Showing posts with label Tiruppur. Show all posts
Showing posts with label Tiruppur. Show all posts

Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in    





திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11–ந்தேதி பெண்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து திருப்பூருக்குட்பட்ட பொதுமக்கள் நேற்று திருப்பூர் புதிய பஸ்நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் பழனிகுமார் தலைமை தாங்கினார். சட்டபஞ்சாயத்து இயக்க மாநில நிர்வாகி அண்ணாதுரை, லஞ்ச ஒழிப்பு கூட்டமைப்பு நிறுவனர் நாஞ்சில் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில், தடியடி சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும். தடியடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுபானக்கடைகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நிலங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இதில் முன் வைக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
On Monday, April 24, 2017 by Unknown in    




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சிகள் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பினரும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும், வியாபார சங்கங்களும், அமைப்புகளும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு
இந்த நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் கூறியதாவது:–
உலகத்திற்கே உணவளிக்க கூடிய விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 41 நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் நாங்களும் பங்கேற்க உள்ளோம். அந்த வகையில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 169 திரையரங்குகளிலும் 2 காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி மற்றும் பகல் 2 மணி காட்சிகள் திரையிடப்பட மாட்டாது. மாலை காட்சியும், இரவு காட்சியும் வழக்கம் போல நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்

Sunday, April 23, 2017

On Sunday, April 23, 2017 by Unknown in    

On Sunday, April 23, 2017 by Unknown in    





திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பழனிக்குமார் (வயது 35). இவர், மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, காலுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாயை துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சுத்தம் செய்ததாக தெரிகிறது.
இதை கண்ட சமூக ஆர்வலர் பழனிக்குமார் திடீரென அந்த பகுதியில் உள்ள ஆழமான கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கினார். பின்னர் அவர் கழிவுநீர் கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்ட பகுதிக்கு உள்ளே சென்று போராட்டம் நடத்தினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் சுகாதார அதிகாரி முருகன் ஆகியோர் கழிவுநீர் கால்வாயின் உட்புறம் இருந்த பழனிக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதிகாரிகள் உறுதி
மேலும், உடனடியாக வெளியே வருமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாநகராட்சி உதவி கமி‌ஷனர் சம்பவ இடத்துக்கு வந்து துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் மட்டுமே வெளியே வருவேன் என்று பிடிவாதமாக உள்ளேயே இருந்தார். இதையடுத்து எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பழனிக்குமார் போராட்டத்தை கைவிட்டு வெளியே வந்தார்.
சுமார் 1 மணி நேரம் மேல்பகுதி மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்க்குள் தொடர்ந்து இருந்ததால் வெளியே வந்த பழனிக்குமார் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்பூரில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி சமூக ஆர்வலர் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
On Sunday, April 23, 2017 by Unknown in    





திருப்பூர் சாமுண்டிபுரம்–வளையங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 5–ந்தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரிகளும், டாஸ்மாக் கடை அதிகாரிகளும் 15 நாட்களில் கடையை மூடுவதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் நேற்று வரை கடை செயல்பட்டுவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த கடையை மூடக்கோரி நேற்று மீண்டும் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், டாஸ்மாக் அதிகாரிகளும் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதற்கிடையே திருப்பூரில் உள்ள அனைத்து காட்சிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட உதவி கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து கடையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த மாதம் 8–ந் முதல் டாஸ்மாக் கடை செயல்படாது என்று கூறினார். இந்த தகவலை அனைத்து கட்சி சார்பில் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் பொதுமக்களிடம் வந்து கூறினார்.
சாலை மறியல்
ஆனால்,எங்களுக்கு உடனடியாக கடையை மூடவேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் எனக்கூறி வளையங்காடு–சாமுண்டிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸ் துணை கமி‌ஷனர் திஷா மிட்டல் மற்றும் திருப்பூர் தெற்கு உதவி கமி‌ஷனர் மணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்
On Sunday, April 23, 2017 by Unknown in    




திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வறட்சி குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரி செந்தில்குமார், கலெக்டர் எஸ்.ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வறட்சி குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–
தமிழகத்தில் மழை அளவு குறைந்துள்ளதால் அனைத்து பகுதிகளிலும் வறட்சியான சூழல் நிலவி வருகிறது. இதை போக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீரை எந்தவித தங்குதடையுமின்றி கிடைக்க துரிதமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
லாரிகள் மூலம் தண்ணீர்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ள பகுதிகளை கண்டறிந்து தேவையான இடங்களில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கும், பழுதடைந்த ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்தவும், தேவையான இடங்களில் மின்மோட்டார்களை உடனடியாக பொருத்தி குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
கிராமப்புற பகுதிகளில் குடிநீர் ஆதாரம் இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் பொது நிதியை தயாராக வைத்திருக்க வேண்டும். குடிநீர் தேவை உள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். சில பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும், மின்மோட்டார் பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மின் இணைப்புகள் கொடுப்பதில் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும்.
வறட்சி நிவாரணம்
மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 78 ஆயிரத்து 244 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்படுகிறது. சிலருக்கு வறட்சி நிவாரணத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் முழுமையாக சேரவில்லை என்று புகார் வருகிறது. அந்தந்த தாசில்தார்கள், கிராம நிர்வாக அதிகாரி உதவியுடன் தங்கள் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் முழுமையாக கிடைத்துவிட்டதா? என்பதை உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.
மக்காச்சோள தீவனம்
கூட்டத்தில், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நந்தவனம்பாளையம் ஊராட்சி எஸ்.அம்மாபாளையத்தில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களுக்கு ‘ஹைட்ரோபோலிக்’ முறையில் கால்நடைகளுக்கு மக்காச்சோள தீவனங்கள் வளர்ப்பதற்கான உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.
கூட்டத்தில் பொள்ளாச்சி மகேந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), தனியரசு (காங்கேயம்), காளிமுத்து (தாராபுரம்), மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொறுப்பு) மைக்கேல், உதவி கலெக்டர்கள் ஷ்ரவன்குமார் (திருப்பூர்), கிரேஸ்பட்சுவா (தாராபுரம்), உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள், அனைத்து தாசில்தார்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மழைநீர் சேகரிப்பு திட்டம்
கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி செந்தில்குமார் பேசும்போது, ‘தண்ணீர் வற்றிய ஆழ்குழாய் கிணறுகளை மூடி போட்டு மூட வேண்டும். தண்ணீர் ஆதாரம் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் திட்டத்துடன் இணைக்க வேண்டும். அதன்மூலம் மழை பெய்யும்போது, கிடைக்கும் நீரை நிலத்தடியில் சேமிக்க வசதியாக இருக்கும். அதுபோல் பொது கிணறுகளையும் மழைநீர் சேகரிக்கும் திட்டத்துடன் இணைக்க வேண்டும். கோடை காலத்தில் கால்நடைகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளது. கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை தயாராக வைக்க வேண்டும். அதுபோல் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்’ என்றார்
On Sunday, April 23, 2017 by Unknown in    






மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் சரிவர பெய்யாததால் தற்போது இந்த பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டதால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகிறது. மேலும் விவசாயப்பணிகள் முற்றிலும் தடைப்பட்டு விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மடத்துக்குளத்தை அடுத்த கணியூரில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை நடத்தினர். கணியூர் பெரிய பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள், தெரு முனைகளில் நின்று பிரார்த்தனைப்பாடல்களை பாடிக்கொண்டு 200–க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் வறண்டு கிடக்கும் விவசாய நிலங்களில் அமர்ந்து சிறப்புத்தொழுகை, கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பிரார்த்தனைகளை ஏற்று தண்ணீரின்றி வாடும் பொதுமக்கள்,விலங்குகள் மற்றும் பயிர்களுக்காக கடவுள் மழையை பொழிந்து அருள்வார் என்று பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்
On Sunday, April 23, 2017 by Unknown in    




திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியையொட்டி கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக 600 ஏக்கர் பரப்பளவில் பயிரிடுவதற்காக தீவனச்சோளம் விதைகள் வழங்கப்பட்டு ஒரு ஏக்கருக்கு ரூ.940 மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அசோலா என்னும் தாவரத்தை அவரவர் வீட்டிலேயே சிறிய தண்ணீர் தொட்டிகளில் வளர்த்து அதன்மூலம் பசுந்தீவனம் மற்றும் அடர்தீவன தேவையை ஈடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘ஹைட்ரோபோலிக்’ என்ற பசுந்தீவனம் வளர்ப்பு முறையில் மக்காச்சோள விதைகளை முளைப்பாரி முறையில் வளர்த்து கால்நடைகளுக்கு அளிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட அனைத்து கால்நடை உதவி டாக்டர்கள், துணை இயக்குனர்கள், முதன்மை கால்நடை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
அசோலா விதை
இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் எஸ்.ஜெயந்தி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திலும் அசோலா விதை தயாராக வைக்க வேண்டும். கால்நடை மருந்தகத்துக்கு வரும் விவசாயிகளுக்கு தவறாமல் அசோலா விதை வழங்கி அதை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். பசுந்தீவன மக்காச்சோளம் வளர்ப்பு பற்றி அனைத்து நிலையங்களிலும் விவரங்கள் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் திருப்பூர் கால்நடை பாராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகன், திருப்பூர், தாராபுரம், உடுமலை கோட்ட துணை இயக்குனர்கள், முதன்மை கால்நடை டாக்டர்கள், கால்நடை உதவி டாக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Saturday, February 25, 2017

