ்வு இந்திய அரசியலில்.
அ.தி.மு.க. போதிய பெரும்பான்மையும், கட்டுக் கோப்புடனும் உள்ள ஆளுங்கட்சியாக இருக்கிற காரணத்தாலும் அ.தி.மு.க.வின் ஆற்றல், அதிகாரம் மிக்க தலைவராக பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் ஜெயலலிதா இருக்கின்ற காரணத்தாலும் அவரது ஆணைப்படி நேற்று அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை சட்டமன்ற கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளனர். அவர் தலைமையில் புதிய அமைச்சரவை செயல்படும் என்பதற்கு தமிழக ஆளூநர் ரோசய்யாவை சந்தித்து, அவரும் சட்டப்படி அழைப்பு விடுத்து, இன்று அமைச்சர்கள் பதவியேற்று, அரசியல் சட்டப்படி கடமையாற்ற விருக்கின்றனர்.
அமைதியும், அடக்கமும் நிறைந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அவர் ஏற்கனவே ஒரு முறை இப்பதவியில் அமர்ந்தப்பட்டும் உள்ளார். அவரது தொடர் விசுவாசத்திற்கு அத்தலைமை தந்த அங்கீகாரப் பரிசு இது. ஜனநாயகத்தில் ஏதுவும் நிரந்தரமோ, மாறாததோ அல்ல.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீண்டும் இரண்டாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வர் ஆவது சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பெரிதும் வரவேற்கத்தக்கது. அவரது தலைமையில் அமைந்து புதிய அரசு அனைத்து மக்கள் நலத்திலும் அக்கறை காட்டி, எதிர்க்கட்சிகளையும் மதித்து தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி, நீதியான ஆட்சி என்ற பெயரை எடுத்து வரலாறு படைக்க வாழ்த்துகிறோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளன. 
புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன. வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் கை கோர்க்கலாம். புது கட்சிகளும் தலை தூக்கலாம் என்கின்றனர். அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்பதிலும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் அரசியலில் ஈடுபட இது தகுந்த நேரம் என்றும் எனவே கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் ஆந்திர பத்திரிகைகளும் இணைய தளங்களும் செய்திகள் வெயிட்ட வண்ணம் உள்ளன. 
ரஜினிக்கு ஏற்கனவே அரசியல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது. 1996–ல் திமு.க. தமிழ் மாநில கூட்டணியை உருவாக்கினார். அந்த அணி சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. 1998 தேர்தலிலும் அதே கூட்டணியை ஆதரித்தார். 
2004 பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க. வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது தனிக்கட்சி துவங்கி அரசியலில் குதிப்பார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இறங்கவில்லை. மாறாக பாரதீய ஜனதாவை ஆதரித்து ஓட்டு கேட்டார். அதன் பிறகு எல்லா தேர்தல்களிலும் நடுநிலை வகித்தார். எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை. 
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். இதையடுத்து பாரதீய ஜனதாவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் ரஜினி அமைதியாக இருந்து விட்டார். 

தற்போது அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்க்க மீண்டும் முயற்சிகள் டெல்லி தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்த்தால் தமிழகத்தில் கட்சியை வலுவாக்கிவிடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ரஜினி ஏற்பாரா என்பது உறுதியாக தெரிய வில்லை.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னை, செப். 29– 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல்–அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார். 
இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது. புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசரக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. 
இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார். 
அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார்.
இன்று மதியம் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல் – அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். 
அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

1. நத்தம் விசுவநாதன் 2. வைத்திலிங்கம் 3. எடப்பாடி பழனிச்சாமி 4. பி.மோகன் 5. பா.வளர்மதி 6. பி.பழனியப்பன் 7.செல்லூர் கே.ராஜு 8. ஆர்.காமராஜ் 9. பி.தங்கமணி 10. வி.செந்தில்பாலாஜி 15. கோகுலஇந்திரா 16. சுந்தர்ராஜ் 17. செந்தூர்பாண்டியன் 19. என்.சுப்பிரமணியன் 20.ஜெயபால் 21. முக்கூர் என்.சுப்பிரமணியன் 22. ஆர்.பி.உதயகுமார் 23. கே.டி.ராஜேந்திர பாலாஜி 24. பி.வி.ரமணா 25. கே.சி.வீரமணி 26. ஆனந்தன் 27. தோப்பு வெங்கடாசலம் 28. பூனாட்சி 29. அப்துல்ரகீம் 30. விஜயபாஸ்கர். 
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தலைமை செயலாளர் மோகன்வர்கீஸ், சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, கொறடா மனோகரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    

முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்றக் கட்சி தலைவாக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. 
பதவியேற்றதும் நேராக தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இன்று மாலை பெங்களூர் செல்லும் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னையில் நேற்று 2–வது நாளாக அ.தி.மு.க.வினர் கொடும்பாவி எரிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 23 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 இடங்களில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. வேளச்சேரி, சூளைமேடு, திருநின்றவூர் ஆகிய இடங்களில் 3 பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. திருநின்றவூர், பழவந்தாங்கல், தாம்பரம், திரிசூலம், ஆவடி ஆகிய இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும் நடந்தன.
அ.தி.மு.க.வினரின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அடையாறு கிரீன்வேய்ஸ் ரோட்டிலும் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த போராட்டங்களில் தமிழகம் முழுவதும் 35 வாகனங்கள் மட்டும் சேதம் அடைந்ததாகவும், ஆனால் 2001–ம் ஆண்டு, தி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களில் 580 வாகனங்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன என்றும் போலீசார் நேற்று வெளியிட்ட தகவல் ஒன்றில் தெரிவித்தனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னையில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் நேற்று வழக்கம்போல இயங்கியது.
தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆங்காங்கே சாலை மறியல், கல்வீச்சு, ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தேறியது.
இதனையடுத்து வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் பங்குகள், ‘டாஸ்மாக்’ கடைகள் என எல்லா கடைகளும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏற்படாத வகையிலும், முக்கியமான பொது இடங்களிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தலைநகர் சென்னையில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டன. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகளும் திறக்கப்பட்டிருந்தன. எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாஸா உள்ளிட்ட சில வணிக வளாகங்களில் சில கடைகள் மட்டுமே இயக்கப்பட்டன. பெரும்பாலான சினிமா அரங்குகளில் போலீசார் பாதுகாப்புடன் காட்சிகள் இயக்கப்பட்டன.
சென்னை தியாகராயநகர், அண்ணாநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்ற கடைகளிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. முக்கியமான பொழுதுபோக்கு பூங்காக்கள், கோவில் கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நேற்று அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.அம்மா உணவகத்தில் கூட்டம்
நகரின் பெரும்பாலான இடங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் நேற்று ‘அம்மா உணவகங்களில்’ மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வழக்கமான நேரத்தினை காட்டிலும் அம்மா உணவங்களில் வேகமாகவே உணவு வகைகள் விற்றுத்தீர்ந்தன.
மேலும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லம் உள்பட பல இடங்களிலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலுக்கு பிறகு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து அரசு பஸ்களும் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. காலை முதல் காத்துக்கிடந்த பயணிகள், பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியுடன் தங்கள் ஊர்களுக்கு பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

இதேபோல், சென்னை- பெங்களூருக்கு செல்லக்கூடிய தமிழக அரசு பஸ்கள் எந்த வித தடையும் இன்றி செல்ல தொடங்கின. அதே போல், கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. தனியார் ஆம்னி பஸ்கள் நேற்று பிற்பகலுக்கு பிறகு, பெங்களூருக்கு இயங்கத்தொடங்கியது.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெறவிருந்தது. இந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு மன்ற கூடத்தில் வைத்து மாமன்ற கூட்டம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


On Monday, September 29, 2014 by farook press in ,    
குஜராத் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட ‘நவஜீவன் எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் 6–வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. என்ஜின் முன்பகுதியை பார்த்த பயணிகளும் ரெயில்வே ஊழியர்களும் அலறினர்.
காரணம், என்ஜின் முன்பகுதியில் மூதாட்டி ஒருவரின் உடல் சிக்கிக் கொண்டிருந்தது. உடனடியாக அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில் மீஞ்சூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சாரதா (வயது 80) என்பவர் மீது ரெயில் மோதியதும், பலியான அவரது உடல் என்ஜினின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டதும், அந்த உடலுடனேயே அந்த ரெயில் சென்டிரல் ரெயில் நிலையம் வரை வந்ததும் தெரியவந்தது. விபத்து நடந்தது என்ஜின் டிரைவருக்கே தெரியாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.