On Saturday, February 25, 2017 by Unknown in    

Wednesday, December 21, 2016

On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்
திருப்பூரில் இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, 3½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இரட்டை கொலைதிருப்பூர் முதலிபாளையம் சிட்கோ அருகே உள்ள மானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி வள்ளியம்மாள். பழனிச்சாமியின் தம்பி மனோகரனின் மகன்கள் மகேஸ்வரன், ரகுவரன்(வயது 39). பழனிச்சாமி குடும்பத்துக்கும், அவருடைய தம்பி மனோகரனின் குடும்பத்துக்கும் இடையே சொத்துத்தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 21–1–2010 அன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த மனோகரனின் மகன்கள் மகேஸ்வரன், ரகுவரன் ஆகியோர் தங்களது பெரியப்பா பழனிச்சாமி, பெரியம்மா வள்ளியம்மாள் ஆகியோரை தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், ரகுவரன் ஆகியோரை கைது செய்தனர்.
3½ ஆண்டுகளாக தலைமறைவுஇதுதொடர்பான வழக்கு திருப்பூர் 2–வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்த அண்ணன், தம்பி இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்களில் மகேஸ்வரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
ஜாமீனில் வந்த ரகுவரன் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் கடந்த 3½ ஆண்டாக தலைமறைவாக இருந்தார். இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரகுவரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதி ஜியாவுதீன் உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து ரகுவரனை தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் காசிப்பாளையம் பகுதியில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக ரகுவரன் நடந்து வந்து கொண்டிருந்தார். ரகுவரனை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்
வாங்கிய கடனுக்கு தங்களுடைய நிலத்தை அபகரித்து தனியார் நிதி நிறுவனத்தினர் மோசடி செய்து விட்டதாக புகார் தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சிதிருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக கலெக்டரிடம் தெரிவித்தனர். அவினாசி ஈட்டிவீரம்பாளையம் மொய்யாண்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி சண்முகசுப்பிரமணியம்(வயது 65), அவருடைய மனைவி ருக்குமணி(60), மகன் செந்தில்குமார்(45) ஆகியோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ருக்குமணியும், செந்தில்குமாரும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ருக்குமணி, சண்முகசுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் ருக்குமணி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நிலத்தை அடமானம் வைத்து கடன்மொய்யாண்டாம்பாளையத்தில் எனது கணவருக்கு 5.35 ஏக்கர் நிலம், அதில் ஒரு வீடும் உள்ளது. எனது மூத்த மகனான செந்தில்குமாருக்கு தொழில் செய்ய பணம் தேவைப்பட்டதால் வீட்டை அடமானம் வைத்து ரூ.20 லட்சம் கடன் பெற திட்டமிட்டோம். இதற்காக திருப்பூர் டூம்லைட் மைதானத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்கு கடந்த 18–3–2013 அன்று சென்று அங்கிருந்த பிரகாஷ், கோவிந்தராஜ், தியாகராஜ் ஆகியோரை சந்தித்தோம்.
எங்களுடைய 35 சென்ட் அளவுள்ள இடத்தில் இருக்கும் வீட்டை அடமானமாக வைத்து கடன் தொகை கேட்டதற்கு அவர்கள் ரூ.13 லட்சம் மட்டுமே கடன் தருவதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து 20–6–2013 அன்று பத்திரத்தை அடமானமாக வைத்தோம். எங்களுடைய உண்மை பத்திரத்தை பெற்று ரூ.13 லட்சத்தை வட்டிக்கு கொடுத்தனர். எங்களுடைய உண்மை பத்திரம் 5.35 ஏக்கர் நிலத்தையும் சேர்ந்து இருந்தது. 3 ஆண்டுகளாக வட்டி சரியாக கட்டி வந்தோம். கடந்த 3 மாதங்களாக எங்களால் வட்டி கட்ட முடியவில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 2–ந் தேதி எங்களுடைய நிலத்தின் கிரைய நகலை பார்த்தபோது அது பிரகாஷ் என்பவர் பெயரில் கிரையம் செய்திருப்பதை அறிந்தோம். இது தொடர்பாக திருப்பூர் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தோம். அதன்பின்னர் கோவிந்தராஜ், பிரகாஷ் மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த கண்ணப்பன் உள்பட 200–க்கும் மேற்பட்டவர்கள் எங்கள் நிலத்துக்குள் வேலி போடுவதற்காக வந்தனர். அப்போது தடுக்கச்சென்ற எங்களை தாக்க முயன்றனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தோம். இந்த நிலையில் கடந்த 16–ந் தேதி எங்கள் வீட்டுக்கு செல்லும் பாதையை அடைத்து விட்டனர். எங்கள் நிலத்தை மோசடியாக அபகரிப்பு செய்த பிரகாஷ், கோவிந்தராஜ், தியாகராஜ் ஆகியோர் மீதும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
அவினாசி
அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் சாலைகள் பெயர்ந்து பொதுமக்களுக்கு பயன்பாடின்றி குண்டும் குழியுமாக உள்ளது. கருவலூர் இந்திராநகர், ஜோதிநகர், மற்றும் மூகாம்பிகை நகர் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் வேண்டும் என்பது உள்பட நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்கக்கோரியும், உடனே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 80 பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் கருவலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் வந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயராகவன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் அருண், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அருணாச்சலம், சற்குணம், தங்கவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனர்
On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்,
திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீசாருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
போக்குவரத்து நெரிசல்திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், திருப்பூர் மாநகர பகுதிகளில் சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகளுக்காக வருகிற நிதியாண்டில் நிதிஒதுக்கீடு கோரி அரசிற்கு முன்மொழிவுகள் அனுப்பப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகர ரிங் ரோட்டில் வளைவுகள் அதிகமாக உள்ளதால், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர சாலைகளில் தெர்மோ பிளாஸ்டிக் பெயிண்ட் மூலம் கோடுகள், மேலும், காலேஜ் ரோடு, கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் 15, வேலம்பாளையம் செல்லும் சாலையில் தடுப்பு சுவர்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாநகரம், பூக்கடை வீதி சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்திட திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்மேலும், திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள அவிநாசி சாலையில் வேகத்தடுப்பினை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வட்டங்களில் உள்ள ஊராட்சி சாலைகள் பிரதான சாலைகளை சந்திக்கும் இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் வாகனத்தின் வேகத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு வேகத்தடுப்பான்கள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.
காங்கேயம்–திருப்பூர் ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. உடுமலை மொடக்குப்பட்டி கிராமம், மொடக்குப்பட்டி பகுதியில் உள்ள மொக்குபாலத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், சாலை போக்குவரத்தை சீர் செய்யவும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக போலீஸ், போக்குவரத்து துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது
On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலமாக வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.
‘ஸ்வைப் மெஷின்’திருப்பூர் மாநகராட்சிக்கு சொத்துவரி, வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்தி வருகிறார்கள். பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மூலம் வரி செலுத்தலாம் என்று கடந்த 15–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.18½ கோடி வரி வசூலானது.
ஏ.டி.எம். எந்திரங்களில் நபர் ஒருவர் ரூ.2 ஆயிரத்தை மட்டுமே ஒருநாள் எடுக்க முடியும். அதுபோல் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இருப்பினும் மாநகராட்சிக்கு வரி வசூலை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ‘ஸ்வைப் மெஷின்’ வசதியை ஏற்படுத்தி உள்ளது.
வரிவசூல் மையங்கள்திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம், வேலம்பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையத்தில் உள்ள 2–வது மண்டல அலுவலகம், நெருப்செரிச்சல், நல்லூரில் உள்ள 3–வது மண்டல அலுவலகம், முத்தனம்பாளையம், மண்ணரை, ஆண்டிப்பாளையத்தில் உள்ள 4–வது மண்டல அலுவலகம், முருகம்பாளையம், வீரபாண்டி ஆகிய 11 இடங்களில் மாநகராட்சிக்கான வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த 11 மையங்களிலும் நேற்று முதல் ‘ஸ்வைப் மெஷின்’ வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுடைய டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலமாக ‘ஸ்வைப் மெஷினை’ பயன்படுத்தி தங்களுடைய வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ எந்திரத்தின் செயல்பாட்டை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் உதவி ஆணையாளர் (கணக்கு) சந்தானநாராயணன், உதவி திட்ட அமைப்பாளர் சவுதாமணி, வருவாய் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரி செலுத்த வேண்டும்இதுகுறித்து மாநகராட்சி தனி அதிகாரியான ஆணையாளர் அசோகன் கூறும்போது, ‘பொதுமக்கள் தங்களின் வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை பணபரிமாற்றம் இல்லாதவகையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி உரிய காலத்துக்குள் தங்களின் வரியை செலுத்த வேண்டும்’ என்றார்
On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்
திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவருடன் சுற்றிய மாணவிகளை பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மாணவிகள்திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வாலிபர் ஒருவருடன் இரு இளம்பெண்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்கள். மேலும் அந்த இளம்பெண்கள் தன்னுடைய சகோதரிகள் என்றும், தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் உடன் வந்த வாலிபர் தெரிவித்தார்.
ஆனால் அவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் இளம்பெண்களுடன் வந்த வாலிபரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளம்பெண்கள் திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவிகள் என்றும், அவர்கள் இந்த வாலிபருடன் இரவு நேரத்தில் வாலிபாளையம் பகுதியில் சுற்றியதும் தெரியவந்தது.
பெற்றோருடன் அனுப்பிய போலீசார்இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஆட்டோவில் ஏற்றிய போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்கும் படி கூட்டி சென்றனர். மாணவிகள் கூறிய முகவரிக்கு போலீசார் அவர்களை கூட்டி கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சென்ற பின்னரே மாணவிகள் கூறியது தவறான முகவரி என்று தெரியவந்தது. பின்னர் மாணவிகளிடம் இருந்து பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி அவர்களுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.
பின்னர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த மாணவிகளின் பெற்றோருடன் போலீசார் மாணவிகளை அனுப்பி வைத்தனர். வாலிபரையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இளம் வயதிலேயே பல மாணவிகள் பல்வேறு தவறான பாதைகளில் செல்வதால் பெற்றோர் கவனத்துடன் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்

Friday, December 16, 2016

On Friday, December 16, 2016 by Unknown in    
திருப்பூர்,
சாமளாபுரத்தில் 35 குடியிருப்புகளை காலி செய்ய நெடுஞ்சாலைத்துறை நோட்டீசு வழங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாதிருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட சாமளாபுரம் 1–வது வார்டு கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் பவுத்தன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
கருப்பராயன் கோவில் வீதியில் 1 ஏக்கர் 85 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 50 சென்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த 35 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். நாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்து முறையிட்டோம்.
காலி செய்ய நோட்டீசுபொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நாங்கள் குடியிருப்பதாகவும், அவர்கள் தடையின்மை சான்று கொடுத்ததும் பட்டா வழங்குவதாக தெரிவித்தார்கள். சாமளாபுரம் பேரூராட்சியிலும் எங்களுக்கு பட்டா வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றிக்கொடுத்தார்கள். ஆனால் இதுவரை பட்டா எங்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் இருந்து எங்களுடைய வீடுகளை காலி செய்யுமாறு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு நோட்டீசு கொடுத்தார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ள நிலையில், எங்களுடைய 35 வீடுகள் உள்பட 59 பேரின் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மற்றொரு அறிவிப்பு நோட்டீசும் கொடுத்துள்ளனர். இதில் இன்னும் 7 நாட்களில் வீடுகளை காலி செய்யுமாறு அறிவித்துள்ளனர். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லையென்றால் மாற்று இடம் வழங்கி உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கலெக்டரை சந்தித்தனர்இதைத்தொடர்ந்து கலெக்டர் எஸ்.ஜெயந்தியை சந்தித்து முறையிட்டனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் விவரம் கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்
On Friday, December 16, 2016 by Unknown in    
தாராபுரம்,
கோவை அருகே கார் விபத்தில் தம்பதி பலியான வழக்கில் அவரின் குடும்பத்திற்கு, இழப்பீடாக ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என தாராபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன மேலாளர் மனைவியுடன் பலிகோவை அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 48). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரமேஸ்வரி (43) இவரும் அதே நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஆனந்தி என்ற மகளும், ரஞ்சித்குமார் என்கிற மகனும் உள்ளனர்.
கடந்த 14.4.2014 அன்று கணவன்–மனைவி இருவரும் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமிகும்பிட காரில் சென்றனர். காரை முருகராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கோவை செட்டிபாளையம் சின்னக்களிமேடு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே பல்லடத்திலிருந்து செட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, முருகராஜ் ஓட்டி சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முருகராஜ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.1½ கோடி இழப்பீடுகார் விபத்தில் பலியான முருகராஜின் மகள் ஆனந்தியும், மகன் ரஞ்சித்குமாரும் சேர்ந்து, தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு, தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணப்பெருமாள், கார் விபத்தில் முருகராஜியின் குடும்பதிற்கு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 513–ம், அவரது மனைவி பரமேஸ்வரிக்கு ரூ. 34 லட்சத்து 33 ஆயிரத்து 848–ம் என ஆகமொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 இழப்பீடாக காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், இந்த விபத்து வழக்கு பதிவான நாளிலிருந்து, நிவாரணத் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டித் தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்
On Friday, December 16, 2016 by Unknown in    
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வக பரிசோதனையாளர்களை அவசியம் பணியமர்த்தியிருக்க வேண்டும் என்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள்உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் சார்பில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு பற்றிய ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கி பேசியதாவது:–
குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைக்கு அருகிலும், குடியிருப்பு பகுதிகளுடனும் நேரடி தொடர்பு இருக்கும் வகையிலும் அமைய கூடாது. குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைவாயில் தொற்று நீக்கம் செய்யும் வகையில் அமைக்கப்பட வேண்டும். குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தின் தரைத்தளம், மேற்கூரை மற்றும் சுவர்கள் நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும்.
ஆய்வுக்கூடம்தரை பகுதிகளை எளிதில் சுத்தம்செய்வதற்கு ஏற்ப கழிவுநீர் வாய்க்கால் இருக்க வேண்டும். ஜன்னல்களில் பூச்சிகள் நுழையாமல் இருக்க தடுப்பு வலைகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். போதுமான இடவசதியுடன் வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். குடிநீர் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் சாதனங்களும் மற்றும் கொள்கலன்களும் துருப்பிடிக்காமலும் தொற்று நீக்கம் செய்யும் வகையிலும் இருக்க வேண்டும்.
குடிநீர் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. பணியாளர்கள் பணியை தொடங்கும் முன்பு தலைக்கவசம், கையுறை மற்றும் மேலங்கி ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் குடிநீரை சேமித்து வைக்கவும், பொட்டலமிடவும், வினியோகம் செய்யவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி நுண்ணுயிரியல் மற்றும் ரசாயன பகுப்பாய்வுகளை செய்வதற்கேற்ப ஆய்வுக்கூடம் வளாகத்தின் உட்பகுதியில் இருக்க வேண்டும். ஆய்வக பரிசோதனையாளர்களை அவசியம் பணியில் அமர்த்தியிருக்க வேண்டும்.
உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்தயாரிக்கப்பட்ட குடிநீர் உரியமுறையில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு மூடி உறையைக்கொண்டு சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். வினியோகிக்கப்படும் குடிநீர் பாட்டில்களின் எண்ணிக்கை, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, பேட்ச் எண், ஆய்வக பரிசோதனை விவரம் மற்றும் வினியோகிக்கப்படும் நாள் முதலியவற்றை பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து குடிநீர் நிறுவனங்கள் உரிமத்தை உரிய காலத்துக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் எஸ்.ஜெயந்தி கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட நியமன அதிகாரி (உணவு பாதுகாப்புத்துறை) தமிழ்ச்செல்வன் மற்றும் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்
On Friday, December 16, 2016 by Unknown in    
அவினாசியில் கியாஸ் குடோன் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கியாஸ் குடோன் கட்ட எதிர்ப்பு
அவினாசி மடத்துப்பாளையம் சாலையில் தனியார் ஒருவர் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டி வருகிறார். குடியிருப்புகள் அதிகம் உள்ளதாலும், பள்ளி, கோவில் இருப்பதாலும் அந்த பகுதியில் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதன் பின்னரும் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட கலெக்டெர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுகொடுத்தனர். இதற்கிடையில் தலித் விடுதலை கட்சியின் சார்பில் மடத்துப்பாளையம் ரோட்டில் குடியிருப்புகள் உள்ள இடத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்ட அனுமதிக்கக்கூடாது என அவினாசி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
முற்றுகை
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று குடோன் கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. அப்போது அந்த பகுதி மக்கள் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இருப்பினம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் சென்றனர்.
அங்கு செயல் அலுவலர், மற்றும் அலுவலர்கள் யாரும் இல்லாததால் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் நீண்ட நேரமாகியும் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் விரக்தியுடன் பொதுமக்கள் கலைந்துசென்றனர். கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டும் பிரச்சினை தொடர் கதையாக உள்ளதால் அவினாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
On Friday, December 16, 2016 by Unknown in    
திருப்பூர்,
திருப்பூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் தொலைபேசி கம்பத்தில் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
ஆயுதப்படை போலீஸ்காரர்தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகராஜின் மகன் ஈஸ்வரன்(வயது 32). இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(27). இவர்களின் மகள் தேவதர்ஷினி(1).
ஈஸ்வரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்று இருந்தார். அங்கு பாதுகாப்பு பணி முடிந்து திருப்பூர் வந்த அவர், நேற்று முன்தினம் ஒரு நாள் விடுப்பு எடுத்துவிட்டு தனது சொந்த ஊரான தேனிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் நேற்று வேலைக்கு வருவதற்காக, தனது வீட்டில் இருந்து அதிகாலையில் மோட்டார்சைக்கிளில் திருப்பூருக்கு புறப்பட்டார்.
தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துகாலை 6.45 மணி அளவில் திருப்பூர்–தாராபுரம் ரோடு ஒத்தக்கடை பகுதியில் அவர் வந்து கொண்டிருந்த போது, எதிரே ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திக்கொண்டு வந்ததாக தெரிகிறது. அந்த வாகனம் தன் மீது மோதாமல் இருக்க ஈஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் இறக்கினார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர சிறிய பள்ளத்தில் இறங்கியதுடன் அங்கிருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன் தூக்கி வீசப்பட்டார். அத்துடன் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று விழுந்தது.
பரிதாப சாவுஇதனால் கீழே விழுந்த ஈஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக்கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் ஊரக போலீசார் விரைந்து வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அவருடைய உடல் நேற்று மதியம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்